ஹாங்காங் நாட்டில், 24.09.2015 வியாழக்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. பெருநாளை முன்னிட்டு, அன்றிரவில், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி - மழலையர் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எம்.செய்யித் அஹ்மத் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
ஹாங்காங் நாட்டில், செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி (ஹிஜ்ரி 1436 துல்ஹஜ் பிறை 10 அன்று) வியாழக்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
பெருநாள் ஒன்றுகூடல்:
பெருநாளை முன்னிட்டு, நமதூர் மக்கள் அனைவரையும் ஒன்றாகக் காணச் செய்து, மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதற்காக, கடந்தாண்டுகளைப் போல இவ்வாண்டும் நமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெருநாள் கொண்டாடப்பட்ட 24.09.2015 வியாழக்கிழமையன்று, ஹாங்காங் ஜோர்டனிலுள்ள இந்தியா கிளப்பில் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இரவு 07.30 மணியளவில் துவங்கிய இந்நிகழ்ச்சியை ஹாஃபிழ் மிஸ்கீன் சாகிப் ஆலிம் ஃபாசி அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். அமைப்பின் செயற்குழு உறுப்பினர் டி.செய்யது இஸ்மாயில் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர்.
தலைவர் உரை:
பேரவைத் தலைவர் ஜனாப். ஏ.டபிள்யூ. கிலுர் முஹம்மது ஹல்லாஜ் பேரவையின் செயல்பாடுகளை விளக்கிப் பேசினார். இதுவரை உறுப்பினர்களாகாதவர்கள் மற்றும் தமது உறுப்பினர் சந்தாக்களை செலுத்தாதவர்கள் செயற்குழு உறுப்பினர்களிடம் செலுத்தி தங்களை உறுப்பினர்களாக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
ஜனாப் ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா தனக்கே உரித்தான நகைச்சுவையோடும், நல்லுபதேசமாகவும் பேசினார்.
மழலையர் மகிழ்விப்பு:
கடந்த வருடம் போல், இவ்வாண்டும் குழந்தைகளுக்காக பல வண்ணங்களில், பல வகைகளில், பல வடிவங்களில் - அதற்கான சிறப்பு நிபுணரால் தயாரித்து வழங்கப்பட்டது. குழந்தைகள் விரும்பிய வண்ணங்களிலும், வடிவங்களிலும் பலூன்களை உடனுக்குடன் செய்து கொடுத்தது, அவர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. இந்த மகிழ்ச்சியை மழலையருக்கு அளிப்பதற்காகவென்றே இந்த ஏற்பாடு பேரவையின் சார்பில் கவனத்துடன் செய்யப்பட்டிருந்தது.
அத்தோடு, இந்த வருடம் மகிழ்விப்பாளர் ஒருவர் பல வித்தைகளை செய்து அனைவரையும் மகிழ்வித்தார். குழந்தைகளின் பல்சுவை நிகழ்ச்சிகளை ஹாஃபிழ் பி.எஸ். அஹமத் சாலிஹ் ஒருங்கிணைத்தார்.
பொதுநல நிதி சேகரிப்பு:
இந்த ஒன்றுகூடலைப் பயன்படுத்தி, பொதுநல நிதி சேகரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரும் தாராளமாக நிதி வழங்கினர். நிறைவில், அமைப்பின் பொது நிதிக்காக ரூபாய் 38 ஆயிரம் தொகையும், ஜகாத் நிதிக்காக ரூபாய் 20 ஆயிரம் தொகையும், மகளிரிடமிருந்து வருடாந்திர பங்களிப்பாக ரூபாய் 42 ஆயிரம் தொகையும், சேகரிக்கப்பட்டது.
சிற்றுண்டி:
இந்நிகழ்ச்சியில், ஹாங்காங் மற்றும் சீனா வாழ் காயலர்கள் சுமார் 300 பேர் ஆர்வத்துடன் திரளாகக் கலந்துகொண்டனர். பல நாடுகளிலிருந்து வந்திருந்த காயலர்கள் சிறப்பழைப்பாளர்களாகவும் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சுவையான ரோஸ் மில்க் மற்றும் தின்பண்டங்கள் பரிமாறப்பட்டன.
துணைத் தலைவர் ஹாஜி பி.எஸ்.ஷாஹுல் ஹமீத் நன்றி கூற, ஹாஃபிழ் வி.எம்.டீ.முஹம்மத் ஹஸன் அவர்களின் இறை வேண்டலுடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுற்றன.
மொத்தத்தில், பெருநாளையடுத்த இரவுப் பொழுது அனைவருக்கும் இன்பமாகக் கழிந்தது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!
இவ்வாறு, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) ஹாங்காங் பேரவை சார்பில் நடத்தப்பட்ட ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாங்காங் பேரவை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|