காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்புகள் இணைந்து, “வெற்றியை நோக்கி...” எனும் தலைப்பில் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியை நடத்த, நகர பள்ளிகளின் மாணவ-மாணவியர் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்து, இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
நவீனங்கள் மிகைத்து விட்ட இக்காலத்தில், கல்வியின்றி- அதுவும் உயர் கல்வியின்றி முன்னேற்றத்தை அடைந்துவிட முடியாது. அம்முன்னேற்றத்தை அடையச் செய்திடும் உயர்கல்வி எது என சரிவர தெரியாமலேயே- எதிர்காலத்தைப் பற்றிய சரியான திட்டமிடல் இல்லாமலேயே மாணவர்கள் பலர், கல்லூரியில் ஏதோ ஒரு படிப்பில் சேர்ந்து விடுகின்றனர். இதனால், முன்னேற்றம் எதிர்பார்த்த அளவில் அமையாமலோ அல்லது முற்றிலும் இல்லாமலோ போய் விடுகிறது.
இக்குறையைக் களைந்திட, பெரு நகரங்களில் தேவையான வழிகாட்டு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. அதே போன்ற கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியை (Career Guidance Programme ) காயல்பட்டினத்திலும் நடத்தி, இந்நகர மாணவ சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்புகள் இணைந்து, காயல்பட்டினம் நகர பள்ளிகளின் 10 முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ-மாணவியருக்காக, “வெற்றியை நோக்கி...” எனும் தலைப்பில் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியை, 06.09.2015 ஞாயிற்றுக்கிழமையன்று, காலை 11.00 மணியளவில், காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) மைதானத்தில் நடத்தின.
இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே. கலீல், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் பிரதிநிதியும் - இக்ராஃவின் மக்கள் தொடர்பாளருமான ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர் ஹாஃபிழ் எம்.எஸ்.உஸைர் மிஸ்கீன் ஸாஹிப் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, இக்ராஃ கல்விச் சங்கம், காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) ஆகியவற்றின் செயற்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய - KCGC அமைப்பின் தலைவர் ஹாஜி ஆடிட்டர் அஹமது ரிஃபாய் C.A., நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
''வெற்றியை நோக்கி....'' என்ற தலைப்பிலான இந்த கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியை இக்ராஃ கல்விச் சங்கம் - KCGC இணைந்து நடத்துவதில் மகிழ்ச்சியடைவதாகவும், காயல்பட்டினம் நகரிலுள்ள மாணவ-மாணவியர் கல்வியில் சிறந்தோங்குவதற்காகவும், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைத் தேடி அவர்கள் சென்னை நகருக்கு வருகையில் தேவையான அனைத்து வழிகாட்டல்களையும், இயன்றளவு ஒத்துழைப்புகளையும் செய்துகொடுப்பதற்காகவும் KCGC துவக்கப்பட்டதாகவும், அமைப்பு துவங்கிய காலம் தொட்டு இன்றளவும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பாக பல்வேறு வழிகாட்டு நிகழ்ச்சிகளையும், பயிற்சி வகுப்புகளையும் மாணவர்களுக்காக சென்னையில் நடத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
காயல்பட்டினத்திலும் தொடர்ந்து அதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்திட ஆவல் கொண்டுள்ளதாகவும், நமதூர் மாணவ- மாணவியர் இந்த அரிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமெனவும் கேட்டுக்கொண்ட அவர், இதுபோன்ற அரிய நிகழ்ச்சிகளுக்கு மாணவ-மாணவியர் காலம் தாழ்த்தாமல் குறித்த நேரத்தில் வந்தால்தான் பயனுள்ளதாக இருக்கும் எனவும், வரும்காலங்களில் நேரம் தவறாமையை சரிவர கடைபிடிக்குமாறும் மாணவர்களை கேட்டுக்கொண்டு, கல்வி வழிகாட்டு உரையாற்ற வந்த சிறப்பு விருந்தினர்களையும் அறிமுகப்படுத்திப் பேசினார்.
துவக்கமாக, “இளங்கலை / முதுகலை பட்ட மேற்படிப்பு & ஆராய்ச்சி தொடர்பான துறைகள் - அரசு மானியத்துடன்” எனும் தலைப்பில் பாளையங்கோட்டை ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் விலங்கியல் துறை (Department of Zoology ) துணைப் பேராசிரியர் முனைவர் அ. அஜாஸ் ஹாஜா முஹைதீன் M.Sc., M.Phil., Ph.D., உரையாற்றினார்.
பத்தாம் - பன்னிரண்டாம் வகுப்புகளை நிறைவு செய்த பின், மாணவர்கள் அவரவர் தேவைக்கேற்ப என்னென்ன உயர்கல்விப் பிரிவுகளில் - அரசு மானியத்தையும் பெற்று கல்வி கற்கலாம் என்பன குறித்த விரிவான தகவல்கள் பலவற்றை உள்ளடக்கியதாக அவரது உரை அமைந்திருந்தது.
அவரது உரையின் இடையிடையே தற்போது மாணவர்கள் மத்தியில் கடைபிடிக்கப்பட்டு வரும், தவிர்க்க வேண்டிய சில பழக்க வழக்கங்களை அவருக்கேயுரிய நகைச்சுவையுடன் எடுத்துக்கூறி மாணவர்களுக்கு அறிவுரையும் வழங்கினார். குறிப்பாக மாணவர்களை நேரான, சரியான பாதைக்கு இட்டுச் செல்வதில் பெற்றோர்களுக்கு உள்ள முக்கியமான பங்கை உதாரணங்களுடன் எடுத்துரைத்தார்.
மாணவர்களுக்கான முதல் ஆசிரியர் பெற்றோர்தான் எனவும், இரண்டாவதுதான் பள்ளிக்கூட ஆசிரியர் எனவும், பள்ளி , கல்லூரிகளில் 5 மணி நேரம்தான் மாணவர்கள் ஆசிரியர்களுடன் இருப்பதாகவும், அந்த நேரங்களில் மட்டும்தான் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுக்கவும், வழிகாட்டவும் செய்கிறார்கள்.மற்ற பெரும்பாலான நேரங்களில் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகளை பெற்றோர்கள்தான் உன்னிப்பாக கவனித்து அவர்களை நேரான, சரியான பாதைகளில் கொண்டு செல்ல திட்டமிடல் வேண்டும் எனவும் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் மாணவர்களுக்கு தேவையான விளக்கங்கள், சந்தேகங்களுக்கு தாம் எப்போதும் பதிலளிக்க தயார் எனவும், ஆலோசனைகள் தேவைப்படுவோர் தம்மை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பேசலாம் என்று கூறி அவரது அலை பேசி எண்ணையும் மாணவர்களுக்கு கூறி ஆர்வப்படுத்தினார்.
அவரைத் தொடர்ந்து, “பட்டய கணக்காளர் - Charted Accountant (CA) படிப்பிற்கான வழிகாட்டல்” எனும் தலைப்பில், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC) நிறுவனத்தின் நிதி இயக்குநருக்கான தொழில்நுட்பச் செயலாளர் ஆடிட்டர் அ.ஹரி பிரசாத் C.A., பேசினார்.
CA படிப்பு இன்றைய மாணவர்கள் பலர் எண்ணுவதைப் போல கடினமான ஒன்றல்ல என்றும், ஆர்வத்துடனும், தன்னம்பிக்கையுடனும் கற்போருக்கு இது மிகவும் எளிய படிப்பே என்றும் குறிப்பிட்ட அவர், வணிகவியல் ( commerce) மாணவர்கள் மட்டுமல்ல, அறிவியல் (Science) பாடத்தை எடுத்து படிக்கும் மாணவர்கள் கூட CA படிக்கலாம் என்றும், இன்னும் சொல்லப்போனால் தான் பணியாற்றும் நிறுவனத்தில் பொறியியல் (B.E.,) படித்த பலர் CA படித்து Chartered Accountant ஆக பணியாற்றி வருவதாகவும், சென்னையிலுள்ள மிகப்பெரிய மருத்துவமனையொன்றில் மருத்துவராக (Cardiologist) பணியாற்றும் ஒரு மருத்துவர் CA படித்துள்ளதாகவும் கூறி இது ஒரு கவுரவமான படிப்பு என்றும் , 5 ஆண்டுகள் இதனை நல்ல முறையில் படித்து முடித்தால் இதற்கான வேலை வாய்ப்புகள் (உலக அளவில் குறிப்பாக அரபு நாடுகள் உட்பட) பிரகாசமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
வேலை கிடைத்ததும் திருப்திகரமான ஊதியத்துடன், நிம்மதியான வாழ்க்கையை தரவல்லது இந்த CA படிப்பு என்றும், ஆங்கிலம் மீடியம் மட்டுமல்ல; தமிழ் மீடியம் மாணவர்கள் கூட CA படித்து பிரகாசிக்கலாம் என்றும், இதற்கு தானே ஒரு எடுத்துக்காட்டு என்றும் கூறினார்.
அத்துடன் இந்த ஆண்டு +2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற இரண்டு மாணவியரும் CA படிப்பை தேர்ந்தேடுத்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் மாணவர்கள் இதில் கவனம் செலுத்துமாறும், பிரகாசமான வாழ்க்கையை இதில் எதிர்பார்க்கலாம் என்றும் கூறி CA படிப்பிற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக விளக்கினார்.
அவரைத் தொடர்ந்து, “Paramedical & Diplamo in Medical Studies” எனும் தலைப்பில், சென்னை தரமணியிலுள்ள Hydrolina bio tech ltd. நிறுவனத்தின் Senior Technologist முனைவர் ஞானசங்கர் M.Sc., M.Phil., Ph.D., உரையாற்றினார்.
மருத்துவ துறைகளில் உள்ள, நமது கவனத்திற்கு வராத எண்ணற்ற படிப்புகள் பற்றியும், அதன் முக்கியத்துவம் மற்றும் பலன்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
உரைகளைத் தொடர்ந்து, மாணவ-மாணவியர் தமது சந்தேகங்களை எழுத்து மூலமாகவும், நேரடியாகவும் கேட்க, உரையாற்றிய பல்துறை நிபுணர்கள் அவற்றுக்கு நீண்ட நேரம் விளக்கமளித்துப் பேசினர்.
இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் நன்றி கூற, துஆவைத் தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இக்ராஃ கல்விச் சங்க துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகரிலுள்ள சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய 7 பள்ளிகளிலிருந்து மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ- மாணவியர் அனைவரும் நிகழ்ச்சியின் இறுதி வரையில் ஆர்வமுடனும், அமைதியுடனுமிருந்து அவதானித்ததனர். மதியம் 2 மணியளவில் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை - இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகளும், அங்கத்தினரும், சமூக ஆர்வலர்களும் இணைந்து செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இக்ராஃ கல்விச் சங்கம் & KCGC சார்பாக,
N.S.E.மஹ்மூது
(மக்கள் தொடர்பாளர், இக்ராஃ கல்விச் சங்கம்)
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
KCGC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |