இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுவில், வரைபடத்துடன் புதிய கட்டிட வடிவமைப்பு குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, அதன் சேவைகளை விளக்கி வண்ணப் பிரசுரம், இணையதளம் ஆயத்தம் செய்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
செயற்குழுக் கூட்டம்:
இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், 05.10.2015 திங்கட்கிழமையன்று மாலை 08.00 மணியளவில், கீழ நெய்னா தெருவிலுள்ள கலீஃபா அப்பா தைக்கா வளாகத்தில் நடைபெற்றது. இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், ஹாஜி பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஜித்தா காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் அரபி ஷுஐப் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - இக்ராஃ தலைவரும் - கத்தர் காயல் நல மன்றத் தலைவருமான எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அண்மைச் செயல்பாடுகள்:
இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் - இக்ராஃவின் அண்மைக்கால செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். அவரது உரைச் சுருக்கம்:-
கல்வி உதவித்தொகை:
>>> இக்ராஃ கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், Arts & Science, Diplomo courses பயில உதவித்தொகை பெற விண்ணப்பித்த மாணவ-மாணவியருக்கான நேர்காணல் 02-08-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இக்ராஃவின் துணைத்தலைவர் ஹாஜி எஸ்.ஏ.அஹமது ரஃபீக், மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், ஆகியோர் மாணவ -மாணவியரை நேர்காணல் செய்தனர். நடப்பு 2015-2016 கல்வியாண்டில், B.A., B.B.A., B.C.A., B.Com (Finance), B.Sc (Hotel Management), B.Sc(Comp.Science), B.Sc.(IT), B.Sc (Nutrition), Dip. in Mechanical போன்ற படிப்புகளைப் பயிலும் 14 மாணவர்கள், 28 மாணவியர் என மொத்தம் 42 பேர் கல்வி உதவித்தொகை பெற தேர்ந்தெடுக்கப்பட்டு, இவர்களுக்கான கல்வி உதவித்தொகை மொத்தம் ரூபாய் 3,10,000/- அடுத்த சில தினங்களில் வழங்கி முடிக்கப்பட்டன.
நடப்பு கல்வியாண்டில் தேவைப்படும் 42 பேருக்கான கல்வி உதவித்தொகைக்காக, காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் அனுசரணையளித்துள்ளனர். (பட்டியல் வாசிக்கப்பட்டது.) இக்ராஃ வரலாற்றிலேயே முதன்முறையாக, நடப்பாண்டில் இக்ராஃவின் தலைமைப் பொறுப்பேற்றுள்ள கத்தர் காயல் நல மன்றம் சார்பில் 31 மாணவ-மாணவியருக்கு ரூபாய் 1,57,000/- கல்வி உதவித்தொகை அனுசரணை பெறப்பட்டுள்ளது. (அனைவரும் தக்பீர் முழக்கத்துடன் அதை வரவேற்றனர்.)
ஜகாத் நிதியின்கீழ் கல்வி உதவித்தொகை:
ஜகாத் நிதியின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பதாரர் நேர்காணல் 20-09-2015 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்றது. இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக் தம்பி, ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக் ஆகியோர் மாணவ-மாணவியரை நேர்காணல் செய்தனர். நிறைவில், B.E.(Mech), B.E(Civil), B.E.(Automobile), E.E.E., B.Tech (IT), Computer Networking, C.A., B.B.A., B.Sc(Nursing), B.Ed., BPT- (Physiotherapy) போன்ற படிப்புகளைப் பயிலும் 24 மாணவர்கள், 4 மாணவியர் என மொத்தம்28 பேர் கல்வி உதவித்தொகை பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மொத்த கல்வி உதவித்தொகை ரூபாய் 2,36,000/- அடுத்த மூன்று தினங்களில் வழங்கி முடிக்கப்பட்டது.
அரசுப்பதிவு புதுப்பிப்பு:
>>> இக்ராஃவின் அரசுப் பதிவு மற்றும் கணக்குத் தணிக்கை நடைமுறைகள் (2014-15) முறைப்படி புதுப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவியரை - 2015:
>>> தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புடன் இணைந்து, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவியரை – 2015” நிகழ்ச்சி, 05.09.2015 சனிக்கிழமை அன்று காலை காயல்பட்டினம், காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் நமது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு அஸ்வின் கோட்னிஸ் IPS சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியின் பரிசளிப்பு விழாவில், வழங்கப்பட்ட பரிசுகள் விபரம், அப்பரிசுகளுக்கு அனுசரணையளித்தோர் பட்டியல் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி:
>>> அதே மேடையில் மறுநாள் காலையில் இக்ராஃ - காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்புடன் இணைந்து, “வெற்றியை நோக்கி...” எனும் தலைப்பில் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
வினாடி-வினா போட்டி:
அன்று மாலையில், கத்தர் காயல் நல மன்றம் தலைமையில், இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து - நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டுள்ளது.
>>> “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவியரை - 2015”, கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி, வினாடி-வினா போட்டி உள்ளிட்டவற்றுக்கான வரவு-செலவு கணக்கறிக்கை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது.
>>> குறைந்த கால அவகாசமே இருந்தபோதிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, மாணவ-மாணவியர் நலன் கருதி நடத்தப்பட்ட “வெற்றியை நோக்கி...” எனும் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி மிகுந்த பயனுள்ளதாக இருந்தபோதிலும், அதில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது குறித்து கூட்டத்தில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டம் நடத்தி, கருத்துப் பரிமாற தீர்மானிக்கப்பட்டது.
>>> இக்ராஃவின் 2015-2016க்கான நிதிநிலையறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இப்பருவத்தில், உறுதி செய்யப்பட்டுள்ள வருமானம் தவிர, 1 லட்சம் ரூபாய் வரை தட்டுப்பாடு உள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. உள்ளூரில், பெண் பொறுப்பாளர்களைக் கொண்டு வீடு வீடாக இக்ராஃவின் கல்விச் சேவைகள் குறித்து விளக்கி, நன்கொடை பெற்று வருமானத்தைப் பெருக்கிட ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
வருங்கால செயல்திட்டங்கள்:
>>> இக்ராஃவின் அடுத்த செயல்திட்டங்களாக சில அம்சங்கள் பின்வருமாறு முன்வைக்கப்பட்டன:-
அனைத்துப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூட்டம்:
(1) நகரின் அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடன் சிறப்புக் கூட்டம் நடத்தி, மாணவ-மாணிவயரின் தற்போதைய மனநிலை, அவர்களது கல்வி முன்னேற்றத்திற்காக செய்யப்பட வேண்டிய மேல்நடவடிக்கைகள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை ஊக்கப்படுத்தல்:
(2) TNPSC உள்ளிட்ட அரசு போட்டித் தேர்வுகளில் மாணவர்களை அதிகளவில் பங்கேற்கச் செய்திடத் தேவையான வழிகாட்டல்களைச் செய்திடவும், அதற்கென தனி இடவசதி செய்திடவும் வேண்டும்.
சேவை விளக்கப் பிரசுரம்:
(3) இக்ராஃவின் வரலாறு, நோக்கம், இதுவரை செய்து முடிக்கப்பட்டுள்ள சேவைகள், வருங்கால செயல்திட்டங்களை அழகுற விளக்கும் வகையில் விபரப் பிரசுரம் ஒன்றை வண்ணத்தில் அச்சடித்து ஆயத்தம் செய்தல், இதே உள்ளடக்கத்தைக் கொண்டு இணையதளம் ஒன்றைத் துவக்கல் ஆகியவற்றை, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் வழிகாட்டலில் செய்திட தீர்மானிக்கப்பட்டது.
வண்ணப் பிரசுரம் ஆயத்தமாகும் வரை காத்திராமல், துவக்கமாக சாதாரண பிரசுரம் ஒன்றை ஆயத்தம் செய்து, பொதுமக்களிடையே வினியோகிக்க தீர்மானிக்கப்பட்டது.
புதிய கட்டிடம்:
(4) இக்ராஃவுக்கென வாங்கப்பட்டுள்ள சொந்த நிலத்தில், விரைவில் கட்டிடம் கட்டுவதற்குத் தேவையான கூடுதல் ஆலோசனைகள், கருத்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது.
வரைபடத்துடன் கலந்தாலோசனை:
புதிய கட்டிடம் குறித்து, தாம் ஆயத்தம் செய்து வைத்துள்ள திட்ட வரைபடத்தை, கத்தார் காயல் நல மன்றம் மற்றும் இக்ராஃவின் தலைவரான எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் கூட்டத்தில் விரிவாக விளக்கிப் பேசினார். அப்போது பங்கேற்பாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட சில ஆலோசனைகளையும் கருத்திற்கொண்ட அவர், அதற்கேற்ப திட்ட வரைபடம் சிறிது மாற்றி வடிவமைக்கப்படும் என்று கூறினார். இவ்வாறாக வருங்கால செயல்திட்டங்கள் குறித்த கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
ஆயுட்கால உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரித்தல்:
கட்டிடப் பணிகள் துரிதமாக துவக்கப்படவுள்ளதால், இன்னும் கூடுதல் தொகையைப் பெற்றிடுவதற்காக – இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினர்கள் (Life Members) எண்ணிக்கையை, இன்னும் 50 பேர் என அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டது.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றம்:
இவ்வாறாக, இக்ராஃ நிர்வாகியின் உரையின் கீழ் தகவல்கள் இடம்பெற்றன. பின்னர், கூட்டத்தில் பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றம் செய்திட நேரம் ஒதுக்கப்பட்டது.
கல்விக் கடன்:
கத்தார் காயல் நல மன்றத்தின் துணைத்தலைவர் எம்.என்.முஹம்மது யூனுஸ், ''வருங்காலங்களில் இக்ராஃ மூலம் கல்விக் கடன் வழங்கிட முயற்சி செய்திட வேண்டுமெனவும், இதனால் கல்வி உதவித்தொகை வாங்கிட வெட்கப்படும் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடன் உதவி பெற்று பலன் பெறுவார்கள் எனவும், இக்ராஃவுக்கும் அனுசரணை பெறுவதில் ஏற்படும் பெரிய சுமை குறையும் என்றும் கருத்து தெரிவித்தார். இதனை மீண்டும் ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
நேரந்தவறாமை:
கூட்டம் நடத்திட நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு நிமிடம் கூட முந்தாமலும், பிந்தாமலும் கூட்டத்தைத் துவக்கினால்தான், குறித்த நேரத்தில் வருவோருக்கு தகுந்த மரியாதை அளிப்பதாக அது அமையும் என்றும், கூட்டம் சிறப்புற நடைபெறும் என்றும், கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் வி.எம்.டீ.அப்துல்லாஹ் கருத்து தெரிவித்தார்.
அதை வழிமொழிந்து பலர் பேசினர். இக்ராஃ மூத்த செயற்குழு உறுப்பினர் ஹாஜி டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், “மூத்த உறுப்பினர்கள் பலர் அவர்களுக்குள்ள பல்வேறு உடல் நலக் குறைவுகளைக் கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் வந்துவிடுவதாகவும், தாமதமாக வருவோர் - அவர்களின் பலவீனத்தைக் கருத்திற்கொண்டு குறித்த நேரத்தில் வந்து கூட்டத்தை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறினார்.
இனி வருங்காலங்களில், கூட்டத்தை - அறிவிக்கப்பட்ட நேரத்தில் சரியாக துவக்கி நடத்திடவும், விரிவான பட்டியல்களை நீண்ட நேரம் வாசித்துக் கொண்டிராமல், அவற்றை அச்சிட்டு, கூட்டம் துவுங்கும் முன்பாகவே அதை அனைவருக்கும் வினியோகம் செய்வதன் மூலம், நேர விரயத்தைக் கட்டுப்படுத்திடவும் முடிவு செய்யப்பட்டது.
தலைவர் பொறுப்புக் காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டித்தல்:
சுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழ் இக்ராஃ நிர்வாகம் இதுவரை ஒரு சுழற்சியை நிறைவு செய்துள்ளதாகவும், பொறுப்பெடுக்கும் தலைவர்கள் சிறந்த முறையில் செயல்படுவதற்காக, அடுத்த தவணையிலிருந்து - தலைவருக்கான பொறுப்புக் காலத்தை கூடுதலாக ஓராண்டு நீட்டித்து, 2 ஆண்டுகள் கால அளவைக் கொண்டதாக அமைத்திடலாம் என இக்ராஃ தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் கருத்து தெரிவிக்க, அனைவரும் அதை ஆமோதித்தனர். இதர காயல் நல மன்றத்தின் கருத்தையும் கேட்பதென முடிவு செய்யப்பட்டது.
தீர்மானங்கள்:
கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - நிகழ்ச்சி செலவுகளுக்கு ஒப்புதல்:
“சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவியரை – 2015” மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்கான – கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவு கணக்குகளுக்கு இக்கூட்டம் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது.
தீர்மானம் 2 - சேவை விளக்கப் பிரசுரம்:
இக்ராஃவின் வரலாறு, நோக்கம், இதுவரை செய்து முடிக்கப்பட்டுள்ள சேவைகள், வருங்கால செயல்திட்டங்களை அழகுற விளக்கும் வகையில் விபரப் பிரசுரம் ஒன்றை வண்ணத்தில் அச்சடிப்பதெனவும், இதனை ஆயத்தம் செய்வதற்கான செலவுகளுக்கு இக்கூட்டம் அங்கீகாரம் அளிப்பதோடு, இதே உள்ளடக்கத்தைக் கொண்டு இணையதளம் ஒன்றை விரைவில் துவக்கிடவும், இதனை தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் அவர்களின் வழிகாட்டலில் செய்திடவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - வீடு வீடாக நன்கொடை சேகரித்தல்:
இக்ராஃவின் வருமானத்தைப் பெருக்குவதற்காக, அதன் சேவைகளை விளக்கி - நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பெண் பொறுப்பாளர்களைக் கொண்டு வீடு - வீடாகச் சென்று நன்கொடை சேகரிக்கவும், இந்தப் பெண் பணியாளர்களுக்கு கமிஷன் அடிப்படையில் ஊதியம் அளிக்கலாம் எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 - ஒத்துழைத்தோருக்கு நன்றி:
இக்ராஃவின் பொது மற்றும் ஜகாத் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகைக்காக அனுசரணையளித்தோர், நிதி வழங்கியோர், மாணவ-மாணவியர் நேர்காணல்களை நடத்தியோர், “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவியரை - 2015” நிகழ்ச்சி செலவினங்களில் பங்கேற்றோர், அதன் பரிசு வகைகளுக்கு அனுசரணையளித்தோர், ''வெற்றியை நோக்கி....'' கல்வி நிகழ்ச்சியை இக்ராஃவுடன் இணைந்து நடத்திய காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அங்கத்தினர்கள், நிகழ்விட ஏற்பாடு செய்து தந்த காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC), இக்ராஃவின் அனைத்து கலந்தாலோசனைக் கூட்டங்களுக்கும், நேர்காணல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் தொடர்ந்து இடவசதி செய்து தந்துகொண்டிருக்கும் கலீஃபா அப்பா தைக்கா நிர்வாகத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக, இக்ராஃவின் செயலர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் நன்றியுரையைத் தொடர்ந்து, துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் துஆ பிரார்த்தனை செய்ய, ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் இரவு 10:15 மணியளவில் இறையருளால் இனிதே நிறைவுற்றது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
N.S.E.மஹ்மூது
(மக்கள் தொடர்பாளர் - இக்ராஃ கல்விச் சங்கம்)
இக்ராஃ கல்விச் சங்கத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |