விபத்துகளைத் தவிர்ப்பதற்காக, இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசத்தைக் கட்டாயப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், தமிழக அரசு வரும் ஜூலை 01ஆம் நாள் முதல், இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் - தலைக்கவசனம் அணிவது கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் - தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வூட்டும் பிரசுரத்தை, காயல்பட்டினத்தில் - திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மா.கனகவல்லி இன்று பொதுமக்களை நேரில் சந்தித்து வினியோகித்தார்.
அவருடன், வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் பொதுநல ஆர்வலர்களும் இணைந்து பொதுமக்களுக்கு பிரசுரங்களை வழங்கினர். |