காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் சார்பில், நகரிலுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பேரேடுகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆலையின் மக்கள் தொடர்புத் துறை துணை மேலாளர் சு.சித்திரைவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டணத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இலவச பேரேடுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
பெண்களின் பொருளாதார மேம்பாட்டை கருத்தில் கொண்டு டி.சி.டபிள்யு. நிறுவனம் ஏழை, எளிய, பெண்களுக்கு இலவச தையல் பயிற்சியை நடத்தியது. பயிற்சி பெற்ற பெண்கள் ஓற்றுமையுடன் வாழவும், சேமிப்பு பழக்கத்தை உருவாக்கவும், தொழில் அடிப்படையில் அரசு மற்றும் வங்கிகளில் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று தொழில் செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மகளிர் சுய உதவி குழுக்கள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இக்குழுக்கள் நடத்தும் கூட்டத்தை முறையாக பதிவு செய்யவும் வரவு-செலவு கணக்குகளை முறையாக எழுதி பராமரிப்பதற்காக ஒவ்வொரு குழுவிற்கும் தீர்மான புத்தகம், ரொக்கப் புத்தகம், சேமிப்பு பேரேடு, கடன் பேரேடு, பொது பேரேடு ஆகிய பேரேடுகளையும் மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா காயல்பட்டணம் நகராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டு விசாலாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள பஜனை மண்டபத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.
மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் எஸ்.ஜே.கென்னடி அனைவரையம் வரவேற்றார். விழாவிற்கு சாகுபுரம் டி.சி.டபிள்யு. நிறுவன செயல் உதவி தலைவர் (நிர்வாகம்), டாக்டர். எம்.சி. மேகநாதன் தலைமை தாங்கி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பேரேடுகளையும் மற்றும் தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
டி.சி.டபிள்யு. நிறுவன மக்கள் தொடர்பு துறையின் துணை மேலாளர் சு.சித்திரைவேல் நன்றி கூறினார். விழாவில் மகளிர் சுய உதவி குழு பெண்கள் திரளானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளை டி.சி.டபிள்யு. நிறுவன மக்கள் தொடர்பு துறையினர் செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DCW ஆலையின் நலத்திட்ட உதவிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |