நகரில் உருவாகும் குப்பைகளை கொட்ட முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யத் அப்துர் ரஹ்மான் - 4 ஏக்கர் நிலமும், பொதுப் பாதைக்கு என 1.5 ஏக்கர் நிலமும் - இரு வெவ்வேறு பத்திரங்கள் மூலம், கடந்த அக்டோபர் மாதம் நகராட்சிக்கு வழங்கினார்.
4 ஏக்கர் சம்பந்தப்பட்ட பத்திரத்தின் விபரப்படி, குப்பைக்கொட்ட வழங்கப்பட்ட இடம் CRZ பகுதிக்கு அப்பாற்பட்டு இருக்கும் - என மேலோட்டமான பார்வை தெரிவிக்கிறது. இருப்பினும், சாலைக்கு என முன்னாள் நகர்மன்றத் தலைவர் வழங்கிய 1.5 ஏக்கர் நிலத்தின் அநேக பகுதிகள், CRZ 1
எல்லைக்குள் அமைந்துள்ளது என தெரிகிறது.
குப்பைகள் சம்பந்தப்பட்ட பத்திரம், வழங்கப்பட்ட இடத்தின் விபரத்தை கீழ்க்காணுமாறு தெரிவிக்கிறது:
கிழ மேலாக - வடக்கிலும், தெற்கிலும் 138 மீட்டர் இடமும், தென் வடலாக மேற்கில் 125 மீட்டர் இடமும், கிழக்கில் 110 மீட்டர் இடமும் -
ஆக மொத்தம் 4 ஏக்கர் நிலம் என - நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் - இப்பகுதிக்கான சாலைகள், இவ்விடத்திற்கு வடக்கு பகுதியிலும், கிழக்கு பகுதியிலும் வழங்கப்பட்டுள்ளது.
சாலைகள் சம்பந்தப்பட்ட பத்திரப்படி, கிழமேலாக 466 மீட்டர் (அகலம் 10 மீட்டர்), தென் வடலாக 140 மீட்டர் (அகலம் 10 மீட்டர்) அளவில் - ஆக 1.5 ஏக்கர் நிலம் - என நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
நகராட்சிக்கு என குப்பைக்கொட்ட வழங்கப்பட்டுள்ள இடத்தின் வடப்பகுதியின் கிழமேல் நீளம் - 138 மீட்டர் என்றாலும், அதனை ஒட்டிய சாலை - அவ்விடத்தையும் தாண்டி, கிழக்கு திசையில் கூடுதலாக 328 மீட்டர் அளவு நீட்டித்து வழங்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலும், CRZ 1 பகுதிக்குள் வருவதாக தெரிகிறது. மேலும் - அச்சாலை முடிந்தவுடன், தென் வடலாக வழங்கப்பட்டுள்ள 140 மீட்டர் சாலையும், CRZ 1 பகுதிக்குள் வருகிறது
என தெரிகிறது. CRZ 1 பகுதிகளில் - புதிய சாலைகள் அமைக்க விதிமுறைகள் அனுமதிக்காது.
CRZ இடத்திற்கு அப்பாற்பட்டு, முன்னாள் நகர்மன்றத் தலைவரால் - சாலைகளுக்கான இடம் வழங்கியிருக்க முடியாதா என்ற கேள்வி இங்கு எழுகிறது.
சர்வே எண் 278இல் குப்பைகள் கொட்டுவதற்கு, முன்னாள் நகர்மன்றத் தலைவர் வழங்கியுள்ள இடம்: ஒரு
விரிவான பார்வை! என்ற தலைப்பிலான செய்தியில் கண்டது போல், சர்வே என் 278 இன் பெருவாரியான இடங்கள் - CRZ 1 எல்லைக்குள் அமைந்துள்ளன. அதனால் - பயன்பாட்டிற்கு உள்ள நிலம் என்பது மிகவும் குறைவே.
சாலைக்கான பத்திரத்தில் - கிழமேல் திசையிலான சாலையின் நீளத்தை, 138 மீட்டர் அளவிற்கு குறைத்து (குப்பை கொட்ட வழங்கப்பட்ட இடத்தின் வட பகுதி நீளம் 138 மீட்டர் ஆகும்), அங்கிருந்து தென் வடல் சாலை 110 மீட்டர் அளவிற்கு வழங்கினாலும், அதற்கு தொடர்ச்சியாக - கிழக்குத் திசையில் (கிழ மேல்) வழங்க வேண்டிய சாலையின் பெரும்பகுதி - CRZ 1 பகுதிக்குள்ளேயே அமையும்.
எனவே - குப்பை கொட்டுவதற்கான இடம், CRZ இடத்திற்கு அப்பாற்பட்டு இருந்தாலும், அதற்காக வழங்கப்பட்டுள்ள 606 மீட்டர் நீளமான அணுகுசாலையின் பெரும்பகுதி - CRZ 1 எல்லைக்குள் அமைந்துள்ளதாக தெரிகிறது.
இது இவ்வாறிருக்க - டிசம்பர் 2014 நடந்த கூட்டத்தில் - காயல்பட்டினம் நகர்மன்ற ஆணையர், சர்வே எண் 278 நிலத்தில் 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், சாலை அமைக்க தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்தார். BUFFER ZONE குறித்து முடிவுகள் எடுக்கப்பட்ட பின் சாலைகள் அமைக்கலாம் என்று கூறி, நகர்மன்றத் தலைவர் - கூட்டப் பொருளை இணைக்கவில்லை. CRZ விதிமுறைகள் அனுமதிக்காத பகுதியில், எந்த அடிப்படையில் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ், சாலை அமைக்க முற்பட்டார் என்று தெரியவில்லை. |