காயல்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குள் - 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 40,000 மக்கள் வாழ்கிறார்கள். இங்கு 8000 கிலோ கிராம் (8 MT) குப்பைகள் தினசரி உருவாகுவதாக நகராட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உருவாகும் குப்பைகள் தற்போது - நகரின் பப்பரப்பள்ளி பகுதியில், நகராட்சிக்கு பாத்தியப்பட்ட இடத்தில் (சர்வே எண் 43/1) கொட்டப்படுகிறது.
பேருந்து நிலையத்திற்கு தென் மேற்கு பகுதியில் உள்ள இந்த இடத்தில் எந்த ஆண்டு முதல் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது என்ற தெளிவான தகவல் இல்லை. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாக ஊர்ஜிதம் அற்ற சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல ஆண்டுகளாக திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. சமீப காலமாக - ஒரு சில விஷமிகளால் குப்பைகள் எரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் - அப்பகுதி மக்களின் சுகாதாரமும் கெடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
மத்திய அரசின் Municipal Solid Wastes (Management and Handling) Rules விதிமுறைகள் - 2000ம் ஆண்டு, அமலுக்கு வந்தது. இந்த சட்டம் வருவதற்கு முன்னரே, பப்பரப்பள்ளி பகுதியில் குப்பைகள் கொட்டப்பட துவங்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் அமலுக்கு வரும்போது, பயன்பாட்டில் இருந்த குப்பைகொட்டும் இடங்கள் குறித்து - இந்த சட்டம் கீழ்க்காணுமாறு தெரிவிக்கிறது:
...
5. The existing landfill sites which continue to be used for more than five years, shall be improved in accordance of the specifications given in this Schedule. [Schedule III]
...
அதாவது - ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள குப்பைக்கொட்டும் இடங்கள், இந்த விதிமுறைகள்படி மேம்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கிறது.
இருப்பினும், இந்த சட்டம் அமலுக்கு வந்த 15 ஆண்டுகளில், அந்த பகுதியில் புதிய கட்டுமானங்களை தடுத்திட - இச்சட்டம் வலியுறுத்தாததால், எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அரசிடம் முறைப்படி அனுமதி பெற்று இவ்விடத்தில் குப்பைகள் கொட்டப்படாததால், இங்கு நிலம் வைத்திருந்த - நில உரிமையாளர்களுக்கு நிலங்களை சாமானிய மக்களுக்கு விற்க எந்த தடையும் இல்லை; கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கும் நகராட்சியும் - இந்த சட்ட விதிமுறைகள்படி, கட்டிடங்கள் கட்ட அனுமதியும் மறுக்கவில்லை. இதன் விளைவு?
GOOGLE EARTH சேவை மூலம் பெறப்பட்ட 2005ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான இப்பகுதியின் செயற்கைக்கோள் புகைப்படங்கள், தற்போது குப்பைக்கொட்டப்படும் இடத்திற்கு வட மேற்கில் 200 மீட்டருக்கும் தூரத்தில் இருந்த குடித்தனங்கள் 100 மீட்டர் அருகாமையில் உருவாக ஆரம்பித்துள்ளதை தெளிவாக்கிறது.
அதாவது - குப்பைகள் கொட்டப்பட துவங்கும்போது இல்லாமல் இருந்த குடித்தனங்கள், காலப்போக்கில் உருவாக துவங்க, குப்பைக்கொட்டும் இடங்களை மூடிட பொது மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வர துவங்கின.
இது காயல்பட்டினத்தில் மட்டும் காணப்படும் காட்சி அல்ல. நாடு முழுவதும் இதே பிரச்சனை நிலவியதன் விளைவாகவே, 2000ம் ஆண்டில் அமலுக்கு வந்த Municipal Solid Wastes (Management and Handling) Rules சட்டம் - குப்பைக்கொட்டும் இடத்தினை சுற்றி BUFFER ZONE (குடிதனங்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதி) உருவாக்குவதை கட்டாயமாக்கியது.
|