காயல்பட்டினத்தில், குடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) வழங்குவதற்கான விபரங்கள் பதிவு செய்யும் முகாம் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் நாளன்று துவங்கி ஆகஸ்ட் மாதம் 08ஆம் நாள் வரை நடைபெற்றது. இதில் சுமார் 70 சதவிகிதம் பேர் தங்களது விபரங்களை பதிவு செய்திருந்தனர்.
விடுபட்டவர்களிடம் விபரம் சேகரிக்கும் பணி, 2014 டிசம்பர் மாதம் 02ஆம் நாள் முதல், காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகிலுள்ள - முன்பு குடிநீர் கட்டணம் செலுத்தும் கட்டிடத்தில் துவங்கியது.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்று வரும் ஆதார் அடையாள அட்டை விபரம் சேகரிக்கும் முகாமில், சுமார் 14 ஆயிரம் பேர் சென்ற முறை விபரங்களை அளிக்கவில்லை என்றும், தற்போது டிசம்பர் 02ஆம் நாள் முதல் இன்று வரை சுமார் 1600 பேர் மட்டுமே முகாம்களில் கலந்து கொண்டு விபரங்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே இப்பணியை விரைவுபடுத்தி, வருகின்ற பிப்ரவரி இறுதிக்குள் விடுபட்ட அனைவரிடமும் விபரங்களை சேகரிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் தியாகராஜன் தலைமையில் இன்று (21/01) மதியம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், துணைத் தலைவர் எஸ்.எம்.முகைதீன், உறுப்பினர்கள் எஸ்.ஐ.அஷ்ரஃப், முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, ஏ.டீ.முத்து ஹாஜரா, எம்.ஜஹாங்கீர், ஏ.கே.முஹம்மத் முகைதீன், ஏ.ஹைரிய்யா, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், கே.பாக்கிய ஷீலா, எஸ்.ஏ.சாமு ஷிஹாப்தீன், ஏ.ஏ.அபூபக்கர்அஜ்வாது, சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், நகரின் அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆரம்ப சுகாதார நிலைய பொறுப்பாளர்கள், அங்கன்வாடி பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய கோட்டாட்சியர், இவ்விஷயத்தில் துரிதமாக செயல்பட்டு, இப்பணிகள் விரைவாக முடிவடைவதற்கு உதவிடுமாறு உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார். சென்ற முறை ஆதார் அடையாள அட்டைக்கு விபரங்களை வழங்காதவர்களின் பெயர் பட்டியல்கள் உறுப்பினர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர் |