பயோ காஸ் திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்டு, குறைந்த விலைப்புள்ளி வழங்கிய நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு - அந்நிறுவனத்திற்கு தற்போது வேலை ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.
குறைந்த ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் நிறுவனம் தேர்வு செய்யப்படுவதற்கு முன்னர், திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டல
இயக்ககத்தின் மண்டல செயற் பொறியாளர் கனகராஜ், இத்திட்டத்திற்கு பொருத்தமான இடம் குறித்த 17-10-2014 தேதியிட்ட அறிக்கை ஒன்றினை,
சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் தலைமை பொறியாளருக்கு அனுப்பியிருந்தார்.
பொருத்தமான இடம் குறித்து தொழில்நுட்ப அறிக்கையினை கோரி, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், ஜனவரி 2014இல் - திருநெல்வேலி
மண்டல இயக்ககத்திற்கு - கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் - நகராட்சி நிர்வாகத்துறை மண்டல இயக்குனர் அவ்வேளையில், இடங்களை
பார்வையிட குழு ஒன்றையும் அனுப்பவில்லை; எந்த அறிக்கையும் தயாரிக்கவில்லை.
முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யத் அப்துர் ரஹ்மான் - அக்டோபர் 9, 2014 அன்று நகராட்சிக்கு சர்வே எண் 278 இடத்தினை
வழங்கிய பிறகு, அக்டோபர் 13, 2014 அன்று நகர்மன்றத் தலைவர், தனது முந்தைய தொழில் நுட்ப அறிக்கை கோரிக்கையை நினைவூட்டி -
சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஆணையருக்கு கடிதம் ஒன்றினை வழங்கியிருந்தார். அதன் தொடர்ச்சியாக - 4 நாட்களில்
தயாரிக்கப்பட்ட அறிக்கையினை, நகராட்சி நிர்வாகத்துறையின் திருநெல்வேலி மண்டல செயற் பொறியாளர் சமர்ப்பித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகத்துறையின் திருநெல்வேலி மண்டல செயற் பொறியாளர் கனகராஜ் தயாரித்த அறிக்கை
ஒரு அரசு திட்டத்திற்கு இடம் தேடப்படும் போது சில வழிமுறைகள் கையாளப்படும். அத்திட்டத்திற்கு எவ்வளவு இடம் தேவை என பார்க்கப்படும்;
அந்த இடம் அரசிடம் உள்ளதா என பார்க்கப்படும்; அந்த இடத்திற்கு அடிப்படை வசதிகள் (நீர், அணுகுசாலை, மின்சாரம் போன்ற) உள்ளதா என
பார்க்கப்படும்; இந்த திட்டத்தினால் பயன்பெற உள்ள மக்களுக்கு அருகாமையில் அந்த இடம் உள்ளதா என பார்க்கப்படும்; அந்த இடம் குறித்து
ஏதாவது நியாயமான ஆட்சபேனைக்கு வழிவுள்ளதா என பார்க்கப்படும்.
இவைகளும், இவைகளை தவிர வேறு தொடர்பான விஷயங்களும் பரிசீலனை செய்யப்படும். ஒரே தகுதியில் பல இடங்கள் இருந்தால், முதலில்
அரசு இடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்; அது தவிர எந்த இடத்தில் அமைந்தால், குறைவான - கூடுதல் செலவு இருக்கும் என்பதும் கருத்தில்
எடுக்கப்பட்டு, தகுதியான இடம் பரிந்துரை செய்யப்படும்.
நகராட்சிக்கு பாத்தியப்பட்ட அனைத்து இடங்களையும் - தொழில்நுட்ப காரணங்கள் எவற்றையும் கூறாமல் - நிராகரித்து விட்டு, அவர் அறிக்கை
தயாரிக்க ஒரு வாரத்திற்கு முன்னர் - முன்னாள் நகர்மன்றத் தலைவரால் வழங்கப்பட்ட இடமான - சர்வே எண் 278 இடத்தினை, பயோ காஸ் திட்டத்திற்கு திருநெல்வேலி மண்டல செயற் பொறியாளர் பரிந்துரைத்துள்ளார்.
ஒரு அரசு திட்டத்திற்கு, ஒரு இடத்தினை தேர்வு செய்வதற்கு முன்பு தேவையான மேலே குறிப்பிடப்பட்ட எந்த அம்சத்தையும் அவர் பரிசீலனை செய்யவில்லை. அரசு இடங்களை தவிர்த்து, தனியார் தற்போது வழங்கும் இடத்தில் இத்திட்டம் வந்தால், நகராட்சிக்கு - அரசு திட்ட நிதியை தவிர, கூடுதலாக எவ்வளவு தொகை செலவாகும் என்பதையும் அவர் கருத்தில் கொள்ளவில்லை.
மண்டல செயற் பொறியாளர் என்ற அடிப்படையில், குப்பைக்கொட்ட தேவையான 5 ஏக்கர் நிலத்தில், 4 ஏக்கர் நிலம் தான் தரப்பட்டுள்ள நிலையில், இந்த இடத்தில் பயோ காஸ் திட்டத்தினை பரிந்துரைப்பதன் மூலம் - குப்பைக்கொட்டுவதற்கான இடம் மேலும் சுருங்கும் என்பதனையும் அவர் கருத்தில் கொள்ளவில்லை.
முக்கியமாக - சர்வே எண் 278 க்கு அணுகு சாலை அமைக்க வழங்கப்பட்டுள்ள இடம், CRZ-1 எல்லைக்குள் வருவதால், சாலை அமைக்க ஒப்புதல் கிடைப்பது கடினம் என்பதனையும் - பயோ காஸ் திட்டத்திற்கு, சர்வே எண் 278 இடத்தினை பரிந்துரை செய்யும்போது, மண்டல செயற் பொறியாளர் கனகராஜ் கருத்தில் கொள்ளவில்லை.
|