காயல்பட்டினம் தென் பாக கிராமம் சர்வே எண் 278 இடத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய அனுமதிக்கு மாற்றமாக பயோ காஸ் திட்டப்பணிகள் துவக்கப்பட்டுள்ளன என ஊழல் எதிர்ப்பு இயக்கம், சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பாக, அக்டோபர் 5 திங்களன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:
காயல்பட்டினம் நகராட்சியின் வார்ட் 1 - கொம்புத்துறை (கடையக்குடி) பகுதியின் வடக்கில் - கடலோரத்திற்கு அருகே, சர்வே எண் 278/1B இடம் - 4 ஏக்கர் அளவில் - உள்ளது.
40,000 மக்கள் வாழும் காயல்பட்டினம் நகராட்சியில் உருவாகும் குப்பைகளை குறைந்தது - அடுத்த 25 ஆண்டுகளுக்கு கொட்ட - இந்த 4 ஏக்கர் நிலம் என்பதே மிகவும் குறைவானது. இருப்பினும், இவ்விடத்தில், நகராட்சியின் குப்பைகளை கொட்டவும், பயோ காஸ் திட்டத்தினை அமைக்கவும் என இரு திட்டங்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், இவ்வாண்டு மே - ஜூன் மாதங்களில் அனுமதி வழங்கியுள்ளது.
4 ஏக்கர் நிலத்தில் - தென் மேற்கு கோடியில், 30 சென்ட் அளவில், பயோ காஸ் திட்டம் அமைக்கப்படும் என்றும், மீதியுள்ள 3.7 ஏக்கர் நிலத்தில் குப்பைகள் கொட்டப்படும் என்றும் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு காந்திராஜன் தெரிவித்ததன் அடிப்படையில், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் - தான் பெற்ற அனுமதிக்கு மாறாக, திரு காந்திராஜன், அந்த 4 ஏக்கர் நிலத்தின் நடுவில் - பயோ காஸ் திட்டப்பணிகளை துவக்கியுள்ளார்.
நிலத்தின் நான்கு திசைகளிலும், 30 மீட்டர் அகலப் பகுதி, பசுமை பகுதியாக பராமரிக்கப்படவேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி ஆணை தெரிவிக்கிறது. மேலும் - பயோ காஸ் திட்டத்திற்கான டெண்டர் விதிமுறைகளும், பயோ காஸ் கட்டுமானத்தை சுற்றி, 75 அடிக்கு (சுமார் 23 மீட்டர்) எந்த கட்டுமானங்களும் இருக்கக்கூடாது என தெரிவிக்கிறது.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை மீறி, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திரஜான் பயோ காஸ் திட்டப் பணிகளை - நிலத்தின் நடுவிலே - துவக்கியுள்ளததால், அங்கு தற்போது குப்பைகள் கொட்ட 1 சென்ட் நிலம் கூட கிடையாத சூழல் உருவாகியுள்ளது.
விதிமுறைகளை மீறி செயல்புரிந்த ஆணையர் காந்திராஜன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், எந்த சிந்தனையும் இல்லாமல் (NON-APPLICATION OF MIND), சாத்தியமில்லாத - நடைமுறை படுத்த முடியாத, முறையில் வழங்கப்பட்டுள்ள தவறான அனுமதியை ரத்து செய்ய கோரியும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி அலுவலகத்தில் ஆகஸ்ட் 31 அன்று நேரடியாக மனு கொடுக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு மேலாகியும் - இது குறித்து எந்த நடவடிக்கையும் மாசு கட்டுப் பாட்டு வாரியம் இது வரை மேற்கொள்ள வில்லை.
எனவே - இது குறித்து நடவடிக்கை எடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட கோரி. மாவட்ட ஆட்சியர் திரு ம்.ரவிகுமார் IAS அவர்களிடம் இன்று (5-10-2015), மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது, ஊழல் எதிர்ப்பு இயக்கம், சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பாக - மனு அளிக்கப்பட்டது.
எங்கள் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இது குறித்து வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் எதிர்ப்பு இயக்கம் மனு குறித்து தினத்தந்தி (6-10-2015) செய்தி
தகவலில் உதவி:
பி.ஏ. சேக் (கே.டி.எம். தெரு)
'தமிழன்' முத்து இஸ்மாயில் |