காயல்பட்டினத்தில் இளம்பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டியதாக கணவர், மாமியார் மற்றும் நாத்தனாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உடன்குடி காலன்குடியிருப்பு உசேன் மகள் நபீலா பெனாசீர் (23). இவருக்கும் காயல்பட்டினம் பெரிய நெசவு தெரு முகம்மது ரபீக் மகன் யூசுப் அலாவுதீனுக்கும் (27) கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி திருமணம் நடந்தது. யூசுப் அலாவுதீன் சென்னையில் உள்ள ஒரு நகைக் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக நபீலா பெனாசீர் தனது தாய் வீடான காலன்குடியிருப்பிற்கு சென்றார். இந்நிலையில் நபீலா பெனாசீரின் தாயார் ஜமீனத் சென்னைக்கு சொந்த வேலையாக செல்வதால் நபீலா பெனாசீரை காயல்பட்டினம் கொண்டு விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை மதியம் நபீலா பெனாசீர வீட்டில் கருகிய நிலையில் கிடந்தார். பின்னர் அவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இது குறித்து ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளர் மாடசாமி வழக்குப்பதிவு செய்தார். திருச்செந்தூர் ஆர்.டி.ஓ தியாகராஜன் விசாரனை நடத்தி வந்தார்.
விசாரணையில் புதிது புதிதாக சீர்வரிசை கொண்டுவரக் கேட்டும், கொண்டுவந்தால்தான் வாழ்க்கை இல்லையென்றால் விவாகரத்து செய்து விடுவோம் எனவும், வாழவிடாமல் துன்புறுத்தியதாகவும் - இதனால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து நபீலா பெனாசீர் கணவர் யூசுப் அலாவுதீன், அவரது தாயார் தரஜா பீவி (53), இவரது அக்கா பாத்திமா முஜம்மிலா (30) ஆகிய 3 பேரையும் ஆறுமுகனேரி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். |