தீர்மானம் இயற்றப்பட்டும் புதிய சாலைகள் அமைக்கப்படாமலிருக்கும் இடங்களில் விரைந்து புதிய சாலைகளை அமைக்குமாறும், இரண்டாவது பைப்லைன் திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - மனிதநேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்டத்திற்கான ஒருங்கிணைந்த பொதுக்குழுக் கூட்டத்தில் காயல்பட்டினம் நகராட்சிக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - மனிதநேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்டத்திற்கான ஒருங்கிணைந்த பொதுக்குழுக் கூட்டம், 11.10.2015 ஞாயிற்றுக்கிழமையன்று 18.30 மணியளவில், தமுமுக காயல்பட்டினம் நகர கிளை அலுவலக மாடியில் நடைபெற்றது.
மமக மாநில அமைப்புச் செயலாளர் ஜோஸப் நொலாஸ்கோ தலைமை தாங்கினார். தென்மண்டல தேர்தல் அதிகாரி சிவகாசி முஸ்தஃபா, தமுமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் யூஸுஃப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - தலைமைக்குக் கட்டுப்படல்:
மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் மாவட்ட - நகர கிளை நிர்வாகிகள் தலைமைக்குக் கட்டுப்பட்டு எப்போதும் போல் செயல்பட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 - புதிய சாலைகள் அமைக்க கோரிக்கை:
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து சாலைகளும், நகராட்சியால் தீர்மானம் போடப்பட்டும் சாலை போடப்படாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி, அனைத்து சாலைகளையும் விரைவாகப் போட வேண்டும் என்று காயல்பட்டினம் நகராட்சியை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3 - இரண்டாவது பைப்லைன் திட்டம்:
இரண்டாவது பைப்லைன் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று காயல்பட்டினம் நகராட்சியை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தகவல் & படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
தமுமுக - மமக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |