காயல்பட்டினத்தின் வரலாற்று ஆய்வாளரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனருமான முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் தொகுத்தெழுதிய - “காயல்பட்டினம்தான் காயல்” எனும் தலைப்பில், காயல்பட்டினம் நகர வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, 07.10.2015 புதன்கிழமையன்று 17.00 மணியளவில், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் ஹாஜி ருக்னுத்தீன் ஸாஹிப் நினைவு கலையரங்கில் நடைபெற்றது.
மாணவர் ஹாஃபிழ் எச்.எம்.முஹம்மத் ஃபரீதுத்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய - காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, நூல் அறிமுகவுரையாற்றினார்.
காயல்பட்டினம் வரலாற்றுத் தகவல்கள் பலவற்றை - சான்றாவணங்களை மேற்கோள்காட்டிப் பேசிய அவர், “காயல்பட்டினம்தான் காயல்” நூலில் உள்ளடங்கியுள்ள வரலாற்றுத் தகவல்கள் குறித்தும் விளக்கிப் பேசினார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய - காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை மற்றும் அஹ்மத் நெய்னார் பள்ளியின் தலைவர் எஸ்.கே.இசட்.ஆப்தீன் நூலின் துவக்கப் பிரதிகளை வெளியிட, ஜாவியா அரபிக் கல்லூரி - கே.எம்.டீ. மருத்துவமனை ஆகியவற்றின் நிர்வாகி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர் வாவு எஸ்.அப்துல் கஃப்பார், எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஸ்டீஃபன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் பணி நிறைவுபெற்ற தலைமையாசிரியர் காஜா முகைதீன், அதன் பெற்றோர் - ஆசிரியர் கழக செயலாளர் எம்.ஏ,செய்யித் முஹம்மத் அலீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் ஏற்புரையாற்றினார்.
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் துணைச் செயலாளர் கே.எம்.டீ.சுலைமான் நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் கத்தீபு கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் துஆவுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
காயல்பட்டினம் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கல்வி - இலக்கிய ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், நகரப் பிரமுகர்கள் இவ்விழாவில் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை, கே.எம்.டீ.சுலைமான் ஒருங்கிணைப்பில், ஹாஃபிழ் ஏ.எல்.ஷம்சுத்தீன் மற்றும் முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
“காயல்பட்டினம்தான் காயல்” எனும் தலைப்பிலான இந்நூலின் விலை 125 ரூபாய் என்றும், (1) முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, (2) கே.எம்.டீ.சுலைமான் கடை (ஃபஸீஹா ஏஜன்ஸி), (3) ஸாஜிதா புக் சென்டர் (கடைப்பள்ளி எதிரில், ஆஸாத் தெரு) ஆகிய இடங்களில் நூல் கிடைக்கும் என்றும், நூல் விற்பனை மூலம் கிடைக்கப் பெறும் தொகை, காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஈமான் - கற்புடையார் பள்ளி நலனுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. |