காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் இருக்க - துணைத்தலைவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக
நகர்மன்றத் தலைவர் தொடுத்துள்ள வழக்கைத் திரும்பப் பெற பெரும்பான்மை உறுப்பினர்கள் வலியுறுத்தியதால், செப்டம்பர் மாத நகர்மன்றக் கூட்டம்
துவங்காமலேயே நிறைவுற்றது. கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக தீர்மானமிட்டு கூட்டம் முடிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
நகர்மன்றக் கூட்டம்:
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம், 22.09.2015 செவ்வாய்க்கிழமையன்று 11.00 மணியளவில், நகராட்சி அலுவலக வெளி
வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தலில் நடைபெற்றது.
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
பங்கேற்றோர்:
04ஆவது வார்டு உறுப்பினர் ஏ.டீ.முத்து ஹாஜரா, 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா ஆகியோரைத் தவிர இதர 16 உறுப்பினர்களும்
இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டப் பொருள்:
துவக்கமாக நகர்மன்றத் தலைவர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதனைத் தொடர்ந்து, 92 பொருட்கள் கொண்ட அஜெண்டாவினை வாசிக்க
ஆயத்தமானபோது, உறுப்பினர்கள் குறுக்கிட்டனர்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் இருக்க - துணைத்தலைவர் தலைமையில் ஜூலை 27 அன்று நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானத்திற்கு எதிராக நகர்மன்றத் தலைவர் தொடுத்துள்ள வழக்கைத் திரும்ப பெற வேண்டும் என அவர்கள்
கூறினர். நகர்மன்றத் தலைவர் தொடர்ந்த வழக்கினால், சாலைப் பணிகள் முடங்கியுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்பட்ட கூட்டத்திற்கு தான் தடை பெறப்பட்டது என்றும், இம்மாத கூட்டத்திலும் பல புதிய சாலைகள் குறித்து பொருட்கள்
உள்ளது என்றும், அவற்றை நிறைவேற்றிட ஒத்துழைக்கும்படியும் நகர்மன்றத் தலைவர் கோரினார்.
துணைத் தலைவர் மூலம் ஜூலை 27 அன்று நடத்தப்பட்ட கூட்டம், சட்டத்திற்கு புறம்பானது அல்ல என்றும், இன்றைய கூட்டத்தில் - புதிதாக
இரண்டு பொருட்கள் கொண்டு வர வேண்டும் என்றும், ஒன்றன் மூலமாக ஜூலை 27 தேதிய தீர்மானத்தை ரத்து செய்யலாம் என்றும், மற்றொரு
பொருள் மூலம் - ஜூலை 27 கூட்டத்தில் இடம்பெற்றிருந்த பொருட்களுக்கு புதிதாக அனுமதி வழங்கலாம் என்றும் உறுப்பினர்கள் தரப்பில்
கூறப்பட்டது.
வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையிலும், தான் கோரியிருந்த வங்கி கணக்கு விபரங்கள், சாலைகளுக்குக்கான மதிப்பீடு விபரங்கள் உட்பட எந்த
விபரங்களையும் ஆணையர் தராத நிலையிலும் - உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்க முடியாது என நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
தீர்மானம்:
இவ்வாறு நீண்ட நேரம் விவாதம் சென்றுகொண்டேயிருந்தது. வழக்கைத் திரும்பப் பெற சம்மதிக்காவிட்டால் இக்கூட்டம் நடத்த ஒத்துழைக்கப்
போவதில்லை என பெரும்பான்மை உறுப்பினர்கள் உறுதிபட கூறியதால், பின்வருமாறு மினிட் புத்தகத்தில் எழுதப்பட்டு, கூட்டம் துவங்காமலேயே
நிறைவுற்றது:-
நீதிமன்றத்தில் வழக்கில் உள்ள 43 சாலைகள் குறித்த வழக்கினை வாபஸ் வாங்கச் சொல்லி நகர்மன்ற உறுப்பினர்கள்
(13ஆவது வார்டு உறுப்பினர் திரு. சம்சுதீன் அவர்களைத் தவிர) நகர்மன்றத் தலைவரை நிர்பந்தம் செய்து கூட்டம் நடைபெற ஒத்துழைப்பு தராததால்
கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு மினிட் புத்தகத்தில் எழுதப்படவே, அதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
அசைபடப் பதிவு:
கூட்டத்தின் முழு அசைபடப்பதிவைக் காண, கீழ்க்காணும் படத்தின் மீது சொடுக்குக!
காயல்பட்டினம் நகராட்சியில் இதற்கு முன் நடைபெற்ற கூட்டம் தொடர்பான செய்தியைக் காண இங்கே
சொடுக்குக!
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |