DCW தொழிற்சாலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, தேசிய பசுமை
தீர்ப்பாயத்தில் அக்டோபர் 10 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) செய்தி
தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு – KEPA
சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மே 26, 2014 அன்று தீர்ப்பாயத்தால் அனுமதிக்கப்பட்ட இந்த வழக்கில், அனைத்து தரப்பின்
எழுத்துப்பூர்வமான வாதங்கள் (PLEADINGS) சமர்ப்பிப்பு - செப்டம்பர் 3, 2015 அன்று நிறைவுற்றது.
இதனை தொடர்ந்து - இவ்வழக்கில் வாதங்கள் (SUBMISSIONS) - அக்டோபர் 5 அன்று துவங்கின. அன்று - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
அமைப்பு (KEPA) சார்பாக வழக்கறிஞர் டி.நாகசைலா, தனது வாதங்களை துவக்கினார். 1 மணி
நேரத்திற்கும் மேலாக நீடித்த முதல் நாள் வாதங்களை தொடர்ந்து, வழக்கு அக்டோபர் 10 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் இவ்வழக்கு விசாரணை அக்டோபர் 10 அன்று வந்தது. அப்போது - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) வழக்கறிஞர்
டி.நாகசைலா - தனது வாதங்களை தொடர்ந்தார். தனது இரண்டாம் நாள் வாதங்களில், வழக்கறிஞர் நாகசைலா -
<><><>DCW நிறுவனத்தின் விரிவாக்க திட்டத்தில் - CRZ - 1 நிலங்களும் இடம்பெற்றுள்ளன என்பதனை மறைத்தது
<><><> இத்தொழிற்சாலையின் விரிவாக்கம் குறித்து நவம்பர் 2011 இல் நடந்த மக்கள் கருத்து கேட்கும் கூட்டத்தில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு எவ்வாறு முறையான பதிலினை DCW நிறுவனம் வழங்கவில்லை
<><><> கடல் செந்நிறம் ஆவதற்கு - மக்கள் கருத்து கேட்கும் கூட்டத்திலும், புது டில்லியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி பெறுவதற்கும் எவ்வாறு - DCW தொழிற்சாலையினால் - முரண்பாடான பதில்கள் வழங்கப்பட்டன
<><><> மக்களின் உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளதான புகாருக்கு, DCW நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீனிவாசன் - வழங்கிய அக்கறையற்ற, துவேசமான பதில்
<><><> ஆகஸ்ட் 2012 காலவாக்கில் - DCW தொழிற்சாலையின் கழிவுகள் ஓடை வழியாக கடலில் கலக்கிறது, நிலக்கரி சாம்பல் ஓடையில் கலக்கிறது என்ற மாசு கட்டு பாட்டு வாரியத்தின் அறிக்கையின் அடிப்படையில், DCW நிறுவனத்தின் இல்மெனைட் தொழிற்சாலையை மூடிட மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்த அதே காலகட்டத்தில், பெங்களூரில் உள்ள மத்திய சுற்றுச்சூழல் துறையின் அலுவலகம் - DCW நிறுவனத்தில் இருந்து எந்த கழிவுகளும் வெளியில் வருவதில்லை, நிலக்கரி சாம்பல்களை DCW நிறுவனம் சிமெண்ட் நிறுவனங்களுக்கு முழுமையாக விற்றுவிடுகிறது என்ற அறிக்கையை புது டில்லிக்கு அனுப்பி வைத்த செயல்
<><><> காயல்பட்டினத்தில் முழுமையான உடல் நல ஆய்வு மேற்கொள்ள ராமச்சந்திரா பல்கலைகழகத்திற்கு டிசம்பர் 2012இல் கடிதம் எழுதிய மாசு கட்டுபாட்டு வாரியம், அதனை நடத்திட தொடர் முயற்சி எடுக்காத செயல்
<><><> டிசம்பர் 2012 இல் - மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட பரிசோதனையில் - சுற்றுச்சூழலில் தொடர்ந்து மெர்குரி (பாதரசம்) உட்பட பல மாசு பொருட்கள் எவ்வாறு அதிகமான அளவில் கண்டறியப்பட்டது
<><><> கடினமான நடவடிக்கை எடுக்க வேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொழிற்சாலை நிர்வாகத்திற்கு தொடர்ந்து எவ்வாறு கூடுதல் அவகாசம் கொடுத்து மென்மையாக நடந்து வந்தது
உட்பட பல வாதங்களை - சுமார் 1.5 மணி நேரம் - முன் வைத்தார்.
வாதங்களை கேட்ட நீதிபதி எம்.சொக்கலிங்கம் மற்றும் நிபுணர் உறுப்பினர் பி.எஸ். ராவ் ஆகியோர் - வழக்கினை, நவம்பர் 2 தேதிக்கு
ஒத்திவைத்தனர். நவம்பர் 2 அன்று, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் வழக்கறிஞர் டி.நாகசைலா தனது வாதங்களை
தொடருவார்.
இவ்வழக்கில் காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக வழக்கறிஞர்கள் டி.நாகசைலா, டாக்டர் வி.சுரேஷ் மற்றும் பிரீஸ்ட்லி
மோசஸ் ஆகியோர் ஆஜராகின்றனர்.
மத்திய அரசு சார்பாக வழக்கறிஞர் திருமதி சி.சங்கமித்திரை, DCW நிறுவனம் சார்பாக வழக்கறிஞர்கள் ஆர்.வெங்கட்டவதன் மற்றும் நிவேதிதா,
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக வழக்கறிஞர் திருமதி ரீதா சந்திரசேகர், தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர்கள் எம்.கே. சுப்ரமணியம்
மற்றும் எம்.ஆர்.கோகுல் கிருஷ்ணன், PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED நிறுவன்ம் சார்பாக வழக்கறிஞர் வி.ஸ்ரீனிவாச பாபு,
CHOLAMANDALAM MS RISK SERVICES LIMITED சார்பாக வழக்கறிஞர் பி.பிரேம்குமார் ஆகியோர் இவ்வழக்கில் ஆஜராகின்றனர்.
[Administrator: கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 11:00 am / 18.10.2015] |