அக்டோபர் 21ஆம் நாளான இன்று உலக அயோடின் சத்துக் குறைபாடு நோய் தடுப்பு விழிப்புணர்வு நாளாகும். இதனை முன்னிட்டு, காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, இன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
தலைமை மருத்துவர் டாக்டர் ராணி, உதவி மருத்துவர் ஜேஃப்ரி, சித்தா மருத்துவர் செல்வ குமார் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று விழிப்புணர்வு உரைகளாற்றினர்.
அயோடின் கலக்காத உப்பைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து அவர்கள் விளக்கிப் பேசினர்.
அயோடின் கலக்காத உப்பைப் பயன்படுத்துவதால், பொதுவாகவும் – குறிப்பாக பெண்களுக்கும் ஏற்படும் பல்வேறு நோய்களிலிருந்து அவர்களைத் தடுக்கலாம் என்று கூறிய அவர்கள், அயோடின் கலக்காத உப்பை உட்கொள்வதால் கருவிலிருக்கும் குழந்தை குறையுடன் பிறக்க வாய்ப்புள்ளதாகவும், செவித்திறன் பாதிக்கப்படலாம் என்றும் கூறினர்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவமனையின் புறநோயாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில், அவர்கள் சந்தேகங்களைக் கேட்க, மருத்துவர்கள் அவற்றுக்கு விளக்கமளித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருந்தாளுநர் ஸ்டீஃபன், தலைமைச் செவிலி செல்வி, துணைச் செவிலி சாந்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
கள உதவி:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
காயல்பட்டினம் அரசு மருத்துவமனை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |