ஏரல் அருகே இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில், இளம்பெண் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 24 பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடியில் இருந்து அரசு பஸ் ஒன்று, 10.10.2015 சனிக்கிழமையன்று மதியம் நாசரேத்துக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. மேல ஆத்தூரைச் சேர்ந்த முருகானந்தம் (43) என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். தூத்துக்குடியைச் சேர்ந்த பொன்னம்பலம் (54) எனபவர் கண்டக்டராக இருந்தார். மதியம் 3 மணியளவில் ஏரல் அருகே உள்ள வாழவல்லான் குடிநீர் வடிகால் வாரிய நீரேற்று நிலைய ‘எஸ்‘ வளைவு பகுதியில் அந்த பஸ் வந்தது. அப்போது ஏரலில் இருந்து ஒரு மினி பஸ் வந்து கொண்டிருந்தது.
எதிர்பாராதவிதமாக அரசு பஸ்சும், மினி பஸ்சும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. அப்போது மினி பஸ்சின் பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் கணவனும், மனைவியும் வந்து கொண்டிருந்தனர். அந்த மோட்டார் சைக்கிள், விபத்துக்குள்ளான மினி பஸ்சின் அடியில் புகுந்தது. அதிர்ஷ்டவமாக மோட்டார் சைக்கிளில் இருந்த தம்பதியர் உயிர் தப்பினர்.
இந்த விபத்தில் மினி பஸ்சில் இருந்த 25 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்- இன்ஸ்பெக்டர் ராஜாமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 108 ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு, காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக ஏரல், ஆத்தூர், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடியில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் மினி பஸ்சில் பயணம் செய்த ஏரல் அருகே உள்ள மாரமங்கலத்தைச் சேர்ந்த முருகன் மனைவி ஜெயலட்சுமி (44), காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹாஜரா பானு (35), தெற்கு மரந்தலையைச் சேர்ந்த தனுஷ்கோடி மனைவி சரசுவதி (53) ஆகிய 3 பேரின் கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு, மிகவும் பலத்த காயம் அடைந்தனர்.
மேலும் நாகப்பட்டினம் மாவட்டம் மணக்குடியைச் சேர்ந்த சண்முகம் மகள் ராதா (20) என்பவரும் பலத்த காயம் அடைந்தார். அந்த 4 பெண்களுக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இளம்பெண் ராதா சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். மற்ற 24 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மினி பஸ் டிரைவரான பொற்செல்வனிடம் (27) விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவலில் உதவி:
தூத்துக்குடி ஆன்லைன்
படுகாயமுற்ற காயல்பட்டினம் கோமான் புதூரைச் சேர்ந்த ஹாஜரா பானுவுடன் அருகில் பயணித்த அவரது மகள் - 11ஆம் வகுப்பு பயின்று வரும் மஷ்கூரா (வயது 15)வின் மூக்கு எலும்புகள் நொறுங்கி, 6 பற்கள் உடைந்து விழுந்துவிட்டன. தற்போது அவர்கள், நாகர்கோவிலிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மிகவும் வறிய நிலையிலுள்ள அவர்களின் மருத்துவச் செலவினத்திற்காக, காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பு பொதுமக்களிடம் நிதி திரட்டி வருகிறது. அதன் சார்பில் மருத்துவமனையில் முதற்கட்டமாக செலுத்தப்பட்ட முன்பணத்தைக் கொண்டு, இருவருக்கும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. |