சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா - SDPI கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், தனியார் நிறுவனங்களின் அனுசரணையுடன் நகரின் சாலையோரங்களில் மரக்கன்றுகள் பாதுகாப்பு வேலியுடன் நடப்பட்டு வருகிறது.
தமது வீட்டின் முன் மரம் வளர்த்து, முறையாக நீரூற்றி பராமரித்து வளர்க்க விரும்புவோரை அடையாளங்கண்டு, அவர்களின் இல்லங்கள் முன்பு - சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடப்படுகிறது.
முதற்கட்டமாக, காயல்பட்டினம் எல்.எஃப்.வீதி, அரசு நூலகம், அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், கே.எம்.டீ.மருத்துவமனை, வி.ஏ.ஓ.அலுவலகம், கடற்கரை, அரூஸிய்யா பள்ளி, தாயிம்பள்ளி, இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF), தீவுத்தெரு, சித்தன் தெரு, கீழ சித்தன் தெரு, புதுக்கடைத் தெரு, பெரிய நெசவுத் தெரு, கூலக்கடை பஜார் உள்ளிட்ட பகுதிகளில் வேம்பு, புங்கை மரங்கள் 25 நட்டப்பட்டுள்ளன. இம்மரங்களுக்கு அந்தந்த பகுதிகளிலுள்ள வீடுகளிலிருந்து தலா ஒருவர் பொறுப்பேற்றுள்ளனர்.
கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொதுச் செயலாளர் எச்.ஷம்சுத்தீன் தலைமையில், மாவட்ட செயலாளர் தூத்துக்குடி தாஹிர், காயல்பட்டினம் நகர கிளை தலைவர் முஹம்மத் உமர், செயலாளர் அப்துர்ரஹ்மான், மருத்துவப் பிரிவு முகைதீன் உள்ளிட்ட நிர்வாகிகளும், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும் மரங்களை நட்டனர்.
இதுகுறித்து, மாவட்ட பொதுச் செயலாளர் எச்.ஷம்சுத்தீன் தெரிவித்ததாவது:-
எம் கட்சியின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “பசுமை காயல் திட்டம் 2015 - 2016” என்ற திட்டத்தின் கீழ் காயல்பட்டினத்தில் முதற்கட்டமாக 25 மரங்கள் நட்டப்பட்டுள்ளன.
அந்தந்தப் பகுதிகளிலிருந்து ஒருவர் தலா ஒவ்வொரு மரத்தை நீரூற்றிப் பராமரிக்க பொறுப்பேற்றுள்ளனர் என்றாலும், மாதம் ஒருமுறையோ - இருமுறையோ நிர்வாகிகளாகிய நாங்களும் அவற்றைக் கண்காணித்து கூடுதல் பராமரிப்புப் பணிகளைச் செய்யவுள்ளோம்.
மரம் வளர்ப்பின் அவசியத்தை வலியுறுத்தியும், ப்ளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கியும் பொதுமக்களிடையே அவ்வப்போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அவர்களின் ஒத்துழைப்புடன் செயல்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
தமது வீடுகளின் முன் மரம் வளர்க்க விரும்புவோர் - எம் கட்சியின் நிர்வாகிகளைத் தொடர்புகொண்டால், குறிப்பிட்ட அளவு விருப்பங்கள் பெறப்பட்ட பின், இரண்டாம் கட்டமாக மரங்கள் நட்டு பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
SDPI / PFI தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |