காயல்பட்டினம் நகராட்சியின் முன்னாள் ஆணையர் ஜி.அசோக் குமார். ஏப்ரல் 27, 2012 அன்று காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையராக பொறுபேற்ற இவர், பிப்ரவரி 6, 2014 அன்று காயல்பட்டினம் நகராட்சியில் இருந்து மாற்றலானார். இவர் பொறுப்பில் இருந்த 21 மாத காலத்தில், பல்வேறு முறைக்கேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் இருந்தன.
காயல்பட்டினம் நகராட்சியின் கடந்த ஆண்டு பணி நீட்டிப்பு வழங்கப்படாத 11 ஒப்பந்தப் பணியாளர்களில் ஒருவர் - எம்.எஸ். நசீர் கான். இவர்
காயல்பட்டினம் நகராட்சியில் சுமார் 5 ஆண்டுகளாக கணினி இயக்குனராக, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தவர். இவரின் பணி நியமனம்
உட்பட - ஏனைய 11 ஒப்பந்தப்பணியாளர்களின் நியமனமும், முந்தைய நகர்மன்றம் பொறுப்பில் இருந்தப் போது, முறைக்கேடாக நடைபெற்றன
என்ற குற்றாசாட்டுக்கள் உள்ளன.
2013ம் ஆண்டு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள காயல்பட்டினம் நகராட்சியின் 0491 0100 0015 112 என்ற எண் கொண்ட வங்கி கணக்கில்
இருந்து, 525033 என்ற எண் கொண்ட காசோலை மூலம், நசீர் கான் என்ற நபருக்கு 1,19,800 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த காசோலை மூலமான பணம், மார்ச் 27, 2013 அன்று - நசீர் கான் என்பவரின் வங்கி கணக்கிற்கும் சென்றடைந்துள்ளது.
இந்த பண பரிவர்த்தனை குறித்து சில மாதங்களுக்கு முன்னர், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் விசாரணை செய்ததில், நசீர் கான் என்பவர்
காயல்பட்டினம் நகராட்சியின் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய கணினி இயக்குனர் என்றும், அந்த பணம் - நகராட்சிக்கு கணினி வாங்கப்பட்ட
வகைக்கு கொடுக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் தரப்பில் விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
கணினி வாங்க நகராட்சி தீர்மானம் இல்லாத பட்சத்தில் எவ்வாறு கணினி வாங்கியிருக்க முடியும் என்றும், அந்த கணினி எங்குள்ளது என்ற விபரம்
குறித்தும் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் அதிகாரிகளிடம் வினவியுள்ளார் என்று தெரிகிறது. தனது கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்
வழங்கப்படாதை அடுத்து, நகர்மன்றத் தலைவர் - தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறைக்கு (DIRECTORATE OF VIGILANCE AND ANTI-CORRUPTION;
DVAC), தன்னிடம் இருந்த ஆதாரங்களை கொண்டு, சில மாதங்களுக்கு முன்னர், புகார் மனு அனுப்பியிருந்தார் என்றும் தெரிகிறது.
நகர்மன்றத் தலைவரின் புகாரின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ள, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் வழங்கிய அனுமதியை தொடர்ந்து,
தூத்துக்குடியில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறை அதிகாரிகள் - விசாரணைகளை மேற்கொண்டனர். இந்த குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டுள்ள
அனைவரையும் விசாரித்த லஞ்ச் ஒழிப்பு துறை அதிகாரிகள், விசாரணையின் இறுதியில் - காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் ஆணையர்
ஜி. அசோக் குமார் (தற்போது வாலாஜாபேட் நகராட்சியில் ஆணையராக உள்ளார்) மற்றும் காயல்பட்டினம் நகராட்சியின் முன்னாள் ஒப்பந்தப்
பணியாளர் எம்.எஸ். நசீர் கான் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, தூத்துக்குடி தலைமை மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கையை (FIRST INFORMATION REPORT; FIR) தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த வழக்கில், தற்போது மூல ஆவணங்கள் - நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
|