சிங்கப்பூரில் பணிபுரியும் காயலர்கள், ரமழான் மாதத்தில் நாள்தோறும் ஒரு பள்ளிவாசலுக்கு மொத்தமாகச் சென்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியிலும், தராவீஹ் தொழுகையிலும் பங்கேற்பது வழமை. அந்த அடிப்படையில், நடப்பாண்டு அவர்கள் பங்கேற்ற ஓர் இஃப்தார் நிகழ்ச்சி குறித்து பெறப்பட்டுள்ள தகவலறிக்கை:-
சிங்கப்பூரில் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் நோன்பு துறப்பு நிகழ்வுகள் வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வரிசையில் 23.06.2015 அன்று ஆறாவது நோன்பை மெரினா பே சென் அருகில் ராஃபிள்ஸ் ப்ளேஸ் என்னுமிடத்தில் அமைந்துள்ள மவ்லானா முஹம்மத் அலீ மஸ்ஜிதில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் காயலர்கள் பலர் ஒன்றிணைந்து நோன்பு துறந்தனர்.
இப்பள்ளியின் உதவி பெருளாளர் நமதூர் சொளுக்கார் தெருவைச் சார்ந்த ராஜிக் நஹ்வி என்பது குறிப்பிடத்தக்கது.
நோன்பு துறப்பதற்காக பழங்கள், ரோஸ் மில்க் குளிர்பானம், மலாய் இனிப்பு வகைகள், கஞ்சி, சமூசா மற்றும் சுவையான புரோட்டா - இறைச்சி ஆகியன பரிமாறப்பட்டன.
மஃரிப் தொழுகைக்குப் பின் அனைவருக்கும் சூடான இஞ்சி தேநீர் பரிமாறப்பட்டது. இப்பள்ளி கடற்கரையோரமாக அமைந்துள்ளதால் இதமான கடல் காற்று வீச, கரையோரத்தில் தேநீர் அருந்தி சற்று இளைபாறிய பின்னர் இஷா தொழுகையுடன் - தராவீஹ் தொழுகையையும் நிறைவேற்றி விட்டு காயலர்கள் தமது இருப்பிடம் திரும்பினர்.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
சிங்கப்பூர் |