காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட புறநகர் பள்ளிக்கூடங்களில், சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றம் சார்பில், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, ரியாத் காயல் நல மன்றம் சார்பில் அதன் செயலாளர் ஏ.டீ.ஸூஃபீ ஹுஸைன் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ரியாத் காயல் நல மன்றம் கடந்த 20 ஆண்டுகளாக நகரின் ஏழை - எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறது. தற்போது இம்மன்றம் நகரின் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள துவக்கப்பள்ளிகளுக்கும், அதில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கும் தேவையான அத்தியாவசிய உதவிகளை கடந்த சில மாதங்களாக இக்ராஃ கல்விச் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் செய்து வருகிறது.
ரியாத் மாநகர் மற்றும் அதை சுற்றியுள்ள சிறு நகரங்களில் வசிக்கும் நமதூர் மற்றும் ஏனைய வெளியூர் உறுப்பினர்களை கொண்ட எம் ரியாத் காயல் நலமன்றம் (RKWA) அவர்களின் ஊதியத்தில் இருந்து பெறப்படும் மாத சந்தா மற்றும் விரும்பியவர்களின் நன்கொடைகளைக் கொண்டு மருத்துவம், கல்வி, சிறுதொழில், உணவுப்பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் நம் நகரில் உள்ள நலிந்த ஏழைக் குடும்பங்களுக்கு பன்னெடுங்காலமாக உதவிகள் செய்து வருகிறோம் என்பது யாவரும் நன்கு அறிந்ததே!
இதன் தொடராக நமதூரை சுற்றியுள்ள புறநகர் பள்ளிக் கூடங்களுக்கும் நாம் ஏன் உதவக்கூடாது? என்று சமீபத்தில் நடைபெற்ற ரியாத் காயல் நல மன்றத்தின் செயற்குழு கூட்டத்தில் பார்வையாளராக வந்த நம் பொதுக்குழு உறுப்பினரின் மனதில் தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடாக, அடுத்தடுத்து நடந்த செயற்குழுவில் இதை பரிசீலித்து இத்திட்டம் ஒரு சமய நல்லிணக்கத்திற்கு கட்டாயம் வழி வகுக்கும் என்றும், இனி வரக்கூடிய சந்ததியினருக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என்ற நல்ல நோக்கில் புறநகரில் உள்ள மங்களவாடி, அருணாசலபுரம், ரத்தினாபுரி, ஓடக்கரை மற்றும் ஊரின் உள்ளே அலியார் தெரு ஆகிய துவக்கப் பள்ளிகள் அனைத்திற்கும் அடிப்படை வசதிகள் அமைத்து கொடுக்க நமது செயற்குழுவில் ஏக மனதாக முடிவெடுத்து, அந்த பொறுப்பை நம்மன்ற ஊர் பிரதிநிதி சகோதரர் ஏ.தர்வேஷ் முஹம்மது அவர்களை தொடர்பு கொண்டு மேற்குறிப்பிட்ட பள்ளிகளுக்கு செய்ய நாடியுள்ள உதவித் திட்டங்களைப் பற்றி கலந்தாலோசித்ததில், அவர்களும் மிகவும் ஆர்வத்துடன் இது ஒரு நல்ல முயற்சி என்றும், சகோதர சமுதாயத்திற்கும் உதவி செய்வதன் மூலம் நல்லதொரு சமூக நல்லிணக்கம், அன்பு, ஒற்றுமை ஆகியவை ஏற்பட இது வழிவகுக்கும் என்றும், அதற்காக தாம் அனைத்து உதவிகளையும் செய்ய எந்நேரத்திலும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்தத் திட்டங்களை , இக்ராஃ கல்விச் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் செயல்வடிவம் கொடுத்திட முடிவு செய்யப்பட்டு, ரியாத் காயல் நல மன்றப் பிரதிநிநிதியும், இக்ராஃ கல்விச் சங்கத்தின் நிர்வாகியுமான ஏ.தர்வேஷ் முஹம்மது மற்றும் இக்ரா கல்விச் சங்கத்தின் பொருளாளர் கே.எம்.டி.ஸுலைமான் ஆகியோர் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து புறநகர் துவக்கப் பள்ளிகளுக்கும் சென்று பார்வையிட்டு, பள்ளி தலைமையாசிரியர்களோடு கலந்து பேசி, நம் ரியாத் காயல் நல மன்றம் பள்ளிக்கும் , மாணவ-மாணவிகளுக்கும் தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்திட ஆர்வமாக இருப்பதை தெரிவித்து, அதன் பேரில் அவரவர்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படை தேவைகள் கேட்டறிந்து, அதன்பேரில், ''PRIMARY SCHOOLS WELFARE PROJECT'' என்ற பெயரில் ஒரு சிறிய ரிப்போர்ட்டை ரியாத் காயல் நல மன்றத்திற்கு சமர்ப்பித்தனர்.அதனை பரிசீலித்த ரியாத் காயல் நல மன்றம் , அதற்காக நடப்பாண்டு (வருடத்திற்கு) ரூ. 1, 20,000 (ஒரு இலட்சத்து இருபதாயிரம்) ஒதுக்குவதென முடிவு எடுக்கப்பட்டு, முதற்கட்டமாக ரூ. 70,000 செலவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னர் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
1. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அலியார் தெரு:
நம் நகர மக்களுக்கு நல்ல பரிட்சயமான இந்த பள்ளியின் தலைமையாசிரியர் தம் பள்ளிக்கு சுத்தமான குடி தண்ணீர் மற்றும் மாணவ -மாணவியர் அனைவருக்கும் நோட்டு புத்தகமும் கிடைக்க வழி செய்யுமாறு கேட்டுக்கொண்டதின் பேரில் ஒரு தண்ணீர் சுத்திகரிப்பு கருவி (Water Filter) உடனே பொருத்தப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
அப்பள்ளியில் பயிலும் 40 மாணவ -மாணவியருக்கும் பாட நோட்டுகள் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டு எம்மன்ற துணைத்தலைவர் பி.எம்.எஸ்.முஹம்மது லெப்பை, மன்ற ஆலோசனைக்குழு உறுப்பினர் கூஸ் எஸ்.ஏ .டி .முஹம்மது அபூபக்கர் மற்றும் மன்ற பிரதிநிதி ஏ.தர்வேஷ் முஹம்மது ஆகியோர் முன்னிலையில் கடந்த ஜூன் மாதம் வழங்கப்பட்டது.
2. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஓடக்கரை:
இப்பள்ளிக்கு அவர்களின் அத்தியாவசிய தேவையாக கோரிக்கை வைக்கப்பட்ட தண்ணீர் சுத்திகரிப்பு கருவி (Water Filter) மற்றும் முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் 31 மாணவ மாணவிகளுக்கு காலணிகளும் தரமானதாக வழங்கப்பட்டது.அச்சமயம் விடுப்பில் ஊர் வந்திருந்த எம்மன்ற தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூது இத்ரீஸ், பொருளாளர் எம்.என்.முஹம்மது ஹசன் ஆகியோர் இவைகளை வழங்கினர்.
இந்த பள்ளியில் பொருத்தப்பட்டwater filter பயன்பாடு பற்றி அறிந்து கொள்ள சில தினங்கள் கழித்து சென்றபோது, அப்பள்ளியின் ஆசிரியை, முன்பெல்லாம் மாணவ-மாணவிகள் அவ்வளவாக தண்ணீர் குடிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஆனால் தற்போது filter செய்து கிடைக்கும் இந்த தண்ணீர் சுவையாக இருப்பதாக கூறி பல டம்ளர் தண்ணீர் குடிக்கின்றனர்.சந்தோசமாக உள்ளது என்று கூறி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
3. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மங்களவாடி:
இப்பள்ளியில் பயிலும் அனைத்து (27) மாணவ-மாணவியர்களுக்கும் (1 முதல் 5 வரை ) பள்ளிச்சீருடைகள், பாட நோட்டுகள், மற்றும் உணவருந்தும் ஸ்டீல் தட்டுகள், டம்ளர்கள், சிலேட்டுகள், தண்ணீர் குடிப்பதற்கு water bottle dispenser ஆகியவைகள் வழங்கப்பட்டன. சீருடைக்கான துணிகள் நல்ல தரமுள்ளவையாக எடுக்கப்பட்டு அதன் பின் ஒவ்வொருவருக்கும் அளவுகள் தனியே எடுக்கப்பட்டு நல்ல முறையில் தைத்து கொடுக்கப்பட்டது. இவைகள் யாவும் கடந்த ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வினியோகிக்கப்பட்டன.
அச்சமயம் விடுப்பில் ஊர் வந்திருந்த எம்மன்ற துணைத்தலைவர் பி.எம்.எஸ்.முஹம்மது லெப்பை, மன்ற ஆலோசனைக்குழு உறுப்பினர் கூஸ் எஸ்.ஏ .டி .முஹம்மது அபூபக்கர் மன்ற செயலாளர் ஏ.டி. ஸூபி இப்ராஹிம், பொருளாளர் எம்.என்.முஹம்மது ஹசன் ஆகியோர் இவைகளை வழங்கினர்.எம் மன்றப் பிரதிநிதியும், இக்ராஃ நிர்வாகியுமான ஏ.தர்வேஷ் முஹம்மது மற்றும் இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் ஆகியோர் உடனிருந்தனர்.
பள்ளியின் தலைமையாசிரியர் இது குறித்து கூறுகையில், இரண்டு வருடம் முன்பு ஒரு அமைப்பினர் (பெயரைக் குறிப்பிட்டு) இவைகளை தருவதாக கூறிச் சென்றதாகவும்,அதன் பின் வரவே இல்லையென்றும் ஆனால் நீங்கள் சொன்ன உடனேயே அதை செயல்படுத்திய விதம் எங்களுக்கு ஒரு வியப்பாகவும் ஆச்சிரியமாகவும் இருக்கிறது என்றும், அனைத்து மாணவ -மாணவியரும் நீங்கள் அளித்த தரமான சீருடைகளை மறுநாள் அணிந்து வந்து மிகுந்த சந்தோசத்தோடு காணப்பட்டதாகவும், இதற்காக தாம் மிகுந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
“மேலே வழங்கப்பட்டதில் சீருடை, சாப்பாடு தட்டு, டம்ளர் வகைகள் அரசால் வழங்கப்படுகிறது, எனினும் அந்த சீருடைகளில் அளவு வித்தியாசமாக இருப்பதாலும், குழந்தைகள் நல்ல உடை உடுத்த வேண்டும் என்ற நமது விருப்பத்தினாலும் நாம் அதனை ஏற்பாடு செய்தோம்”
4.தேசிய துவக்கப்பள்ளி, அருணாசலபுரம்:
இப்பள்ளி தலைமையாசிரியரிடம் விசாரித்ததில் அவர்களுக்கு மிக முக்கியமாக தண்ணீரை மேலேற்றுவதற்கு கூடுதல் சக்தி கொண்ட மோட்டார் ஒன்றும், அதற்கு கூடுதல் கொள்ளளவு கொண்ட சிந்தெடிக் டாங்க் ஒன்றும் அமைத்துத் தருமாறு கேட்டுக் கொண்டதையடுத்து, உடனடியாக இவையிரண்டும் எம்மன்ற தலைவர் ஹாஃபிழ் ஷேக் தாவூது இத்ரீஸ், பொருளாளர் எம்.என்.முஹம்மது ஹசன் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டு பொருத்தப்பட்டது.இது தவிர இன்னும் சில தேவைகளையும் முன் வைத்துள்ளார்கள். அவைகள் கூடிய விரைவில் பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. அருள்ராஜ் துவக்கப்பள்ளி, ரத்தினாபுரி:
இப்பள்ளியின் தலைமையாசிரியை அவர்களிடம் விசாரித்ததில், தண்ணீர் மோட்டார் மற்றும் அதை சேகரிக்கும் தண்ணீர் தொட்டியும் பழுதடைந்து விட்டதால் அதை நிவர்த்தி செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்கள். இத்திட்டத்தை கூடிய விரைவில் முடித்துக் கொடுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதோடு இன்றைய சூழலில் பெரும்பாலான பள்ளிகளிலும் தொலைக்காட்சி TV பொருத்தப்பட்டு அதன் மூலமாக குழந்தைகளுக்கு rhymes reading மற்றும் ஆங்கில பேச்சுப் பயிற்சி வழங்கி வருகிறார்கள். அதே நோக்கில் நம்மிடம் TV (32") & DVD Player இரண்டுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். அதுவும் மிக குறுகிய காலத்திற்குள் செய்து தரப்படும் என்று வாக்களிக்கப்பட்டது. அதன்படி இவைகளும் கூடிய விரைவில் எம் மன்றம் சார்பாக வழங்கப்படவுள்ளன.
எம் மன்றம் மூலம் வழங்கப்பட்ட மேற்கண்டவைகளில் பயன்பெறும் பயனாளிகளில் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஏழ்மையில் / வறுமை நிலையில் வாழும் சகோதர சமுதாய மாணவ சமுதாயத்துக்கு எம் மன்றம் இது போன்று தொடர்ந்து உதவிக் கரம் நீட்டும் என்பதையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
N.M.செய்யித் இஸ்மாஈல்
செய்தி தொடர்பாளர் - ரியாத் கா.ந.மன்றம்
ரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 11:07 / 22.10.2015] |