கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில், அந்நாட்டில் நடத்தப்பட்ட ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில், அம்மன்றத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்து, அதன் செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
பெருநாள் ஒன்றுகூடல்:
கத்தர் நாட்டில், 24.09.2015 வியாழக்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, அன்று 16.30 மணியளவில், கத்தரிலுள்ள Corniche Museum Parkஇல் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு, கத்தர் காயல் நல மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரட்டை அமர்வு:
குறித்த நேரத்தில் நிகழ்விடத்தில் ஒன்றுகூடிய உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் அனைவரும், ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களைப் பரிமாறியவர்களாக, கட்டித் தழுவி, கைலாகு செய்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சிற்றுண்டியுபசரிப்பு:
கத்தரில் குடும்பத்துடன் வசிக்கும் காயலர்களின் தயாரிப்பில் கொண்டு வரப்பட்டிருந்த இஞ்சி தேனீர், சான்ட்விச் ஆகியன அனைவருக்கும் பரிமாறப்பட்டது. அரட்டையில் ஈடுபட்டவர்களாக சிற்றுண்டியை உட்கொண்டனர். மகளிர், அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த தனி இடத்தில் ஒன்றுகூடியமர்ந்து, அரட்டையில் மூழ்கினர். இவ்வாறாக, முதல் அமர்வு அரட்டை அரங்கமாகவே நிறைவுற்றது.
பொதுக்குழு:
மஃரிப் தொழுகைக்குப் பின், இரண்டாம் அமர்வு, மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டமாக நடைபெற்றது. மன்றத்தின் மூத்த உறுப்பினர் கே.வி.ஏ.டீ.ஹபீப் முஹம்மத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். அவர் ஓதிய வசனங்களுக்கான தமிழாக்கத்தை, செயற்குழு உறுப்பினர் கத்தீபு மாமுனா லெப்பை வழங்கினார்.
‘கவிமகன்’ காதர் வரவேற்புரையாற்றினார். தான் பஹ்ரைன் நாட்டிற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், கத்தர் காயல் நல மன்றத்தின் செய்தி தொடர்பாளராக இருந்த தனக்கு, மனப்பூர்வமாக ஒத்துழைப்பளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்து மகிழ்வதாகவும் அவர் கூறினார்.
வினாடி-வினா போட்டி:
இக்கூட்டத்தில் வேறு உரைகள் எதுவும் இல்லையென்றும், நேரடியாக கலகலப்பான நிகழ்ச்சிகளுக்குள் செல்லலாம் என்றும் செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் கூற, வினாடி-வினா போட்டி துவங்கியது. கத்தீபு மாமுனா லெப்பை, பொக்கு ஹுஸைன் ஹல்லாஜ் ஆகியோர் போட்டியை நடத்தினர்.
திருக்குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ்களை அணித் தலைவர்களாகக் கொண்டு, 5 அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன. இஸ்லாம், குர்ஆன், அரசியல், அறிவியல், விளையாட்டு, பொது அறிவு உள்ளிட்ட தளங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. பங்கேற்பாளர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் இப்போட்டியில் பங்கேற்று, விடையளித்தனர்.
தேனிசை:
கத்தர் காயல் நல மன்றத்தின் ஒன்றுகூடல் என்றாலே, அதில் தலைமை எப்படி தவறாமல் இடம்பெறுமோ அதுபோல, ‘கவிக்குயில்’ ஃபாயிஸின் இஸ்லாமிய கீதமும் இடம்பெறும். அந்த அடிப்படையில், அழகிய பாடலொன்றை அவர் பாடி, அனைவரின் மனதுகளையும் குளிர்வித்தார்.
இவ்வாறாக, ஒன்றுகூடல் நிகழ்முறைகள் அமைந்திருந்தன. மன்றச் செயலாளர் நன்றி கூறினார். இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை முன்னின்று செய்த எஸ்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் என்ற மம்மி, ஹாஃபிழ் முஹம்மத் லெப்பை ஆகியோருக்கு அவர் சிறப்பு நன்றியைத் தெரிவித்தார்.
மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை ஜுமானீ பாக்கவீ துஆவைத் தொடர்ந்து, ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டவர்களாக, மாறாத நினைவுகளுடன் - வேண்டாவெறுப்பாக அனைவரும் வசிப்பிடம் திரும்பிச் சென்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி - கத்தர் காயல் நல மன்றம்)
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) கத்தர் காயல் நல மன்றத்தால் நடத்தப்பட்ட ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |