காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
50ஆம் ஆண்டு பொன்விழா சுற்றுப்போட்டிகள் இம்மாதம் 06ஆம் நாள் புதன்கிழமை 16.50 மணியளவில், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கியது.
இறுதிப்போட்டி:
இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி, 24.05.2015 ஞாயிற்றுக்கிழமையன்று 20.15 மணியளவில் நடைபெற்றது. இப்போட்டியில் – மே 22ஆம் நாளன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற பெங்களூரு BDFA அணியும், மே 23ஆம் நாளன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற MSU சென்னை அணியும் மோதின.
துவக்கமாக, வான வேடிக்கை முழங்க, பின்னணியில் மெல்லிய இசை ஒலிக்க, மைதானத்தின் பந்திளவல்கள் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் 50ஆவது ஆண்டு பொன்விழா சிறப்புக் கொடியை ஆளுக்கொரு முனையாக விரித்துப் பிடித்தவாறு, அரங்கில் வலம் வர, அவர்களைத் தொடர்ந்து - போட்டி நடுவர்களும், ஈரணி வீரர்களும் அணிவகுத்து, மைதானத்தின் நடுப்பகுதிக்கு வந்து, தத்தம் நிலைப் பகுதிக்குப் பிரிந்து சென்ற காட்சி ரசிகர்களின் கண்களுக்கு சர்வதேச போட்டிகளை நினைவுகூரச் செய்து, விருந்து படைத்தது.
ஈரணியினரும் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி, ரசிகர்கள் கண்களுக்கு துவக்கம் முதல் இறுதி வரை விருந்து படைத்தனர். தங்கள் நேர்த்தியான ஆட்டத்தால் கோல் போட முனைந்தபோதிலும், யாருக்கும் யாரும் சளைத்தவரல்ல என்று ஆடியதால், ஆட்ட நிறைவு வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. எனவே, 0-0 என்ற கோல் கணக்கில் போட்டி சமனில் முடிவுற்றது.
பின்னர் சமனுடைப்பு முறையில், 3-1 என்ற கோல் கணக்கில் BDFA பெங்களூர அணி வெற்றிபெற்றது.
பெருந்திரளாக ரசிகர்கள்...
மின்னொளியில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியைக் காண, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் பெருந்திளராக வந்திருந்தனர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மைதானமே அமர்க்களப்பட்டது.
வீரர்கள் அறிமுக நிகழ்ச்சி:
இறுதிப்போட்டியில், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆட்சியர் எம்.மாலிக் ஃபெரோஸ் கான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். தமிழ்நாடு கால்பந்துக் கழக தலைவர் ஜேஸையா வில்லவராயர் முன்னிலை வகித்தார். ஆட்டம் துவங்குமுன், அவர்களுக்கு சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டதோடு, ஈரணி வீரர்கள் மற்றும் நடுவர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இறுதிப்போட்டியில் பங்கேற்கும் ஈரணி வீரர்களும் தமக்குள் மாலை மாற்றிக்கொள்வது ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டியின் மரபாகும். அதனடிப்படையில், ஈரணி வீரர்களும் தமக்குள் மாலைகளை மாற்றிக்கொண்டனர். பின்னர், அவரவர் கழுத்துகளிலிருந்த மாலைகளை அவர்கள் ரசிகர்களை நோக்கி வீசி உற்சாகப்படுத்தினர்.
பரிசளிப்பு விழா:
இருபதே நிமிடங்களில், மைதானத்தின் கிழக்கு நடுப்பகுதியில் அமைக்கப்பட்ட மேடையில், 23.30 மணியளவில் பரிசளிப்பு விழா துவங்கியது. ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட கால்பந்துக் கழக தலைவர் ஸ்ரீதர் ரோட்ரிகோ, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.டி.கே.ஜெயசீலன், ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகிகள், சுற்றுப் போட்டிக் குழுவினர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சுற்றுப்போட்டிக் குழு செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் மூஸல் காழிம் இறைமறை குர்ஆன் வசனங்களையோதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஐக்கிய விளையாட்டு சங்க துணைச் செயலாளரும், நடப்பாண்டு சுற்றுப்போட்டிக் குழு தலைவருமான எஸ்.எம்.உஸைர் வரவேற்றுப் பேசினார்.
தமிழ்நாடு கால்பந்துக் கழக தலைவர் ஜேஸையா வில்லவராயர், சிறப்பு விருந்தினர் எம்.மாலிக் ஃபெரோஸ்கான் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
தொடர்ந்து, ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் பொன்விழா சிறப்பு மலரை, சிறப்பு விருந்தினர் வெளியிட்டார்.
பொன்விழாவை முன்னிட்டு, மர்ஹூம் எல்.கனீ நினைவாக அவரது மகன் எல்.கே.லெப்பைத்தம்பி நினைவுப் பரிசை ஐக்கிய விளையாட்டு சங்கத்திற்கு வழங்கினார்.
ஐக்கிய விளையாட்டு சங்க பொன்விழாவை முன்னிட்டு, பீங்கான் தட்டில் வடிவமைக்கபட்டிருந்த நினைவுக் கேடயத்தை ஜேஸையா வில்லவராயர் வெளியிட, ஐக்கிய விளையாட்டு சங்க துணைத்தலைவர் எஸ்.அக்பர்ஷா பெற்றுக்கொண்டார்.
பல்வேறு பரிசுகள்:
பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சி துவங்கியது. இறுதிப்போட்டியில் பங்கேற்ற ஈரணி வீரர்களுக்கும், நடுவர்களுக்கும், பால் பாய்ஸ் சிறுவர்களுக்கும் தனிப்பரிசு வழங்கப்பட்டது.
தொடரின் சிறந்த வீரர்களுக்கு, ஐக்கிய விளையாட்டு சங்க முன்னாள் வீரர்களான மர்ஹூம் கத்தீப் ஹாமித், மர்ஹூம் எம்.அல்தாஃப், ஐக்கிய விளையாட்டு சங்க முன்னாள் தலைவர் மர்ஹூம் எல்.கனீ ஆகியோர் நினைவாக பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னர், இரண்டாமிடம் பெற்ற சென்னை MSU அணிக்கு, ரூபாய் 60 ஆயிரம் பணப்பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற பெங்களூரு BDFA அணிக்கு மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பையும், ரூபாய் 1 லட்சம் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
அரையிறுதி வரை முன்னேறிய காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC), பெங்களூரு ASC ஆகிய அணிகளுக்கும் பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.
நன்றியுரையைத் தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் பரிசளிப்பு விழா நிறைவுற்றது. வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி நிறுவனர் தலைவர் வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், தூத்துக்குடி மாவட்ட கால்பந்து கழக செயலாளர் ஸ்ரீதர் ரோட்ரிகோ, அதன் பொருளாளர் ஆல்ட்ரின் மிராண்டா, மாவட்ட விளையாட்டு அலுவலர் சேவியர் உள்பட பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
பின்னர், இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற பெங்களூரு BDFA அணியினர், பாண்டு வாத்திய முழக்கங்களுக்கேற்ற படி ரசிகர்கள் முன்னிலையில் நடனமாடி மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
சுழற்கோப்பை நகர்வலம் / பேண்டு வாத்தியம் / சிலம்பாட்டம்:
பரிசளிப்பு விழாவை முன்னிட்டு - ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக வழமை போல பேண்டு வாத்தியம், வான வேடிக்கைகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிலம்பாட்டமும் நடைபெற்றது. ஆட்டம் துவங்கும் முன்னரும், இடைவேளையிலும், பரிசளிப்பு விழா நிறைவுற்ற பின்னரும் அவர்கள் தம் திறமைகளைக் வெளிப்படுத்தி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
இறுதிப்போட்டி நாளான மே 24 அன்று காலையில், சுழற்கோப்பைகளை வாகனங்களில் காட்சிப்படுத்தி, பாண்டு வாத்தியம் முழங்க நகர் முழுக்க ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.
இவ்வாண்டு சுற்றுப்போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் பீ.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை தலைமையில், அதன் நிர்வாகிகளும், சுற்றுப் போட்டிக் குழுவினரும் செய்திருந்தனர்.
அன்றாடம் நடைபெறும் போட்டிகள் அனைத்தும், www.azadtrophy.com என்ற இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டது.
தகவல் உதவி:
‘ஆசிரியர்’ கலீஃபா ஸதக்கத்துல்லாஹ்
Twitter update:
ஹாரூன் மீரான்
Mixlr Running Audio Commentry:
ஹாஃபிழ் ஸல்மான் ஃபாரிஸ்
நடப்பாண்டு கால்பந்துப் போட்டி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு நடைபெற்ற பதினெட்டாம் நாள் (இறுதிப்) போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |