காயல்பட்டினத்தில் இருந்துகொண்டு, நோன்பு நோற்பதற்காக ஸஹர் உணவு உண்ண வாய்ப்பற்றவர்களுக்காக, நகரின் தன்னார்வலர்கள் சிலர் சார்பில் நகரில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் ஹாஜியப்பா தைக்கா பள்ளியையொட்டிய கட்டிடத்தில் நடைபெறும் இந்த உணவு ஏற்பாட்டில், தற்போது வரை நாள்தோறும் சுமார் 75 பேர் வரை வந்து ஸஹர் உணவு உட்கொண்டு செல்கின்றனர். அவர்களுள், சுமார் 25 பேர் வரை வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் அடங்குவர். நாள்தோறும் 22.30 மணியளவில் சமையல் ஏற்பாடுகள் துவங்குகின்றன.
03.00 மணியிலிருந்து ஸஹர் உணவுக்காக வரும் மக்கள், 4 விடுத்தங்களாக அமர்ந்து உணவுட்கொண்டு செல்கின்றனர். தினமும் இறைச்சி அல்லது மீன் ஆகியவற்றுடன் சாம்பார், ரசம், வாழைப்பழம், தேனீர் உள்ளிட்டவை
நகரில் மார்பிள் கல் வேலைகள் உள்ளிட்ட கட்டிட வேலைகளைச் செய்து வருவோர், ரமழானை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்தும் நன்கொடை திரட்டுவதற்காக வருவோர் அனைவருக்கும் இந்த ஏற்பாடு மிகுந்த பயனளித்து வருகிறது.
ரமழான் காலங்களில் பல்வேறு தேவைகளுக்காக காயல்பட்டினம் வருவோரைத் தங்க வைத்து, நள்ளிரவில் அவர்களுக்கும் ஸஹர் உணவு ஏற்பாடுகள் செய்வதில் தனிநபர்களுக்கு இருந்து வந்த நடைமுறைச் சிக்கல்கள் இதன் மூலம் போக்கப்பட்டுள்ளது.
இவ்வகைக்காக, காயல்பட்டினம் கே.டீ.எம்.தெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எம்.ஏ.ஷேக், என்ற பி.ஏ.ஷேக், சமையல் மாஸ்டர் ஏ.பீ.மொகுதூம் ஹாஜி ஆகியோர் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,
நமதூரில் அனைத்து பள்ளிவாசல்களிலும் இஃப்தார் - நோன்பு துறப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், வெளியூரிலிருந்து இங்கு வருவோர் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த ஆதரவற்றவர்களுக்கு நோன்பு துறப்பதற்கு பெரிய அவதிகள் எதுவும் இருக்காது. ஆனால், அதே மக்களுக்கு நோன்பு நோற்பதற்காக ஸஹர் உணவுக்கு கடைகளும் திறந்திருக்காது... நள்ளிரவு என்பதால், வீடுகளிலும் பெரும்பாலும் ஏற்பாடுகள் செய்ய இயலாது நிலையுள்ளது. இப்படியிருக்க, இம்மக்கள் எங்கு செல்வார்கள் என்ற கவலையே இப்பணியைக் கையிலெடுக்க எங்களைத் தூண்டியது...
நன்மையை நாடி சிலரால் சில ஆண்டுகளாகச் செய்யப்பட்டு வந்த இப்பணியை, கடந்த நான்கு ஆண்டுகளாக நாங்கள் பொறுப்பிலெடுத்து செய்து வருகிறோம்... இவ்வகைக்காக நன்கொடைப் பணமாகவும், சமையல் பொருட்களாகவும் தன்னார்வலர்கள் பலர் வந்து தந்த வண்ணம் உள்ளனர்...
கைவசம் இருப்பதைக் கொண்டு இந்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தற்போது 75 பேர் வரை ஸஹர் உணவு ஏற்பாட்டில் பங்கேற்கின்றனர். நாட்கள் செல்லச் செல்ல இன்னும் அதிகரிக்கலாம். அதிகபட்சம் 100 பேருக்கு வரை ஏற்பாடுகள் செய்ய திட்டமிட்டுள்ளோம்...
நாளொன்றுக்கு தற்போது 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. தற்போது இறுக்கமான நிலையிலேயே வருமானம் உள்ளது. எனவே, நல்லுள்ளம் கொண்டோர் இவ்வகைக்காக தாராளமாகத் தந்து, இந்த நன்மையில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்...
இது ஏழைகளுக்கு உதவ மட்டுமல்ல; ஸஹர் உணவு பெற்றிட வாய்ப்பற்ற அனைவருக்குமானது என்பதால், யார் வேண்டுமானாலும் வந்து உணவுட்கொண்டு பயன் பெறலாம்... என்றனர்.
இவ்வகைக்காக உதவி கோரி விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை:-
தகவல் (பிரசுரம்):
‘ஜெம்’ தீபி |