காயல்பட்டினம் நகராட்சி மூலம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ள 21.60 லட்ச ரூபாய் மதிப்பிலான தெரு விளக்குகள் பராமரிப்பு
பணிகளுக்கான வேலை ஆணையை, மேலும் ஓர் ஆண்டிற்கு - 10 சதவீத உயர்வுடன் - நீட்டிக்க அனுமதி வழங்க கூட்டம் நடத்திட கோரி - தமிழ்நாடு மாவட்ட
நகராட்சிகள் சட்டம் 1920 இன் தொகுப்பு 3, விதிமுறை 3(2) படி, உறுப்பினர்கள் - நகர்மன்றத் தலைவருக்கு - அக்டோபர் 5 அன்று - கடிதம்
அனுப்பியிருந்தனர்.
அந்த பொருள் சம்பந்தமாக முடிவெடுக்க நகர்மன்றத் தலைவர் கூட்டத்தினை கூட்டவில்லை என்றால், அக்டோபர் 20 செவ்வாய்கிழமையன்று,
துணைத் தலைவர் தலைமையில் கூட்டம் நடத்தப்படும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே - தெரு விளக்குகள் பராமரிப்பு பொருள் உட்பட 93 பொருட்கள் கொண்டு, அக்டோபர் 12
அன்று சாதாரண கூட்டம் நடத்திட நகர்மன்றத் தலைவர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த தகவலையும், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு
- நகர்மன்றத் தலைவர் - கடிதம் மூலம் - அக்டோபர் 7 அன்று அனுப்பியிருந்தார்.
உறுப்பினர்களுக்கு நகர்மன்றத் தலைவர் அனுப்பிய கடிதம்
7.10.2015
பெறுனர்
துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,
காயல்பட்டினம் நகராட்சி.
நகர்மன்றத் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,
பொருள்: காயல்பட்டினம் நகராட்சியின் மன்ற கூட்டம் குறித்து
பார்வை: தங்கள் 5.10.2015 தேதிய கடிதம்
--------
தாங்கள் 5.10.2015 தேதிய கடிதத்தில், தெரு விளக்கு பராமரிப்பு பணியினை மேற்கொண்டுவரும் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வேலை
ஆணையை மேலும் ஓர் ஆண்டு நீட்டிக்க கோரி, வேண்டுகோள் கூட்டம் நடத்த கோரியுள்ளீர்கள்.
இந்த பொருள் - ஜூலை மாத கூட்டத்தின் 18 வது பொருளாகவும், ஆகஸ்ட் மாத கூட்டத்தின் 1வது பொருளாகவும் இடம்பெற்று, செப்டம்பர் மாத
22ம் தேதி சாதாரண கூட்டப் பொருளில் இணைக்கப்பட்டிருந்தது என்பதனை தங்களுக்கு நினைவு படுத்துகிறேன். செப்டம்பர் 22 கூட்டத்தினை நடத்த
விடாமல் பெருவாரியான உறுப்பினர்கள் தடுத்த காரணத்தால், இந்த பொருள் உட்பட 92 பொருள்கள் தொடர்ந்து நிலுவையில் உள்ளன.
எனவே - தாங்கள் தற்போது அனுப்பியுள்ள இப்பொருள் உட்பட நிலுவையில் உள்ள அனைத்து பொருட்கள், பருவ மழை கால அவசர நடவடிக்கைகள்
குறித்த பொருள் ஆகியவற்றை இணைத்து, அக்டோபர் 12 திங்களன்று காலை 11 மணிக்கு சாதாரண கூட்டம் நடத்த அஜெண்டா விநியோகம் செய்ய,
ஆணையருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது என்பதனை தங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
இவண்,
தங்கள் உண்மையுள்ள,
ஐ.ஆபிதா சேக்,
தலைவர், காயல்பட்டினம் நகராட்சி.
இணைப்பு:
(1) பருவ மழை கால முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆணையருக்கு நான் அனுப்பிய 2.10.2015 ஈமெயில்
(2) சாதாரண கூட்டத்தினை அக்டோபர் 12 அன்று நடத்த ஏற்பாடு செய்ய கோரி ஆணையருக்கு நான் அனுப்பிய 6.10.2015 ஈமெயில்
(3) ஆணையரின் 5.10.2015 கடிதம்
(4) உறுப்பினர்களின் 5.10.2015 கடிதம்
நகல்:
(1) ஆணையர், காயல்பட்டினம் நகராட்சி
(2) நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர், திருநெல்வேலி
(3) நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர், சென்னை
(4) நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலர், சென்னை
இதற்கு - அக்டோபர் 9 தேதிய கடிதம் மூலம் பதில் வழங்கிய நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.எம். மொஹிதீன், சாதாரண கூட்டம் குறித்த
கடிதம் கிடைக்கபெற்றதை கடித்ததில் குறிப்பிட்டிருந்தாலும், அக்கூட்டத்தில் கலந்துக்கொள்வதை பற்றி எதுவும் தெரிவிக்காமல், அக்டோபர் 20 அன்று
உறுப்பினர்களின் கோரிக்கை கூட்டத்திற்கு அழைப்பு விடப்படவேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே - காயல்பட்டினம் நகராட்சியின் சாதாரண கூட்டம் அக்டோபர் 12 அன்று போதிய உறுப்பினர்கள் வராத காரணத்தால்,
நடைபெறவில்லை. இதனை தொடர்ந்து, செப்டம்பர் 22 மற்றும் அக்டோபர் 12 ஆகிய இரு தேதிகளில் கூட்டப்பட்ட சாதாரண கூட்டப் பொருட்களில் தெரு விளக்கு பராமரிப்பு குறித்த பொருள் இருந்தும், அவற்றை நிறைவேற்றாமல் கூட்டங்களை புறக்கணித்து விட்டு, அக்டோபர் 20 அன்று துணைத் தலைவர் தலைமையினால் கூட்டம் நடத்தப்படுவது சட்டப்படி தவறு என நகர்மன்றத் தலைவர், உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்ததாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து - அக்டோபர் 20 அன்று துணைத் தலைவர் தலைமையில் கூட்டம் நடைபெறவில்லை.
இதற்கு முன்னர் செப்டம்பர் 25 அன்று நான்கு கூட்டப் பொருட்களுடன், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 இன் தொகுப்பு 3, விதிமுறை 3(2) படி, கூட்டம் நடத்திட உறுப்பினர்கள் நகர்மன்றத் தலைவருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். அந்த கூட்டமும் நடைபெறவில்லை என்பது குறுப்பிடத்தக்கது.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
|