காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC) சார்பில், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு அகில இந்திய கால்பந்துப் போட்டி, கடந்த 49 ஆண்டுகளாக நடத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டு 50ஆம் ஆண்டாகும்.
50ஆவது ஆண்டு பொன்விழா கால்பந்துப் போட்டியை சிறப்புற நடத்தும் நோக்குடன், ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகக் குழுவின் முதற்கட்ட கலந்தாசோனைக் கூட்டம் இம்மாதம் 17ஆம் நாளன்று, ஐக்கிய விளையாட்டு சங்க பொன்விழா கட்டிடத்தில் நடைபெற்றது.
சங்கத் தலைவர் பீ.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை தலைமை தாங்கிய இக்கூட்டத்தில் விவாதித்து முன்மொழியப்பட்ட பொருட்களாவன:-
நாள் மற்றும் அணிகள்:
நமது ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் 50ஆவது ஆண்டு பொன்விழாவையொட்டிய அகில இந்திய கால்பந்து சுற்றுப் போட்டியை, வரும் மே மாதம் 03ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று துவக்கி, மே 24 ஞாயிற்றுக்கிழமை வரை நடத்தலாம்.
20 அணிகளை இப்போட்டியில் விளையாட அழைக்கலாம். இந்தியாவின் தலைசிறந்த 8 அணிகள், வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 12 அணிகள் என்ற அடிப்படையில் அணிகளை வரவழைக்கலாம்.
பரிசுத் தொகை நிர்ணயம்:
பொன்விழா கால்பந்து இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு ரூபாய் 1 லட்சம்
இரண்டாமிடம் பெறும் அணிக்கு ரூபாய் 60 ஆயிரம்
அரையிறுதிக்குத் தகுதி பெறும் இதர இரண்டணிகளுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம்
தொகைகளைப் பரிசாக வழங்கலாம்.
சிறப்பு விருந்தினர்கள்:
போட்டியின் துவக்க விழா, இறுதி போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு மதிப்பிற்குரிய இரண்டு சிறப்பு விருந்தினர்களை அழைக்கலாம்.
இளம் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்:
பொன்விழா ஆண்டையொட்டி, ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் இளம் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கலாம்.
சீசன் டிக்கட்:
பொன்விழா ஆண்டு போட்டிகளுக்கான சீசன் டிக்கட் தொகையை - சேர் ரூபாய் 700, கேலரி ரூபாய் 500 என நிர்ணயிக்கலாம்.
இவ்வாறு பொருட்கள் முன்மொழியப்பட்டன. இவ்வனைத்துப் பொருட்களும், எதிர்வரும் பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அதனடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தகவல்:
M.ஜஹாங்கீர்
ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் 49ஆம் ஆண்டு கால்பந்து இறுதிப் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஐக்கிய விளையாட்டு சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |