தேசிய வாக்காளர் நாளை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் புதிதாக இடம்பெற்றுள்ள வாக்காளர்களுக்கு இம்மாதம் 25ஆம் நாளன்று வாக்காளர் அடையாள அட்டை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வழங்கப்படவுள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
தேசிய வாக்காளர் தினம் 25.1.2015 அன்று வாக்குச்சாவடி அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கொண்டாடப்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2015இன்போது மனு செய்து புதிதாக வாக்காளர்களாக சேர்க்கப்பட்டவர்களுக்கு 25.01.2015 அன்று அந்தந்த பகுதிக்கான வாக்குச்சாவடி அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் வைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர் வண்ணப் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்.
மேலும் வாக்காளர் பட்டியலில் இரண்டு இடங்களில் பெயர் பதிவு உள்ள வாக்காளர்கள் தங்களது முந்தைய முகவரியில் உள்ள பதிவை நீக்கம் செய்திட படிவம் 7இல் மனு செய்யலாம். மேற்படி மனுக்களை 25.01.2015 அன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம்.
தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு அனைத்து கல்லூரிகளிலும் வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பாக பேச்சுப் போட்டி நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி வாரியாக தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவியருக்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து 22.01.2015 அன்று காலை 11.00 மணிக்கு இறுதிப் போட்டி நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் மாணவ-மாணவியருக்கு 25.01.2015 அன்று மாவட்ட அளவில் நடைபெறும் தேசிய வாக்காளர் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் பரிசுகள் வழங்கப்படும்.
இவ்வாறு, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |