தூத்துக்குடி முத்து நகர் பூங்காவில், இம்மாதம் 16, 17, 18 நாட்களில் (வெள்ளி, சனி, ஞாயிறு) பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.
கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறும் இவ்விழாவில் அனைவரும் கலந்துகொள்ளுமாறும் - பொதுமக்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். இன்று காலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அவர் கூறியதாவது:-
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ், பாரம்பரிய உணவு திருவிழா தூத்துக்குடி முத்துநகர் பூங்காவில் 16.01.2015 முதல் 18.01.2015 வரை மூன்று நாட்களுக்கு நடத்திடவும், தூத்துக்குடி மாவட்டத்தில் கிடைக்கும் உள்ளுர் பொருட்களை கொண்டு குறைந்த விலையில் ஏழை-எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் அன்றாட உணவில் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரமான முறையில் தயாரித்து உண்பது தொடர்பாக செயல்முறை விளக்கம் அளித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் விழா நடைபெற உள்ளது.
இப்பாரம்பரிய உணவுத் திருவிழாவில் 26 அரங்குகள் அமைக்கப்பட்டு 4 அரங்குகளில் குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் மூலம் பாரம்பரிய உணவுகளும், 7 அரங்குகளில் சத்துணவுத் திட்டம், சித்தா மருத்துவம், ஆவின், உணவு பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை, மகளிர் திட்டம் / புதுவாழ்வு, மீன்வளத்துறை அரசு நலத் துறைகள் மூலம் அந்தந்த துறைகளில் பொதுமக்களுக்கு சுகாதாரம் மற்றும் நோயற்ற வாழ்விற்கு வழிவகுக்கும் முறைகளை செய்முறை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக அந்தந்த துறை சார்ந்த பணி விளக்கங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
6 அரங்குகளில் பானு பிந்தாவன், GRT, DSF, சத்யா, சரவணாஸ், கேப்ஸி (CAPSI) ரெஸ்டாரண்ட் ஆகிய முதல்நிலை ஓட்டல் உரிமையாளர்களால் குறைந்த விலையில் உணவு பொருட்கள் தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பயனடையும் வகையில் பாரம்பரிய உணவுத் திருவிழாவில் அரங்களில் வைக்கப்படவுள்ளன.
எஞ்சிய 9 அரங்குகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரபலமாக மக்கள் பயன்படுத்தி வரும் உடன்குடி பனங்கற்கண்டு மிக்ஸ், கோவில்பட்டி கடலை மிட்டாய், கீழ ஈரால் சீனிவாசா மிட்டாய், காரச் சேவு மற்றும் அது தொடர்பான பலகாரங்கள், முதலூர் மஸ்கட் அல்வா, கடம்பூர் போலி, காயல்பட்டினம் பிரியாணி, தூத்துக்குடி அபி மக்ரூன் மற்றும் மீன் உணவுகள் ஆகியன வைக்கப்படவுள்ளன.
தமிழகத்தை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாநிலமாக மாற்றுவதில் முக்கிய பங்காக பாரம்பரிய உணவுத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இன்றைய நாட்களில் பாரம்பரிய உணவுகள் பயன்படுத்துவது மிகவும் நலிவடைந்துள்ளது. அதனால் தூத்துக்குடி மாவட்ட மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்கவும், நோயற்ற வாழ்வு வாழவும், உணவே மருந்து என்ற நோக்கத்தில் இந்த பாரம்பரிய உணவு திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.
பாரம்பரிய உணவுத் திருவிழாவில் இடம்பெறும் கலை நிகழ்ச்சிகள் கால அட்டவணை:-
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |