ஹாங்காங்கில் நடைபெற்ற பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், காயலர்கள் சிலர் சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர். விபரம் வருமாறு:-
ஹாங்காங் நாட்டில், Dhayal Hong Kong International Badminton Championship எனும் பெயரில், பாட்மிண்டன் விளையாட்டு சுற்றுப்போட்டிகள், ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், இந்திய பாட்மிண்டன் இரட்டையர் அணியின் முன்னாள் வீரருமான யுவா தயாளன் இயக்குநராக இருந்து, இச்சுற்றுப்போட்டியைப் பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.
நடப்பாண்டு போட்டிகள், 01.10.2015 வியாழக்கிமையன்று (சீனாவின் தேசிய நாள்), KWUN CHUNG MUNICIPAL SERVICES BUILDING, YAU MA TEI, KOWLOON, HONG KONG எனுமிடத்தில் நடைபெற்றது.
சுமார் 6 காயலர்கள் உட்பட, இந்தியா, நேபாளம், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 180 வீரர்கள் இதில் விளையாடினர். ஆண் - பெண்களுக்கு தனித்தனியே நடத்தப்பட்ட போட்டிகளில், ஆண்கள் பிரிவில், காயல்பட்டினம் ஆஸாத் தெருவைச் சேர்ந்த ஸலாஹுத்தீன் என்பவரது மகன் அர்ஷத் – அவருடன் இணைந்து விளையாடிய சீன நாட்டு வீரர் இருவரும் இறுதிப்போட்டி வரை முன்னேறி, அப்போட்டியில் வெற்றிவாய்ப்பை இழந்ததன் மூலம் இரண்டாமிடத்தைப் பெற்றனர்.
காயல்பட்டினம் கொச்சியார் தெருவைச் சேர்ந்த ஹாஜி எஸ்.எம்.கபீர் என்பவரது மகன் எஸ்.ஏ.கே.ஹம்தூன் அரையிறுதிப் போட்டி வரை முன்னேறி, அப்போட்டியில் வெற்றிவாய்ப்பை இழந்துள்ளார்.
பெண்கள் பிரிவு போட்டியில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த பர்வீன் ஃபாத்திமா (சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியை மஹ்பூப் நிஸாவின் சகோதரி மகள்) - ப்ரியா வெங்கட் இணை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில், ஹாங்காங் நாட்டிற்கான இந்திய தூதர் ப்ரசாந்த் அகர்வால் உள்ளிட்ட பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
பரிசளிப்பு விழாவின்போது, போட்டி இயக்குநர் யுவா தயாளன் தயாரிப்பில் உருவான பாட்மிண்டன் ரேக்கட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரேக்கட்டை - ஆண்ட்ராய்ட் கைபேசியில் இணைத்துக்கொள்வதன் மூலம், எத்தனை ஷாட்கள் அடிக்கப்பட்டுள்ளன என்பது உட்பட அதன் அனைத்து நடவடிக்கைகளையும் பதிவாகப் பெற்றுக்கொள்ள இயலும்.
உலகிலேயே முதன்முறையாக இந்த ரேக்கட் அறிமுகப்படுத்தப்படுவதாகவும், இந்தியாவின் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பீ.ஜெ.அப்துல் கலாம் நிறைவாக, அவரது பெயரில் அது அழைக்கப்படும் என்றும், ஒவ்வொரு ரேக்கட்டிலும் - திருக்குறளின் ஒரு குறள், அப்துல் கலாம் பொன்மொழிகளுள் ஒன்று ஆகியன தமிழில் பதியப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
ஹாங்காங்கிலிருந்து...
தைக்கா உபைதுல்லாஹ் |