தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய அனுமதிக்கு மாற்றமாக காயல்பட்டினத்தில் பயோகேஸ் திட்டப்பணிகள் துவக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக குப்பை கொட்டுவதற்கு அங்கு இடமில்லாமலாகிவிடும் என்றும், இந்நிலையை ஏற்படுத்திய காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கவும், நடைமுறை சாத்தியமின்றி தவறான முறையில் வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யக் கோரியும், ஊழல் எதிர்ப்பு இயக்கம், சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பாக, 31.08.2015 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி அலுவலகத்தில் நேரடியாக மனு அளிக்கப்பட்டிருந்தது.
ஒரு மாதமாகியும், அம்மனு மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால், விரைவான நடவடிக்கை கோரியும், நடவடிக்கை இல்லாவிடில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப் போவதாகவும், 05.10.2015 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது மாவட்ட ஆட்சியரிடம் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்க, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தால் அளிக்கப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தவறானவை என்றும், கள ஆய்வு மூலம் அதை உறுதி செய்யுமாறும், 12.10.2015 திங்கட்கிழமையன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 05ஆவது வார்டு உறுப்பினர் ம.ஜஹாங்கீர் மனு அளித்திருந்தார்.
அமைவிடத்தைக் கள ஆய்வு செய்யக் கோரும் அவரது இம்மனுவை வரவேற்பதாக ஊழல் எதிர்ப்பு இயக்கம் கூறியுள்ளது. இதுகுறித்த அவ்வமைப்பின் அறிக்கை வருமாறு:-
காயல்பட்டினம் நகராட்சியின் தென்பாகம் கிராமம் - சர்வே எண் 278 1/B இடத்தில், பயோ காஸ் திட்டம் அமையவும், குப்பைக் கிடங்கு அமையவும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் - மே, ஜூன் மாதங்களில் அனுமதி வழங்கியது.
இந்த அனுமதியைக் கோரி விண்ணப்பம் செய்த நகராட்சி ஆணையர் திரு. காந்திராஜன், இந்த நிலத்தின் தென்மேற்கு கோடியில், 30 சென்ட் நிலத்தில் பயோ காஸ் மையம் அமைக்கப்படும் என்றும், எஞ்சியுள்ள பகுதியில் (3.7 ஏக்கர்) நிலத்தில் குப்பைக் கிடங்கு அமைக்கப்படும் என்றும் கூறியிருந்தார். ஆணையரின் விண்ணப்பம் அடிப்படையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், சில விதிமுறைகளை விதித்து தனது அனுமதியினை வழங்கியது.
மார்ச் 25 அன்று நகராட்சி ஆணையரால் துவக்கப்பட்ட பயோ காஸ் திட்டப் பணிகள், சர்வே எண் 278/1B நிலத்தின் தென் மேற்கு கோடியில் அமையாமல், அந்த நிலத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. மேலும் - மாசு கட்டுப்பாட்டு வாரியம், நகராட்சியின் டெண்டர் ஆவணம் ஆகியவை விடுத்துள்ள விதிமுறைகள்படி, அவ்விடத்தில் (278/1B) - குப்பைகள் கொட்ட எந்த இடமும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான வரைபடம் மற்றும் ஆவணங்கள் ஆதாரத்துடன், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை, ஆகஸ்ட் 31 அன்று மாவட்ட ஆட்சியரிடமும், செப்டம்பர் 02 அன்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி அலுவலகத்திடமும் மனு வழங்கியது.
ஒரு மாதம் ஆகியும் எந்த பதிலும் கிடைக்கப் பெறாததால், அக்டோபர் 05 அன்று - மீண்டும் ஊழல் எதிர்ப்பு இயக்கம், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது.
இதற்கிடையே, காயல்பட்டினம் நகராட்சியின் 05வது வார்டு உறுப்பினர் ம.ஜஹாங்கிர், அக்டோபர் 12 அன்று - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் வழங்கிய மனுவில், அக்டோபர் 05 அன்று - ஊழல் எதிர்ப்பு இயக்கம் வழங்கிய மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் தவறு என்றும், பயோ காஸ் திட்டப் பணிகள், தென் மேற்கு கோடி பகுதியில்தான் நடைபெறுகிறது என்றும், இதுகுறித்து கள ஆய்வு செய்யும்படியும் கோரியுள்ளார்.
காயல்பட்டினம் நகராட்சியின் 05ஆவது வார்டு உறுப்பினரின் இந்த கோரிக்கையை ஊழல் எதிர்ப்பு இயக்கம் வரவேற்கிறது.
அப்படியான கள ஆய்வின் மூலம்தான்,
(1) பயோ காஸ் திட்டப் பணிகள், அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் அமைந்துள்ளதா?
(2) மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியுள்ள அனுமதி நிபந்தனைகளின் படியும், டெண்டர் ஆவணம் படியும், சர்வே எண் 278/!B இடத்தில், குப்பைகள் கொட்ட முடியுமா?
போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
எனவே, இது குறித்து தெளிவான விளக்கம் அளிக்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை, ஊழல் எதிர்ப்பு இயக்கம், சென்னை அமைப்பின் - காயல்பட்டினம் கிளை மீண்டும் வலியுறுத்துகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|