தூத்துக்குடி மாவட்டத்தில் இம்மாதம் 18ஆம் நாளன்று நடைபெறும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமைப் பயன்படுத்தி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் புகட்டிட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
தமிழ் நாடு முழுவதும் இளம்பிள்ளை வாதநோய் தடுப்பு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கான முகாம்கள் வருகிற 18.01.2015 மற்றும் 22.02.2015 தேதிகளில் நடைபெறவுள்ளது.
பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட 1,50,000 (சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம்) குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக மாவட்டம் முழுவதும் 1150 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
துணை சுகாதார நிலையம்., ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, பள்ளிக்கூடம், சத்துணவு மையங்கள், சமுதாய நலக்கூடம் ஆகியவற்றில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் மையங்கள் அமைக்கப்படவுள்ளது.
இந்த முகாமானது பல்வேறு துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படவுள்ளது. இந்த முகாமில் சுகாதாரத் துறை பணியாளர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள், சமூக நலத்துறை, சத்துணவு பணியாளர்கள், வருவாய்துறை, கல்வித்துறை, ரோட்டரி, லயன்ஸ் கிளப், தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள், சுய உதவிக் குழுக்கள் ஆகியோர்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட உள்ளது.
பொது மக்கள் கூடும் இடமாகிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், திருச்செந்தூர் கோவில் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்படவுள்ளது.
இதற்கு முன் எத்தனை முறை கொடுத்திருந்தாலும் 18.01.2015 மற்றும் 22.02.2015 ஆகிய நாட்களில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும்.
சிறு வியாதிகளான காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு இருந்தாலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கலாம்.
எக்காரணம் கொண்டும் சொட்டு மருந்து கொடுக்காமல் இருக்கக்கூடாது.
போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் போலியோ கிருமிகள் பரவுவதை தடுத்து போலியோ நோய் இல்லை என்ற நிலையை இந்தியாவில் தொடர்ந்து உறுதிப்படுத்தலாம்.
போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக செயல்பட அனைத்துத்துறை அலுவலர்களும் சுகாதார துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்தாண்டு போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெற்ற தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டு, கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 00:20 / 17.01.2015] |