இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் ரபீஉல் அவ்வல் முதல் நாள் முதல் 12ஆம் நாள் வரை, காயல்பட்டினத்தின் பெரும்பாலான பள்ளிகளில் மவ்லித் மஜ்லிஸும், சில பள்ளிகளில் கூடுதலாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகளும், மத்ரஸாக்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் ஸலவாத் மஜ்லிஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதும், அந்தந்த மஹல்லா ஜமாஅத்தினர் உள்ளிட்ட பொதுமக்கள் அவற்றில் திரளாகக் கலந்துகொள்வது வழமை.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி, சிறுபள்ளி, பெரிய பள்ளி, மஸ்ஜித் ஸெய்யிதினா பிலால், மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டை குளத்துப் பள்ளி, ஆறாம்பள்ளி, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, ஜாவியா, புதுப்பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளில் நடப்பாண்டு மவ்லித் மஜ்லிஸ் 2014 டிசம்பர் 23ஆம் நாள் துவங்கி, 2015 ஜனவரி 03ஆம் நாள் வரை நாள்தோறும் மஃரிப் தொழுகைக்குப் பின் - இரவு 19.00 மணியளவில் துவங்கி, 21.00 மணியளவில் நிறைவுற்றது.
ரபீஉல் அவ்வல் 12ஆம் நாளான ஜனவரி 03ஆம் நாள் இரவில், குருவித்துறைப் பள்ளி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டிருக்க - மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது.
தொடர்ந்து, பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ மார்க்க சொற்பொழிவாற்றினார். நிறைவில் அனைவருக்கும் நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது.
அனைத்து நாட்களிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பளித்த அனைவருக்கும், பள்ளி நிர்வாகத்தின் சார்பில், இணைச் செயலாளர் கே.எம்.செய்யித் அஹ்மத் நன்றி கூறினார்.
குருவித்துறைப் பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நடைபெற்ற மவ்லித் நிறைவு நாள் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
குருவித்துறைப் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |