ஹாங்காங்கிலுள்ள காயல்பட்டினம் மாணவர் நல மன்றம் (Kayal Students Welfare Association - KSWA) சார்பில் நடைபெற்ற அதன் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இன்பச் சிற்றுலா நிகழ்ச்சிகள் குறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
பிஸ்மில்லாஹ் - நஹ்மதுஹு வனு ஸல்லி அலா ரசூலிஹில் கரீம்
இன்பச் சிற்றுலா:
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளவற்ற கருணையால், எமது ஹாங்காங் கஸ்வா அமைப்பின் 2015 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பொதுக்குழு மற்றும் இன்பச் சுற்றுலா நிகழ்வுகள், ஹாங்காங்கிலுள்ள "செக் கேங்" (Chek Keng) என்னும் மலைப்பகுதி சுற்றுலாத் தீவில், கடந்த செப்டம்பர் மாதம் (26 & 27) சனி, ஞாயிறு கிழமைகளில் நடைபெற்றது.
நம் வேலைப்பளுவின் காரணமாக உடலும் உள்ளமும் களைப்படைந்து இருந்த மனம், இந்த சுற்றுலாவின் அறிவிப்பு வந்ததும், உள்ளங்களில் ஏற்பட்ட அளவில்லா மகிழ்ச்சி நம் முகத்தில் புன்னகையாய் பிரகாசித்தது.
மழைச்சாரலுக்கிடையில் புறப்பாடு:
இந்த சுற்றுலாவின் ஆரம்பம், நம் காயல்வாசிகள் அதிகமாக குடியிருக்கும் "சிம் ஷா ஷுய்" (Tsim Sha Tsui) பகுதியில் அமைந்திருக்கும் YMCA கட்டிட அருகில் இருந்து, இரண்டு பேருந்துகளில் மொத்தம் 75 பேர் கொண்ட குழு 26ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 3.30 மணிக்கு கிளம்பியது. இப்பயணம் கிளம்பும் வரை அரை மணிநேரமாக தென்றல் காற்றுடன் ஒரு மிதமான மழை பொழிந்துகொண்டே இருந்தது. பேருந்து கிளம்பியதுடன் அதுவும் நின்று கொண்டது.
பிரயாண பிராத்தனைகளுடன் இனிதே தொடங்கிய இப்பயணம், பேருந்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் மற்ற நண்பர்களை ஒரே இடத்தில் சந்தித்தது ஒரு அழகிய ஆனந்தத்தை அள்ளிக்கொடுத்தது. என்னதான் அடிக்கடி பார்த்தாலும், தொலைபேசியில் பேசினாலும் இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் சந்திப்பது ஒரு இனம் புரியாத பூரிப்புதான்.
படகுச் சவாரி:
நம் காயல்பதிக்கே உரித்தான வழக்கமான நல விசாரிப்புக்கு பின், இயல்பான கேலியும், நகைச்சுவையும் பேருந்திலேயே அமர்க்களமாக ஆரம்பமானது. சுமார் ஒரு மணிநேர பேருந்து பயணத்திற்கு பின் "வாங் செக் பியர்" (Wong Shek Pier) என்னும் படகு கரைக்கு வந்தடைந்தனர். அங்கிருந்து 4 தனியார் விரைவு படகுகளில் 10 நிமிட பயணத்திற்கு பின் நாம் சேரவேண்டிய இடமான "செக் கேங்" (Chek Keng) தீவுவிற்கு வந்தடைந்தோம்!
இயற்கை எழில் கொஞ்சம் அந்த அழகிய தீவை பார்த்ததும் நம் மனங்கள் ஒரு விதமான சந்தோஷத்திற்கு ஆளானது. உறுதியான மலையும், அதன் மீது மோதும் ஆழ்கடல் அலையையும் பார்த்த அழகை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. இவை யாவையும் படைத்து பரிப்பக்குவபடுத்தி நம்மை ரசிக்க வைத்த வல்ல அல்லாஹ்வை எப்படி புகழ்வது! அல்ஹம்துலில்லாஹ்!
படகை விட்டு அதன் கரையில் இறங்கி ஒரு நிமிட நடை தூரத்தில் உள்ள விடுதிக்கு சென்றோம். அந்த தீவில் அந்த ஒரு விடுதி மட்டும் தான், இதற்கு முன்பதிவு தேவை. இரண்டு மாத முன்பே நம் வருகையை ஆன்லைனில் பதிவு செய்து வைத்ததால் அதற்கான முறையான ஆவணங்கள் காட்டி உள்ளே நுழைந்தோம்.
அஸ்ர் தொழுகை & மாலை சிற்றுண்டி:
ஒவ்வொருவரும் அவர்களே தங்களின் படுக்கை இடங்களை தேர்ந்தெடுத்து தங்களின் உடமைகளை வைத்து விட்டு அஸர் ஜமாத்திற்கு தயாராகினார்கள். மாலை சுமார் 5.45 மணிக்கு அஸர் ஜமாஅத் முடிந்த பின் நம் காயல் தேநீரும், சமூசவும் பரிமாறப்பட்டது.
சமையல் ஏற்பாடுகள்:
ஒரு முழு நாள் பயணம் என்பதாலும், அக்கம் பக்கத்தில் அங்கு எதுவும் கிடைக்காது என்பதாலும் சமையலுக்கு தேவையான எல்லா பொருட்களும், எரிவாய்வு போன்ற அதன் அனைத்து தளவாடங்களும் நாம் ஏற்கனவே தயார் செய்து கொண்டுச்சென்றோம். நம்மூர் கோமான் தெரு சமையல் கலை வல்லுனரான சகோதரர் பஹ்ருத்தீன் என்ற தீன்-பாயும் அவருக்கு உதவியாக சகோதரர் கூஸ் அப்துல் காதரும் மற்றும் நம் உறுப்பினர்கள் சிலரும் உணவு சமையல் விஷயங்களை கவனித்து வந்தார்கள்.
அறிவுத்திறன் போட்டி & மஃரிப் தொழுகை:
தேநீர் அருந்தியவாறே வந்த குழுக்களை அறிவு திறன் மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிக்காக நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டார்கள். அந்த அணிகளுக்கு எஸ்.எம்.கே. இஸ்மாயீல் காதிரி, நம்மூரில் இருந்து விருந்தினராக வந்திருந்த சகோதரர் எல். எம். இ. கைலாணி, கே.எஸ்.டி. மன்சூர் மற்றும் ஏ.எல். அப்துர் ரஹ்மான் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அதோடு மக்ரிப் தொழுகைக்குரிய நேரம் வந்ததும் மக்ரிப் ஜமாஅத் சிறப்பாக நடைபெற்றது.
அதன் பின், பிரிக்கப்பட்ட 4 அணிகளும் தனி தனிக் குழுவாக அமர்ந்து ஒருவருக்கொருவர் போட்டி போட உற்சாகத்தோடும் குதூகலத்தோடும் தயாராயினார்கள்.
முதலாவதாக அறிவுத்திறன் போட்டி ஆரம்பமானது. நம் செயற்குழு உறுப்பினர் ஹாபிழ் எம். என். முஹியித்தீன் கடந்த ஆண்டு போல் இவ்வ்வருடமும் லேப்டாப் மற்றும் ப்ரொஜெக்டர் உதவியுடன் சிறப்பாக வடிவமைத்து நடத்தியது மிகவும் விறுவிறுப்பாகவும் சுவராசியகமாகவும் இருந்தது. இவருக்கு மற்றொரு செயற்குழு உறுப்பினர் எஸ்.ஹெச். மக்பூல் மிகவும் உறுதுணையாக இருந்து மதிப்பெண்களையும், போட்டியாளர்களின் நேர கட்டுப்பாட்டையும் கவனித்துக்கொண்டார்.
போட்டியின் முதல் கேள்வியிலேயே விறுவிறுப்பு ஆரம்பமானது. நடுவர்களுடன் செல்ல சண்டைகளும், அதன் தொடர்ச்சியாக நகைச்சுவைகளும் இப்போட்டிகளின் ஆர்வத்தை இன்னும் மெருகூட்டியது. இப்போட்டிகள் அறிவுத்திறன் மட்டுமல்ல, சிரித்து மகிழக்கூடிய சுற்றுகளை உள்ளடங்கி இருந்ததால், கலந்து கொண்ட அனைவர்களுக்கும் இது மிகவும் உற்சாகமூட்டியது. சுமார் இரண்டரை மணிநேரம் ஆரவாரத்தோடும், ஆனந்த ஆர்ப்பாட்டத்தோடும் நடைபெற்று முடிவடைந்தது.
இஷா தொழுகை & இரவுணவு:
பின்பு இஷா ஜமாஅத் தொழுகை நடைபெற்றது. ஜமாஅத் முடிந்ததும் இரவு உணவும் தயாரானது. நம்மூர் புகழ் பரோட்டா மற்றும் நாட்டு கோழி கறியும் மணக்க மணக்க பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
அரட்டையுடன் குறட்டை:
அதன் பின்பு அனைவரும் சிறு சிறு கூட்டமாக ஓய்வாக அமர்ந்து ஊர் கதைகள், தமாஷ், கிண்டல்கள் எல்லாம் அளவளாவி கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இஞ்சி புதினா கலந்த கருந்தேநீர் விளம்பப்பட்டது. நேரம் போக போக அவரவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கைக்கு சென்று உறக்கத்தில் ஆழ்ந்தார்கள்.
ஃபஜ்ர் தொழுகை & விடியல் ரசனை:
பஜ்ர் நேரம் வந்ததும், தொழுகைக்கு அழைப்பு விடுத்து சுபுஹு ஜமாஅத் நடைப்பெற்றது. அதன் பிறகு ஒரு சிலர் மீண்டும் உறக்கத்திற்கு சென்றனர். ஒரு சிலர் கூட்டாக இருந்து உலக, ஊர் நடப்புகளை பற்றி உரையாடி கொண்டிருந்தார்கள், வேறு சிலரோ அந்த தீவின் இயற்கையான விடியற்காலை அழகை ரசிக்க நீண்ட நடைபயணம் மேற்கொண்டார்கள். அதிலும் ஒரு சிலர், ஹாபிழ் அப்துல் பாசித் மற்றும் பி.எஸ். ஷாகுல் ஹமீத் அவர்களின் தலைமையில் Hiking என்று சொல்லக்கூடிய மலையேறியும் சுற்றிப்பார்த்தார்கள்.
தேனீர் & சிற்றுண்டி:
சரியாக காலை 7.30 மணி அளவில் தேநீருடன் நம் ஊர் தின்பண்டங்களும் 9.30 மணிக்கு உப்புமாவுடன் ஊறுகாயும் முறையே பரிமாறப்பட்டது. பின்பு அனைவரும் அடுத்த கட்ட விளையாட்டிற்கு தயாராயினார்கள். அறிவுத்திறன் விளையாட்டை விட இந்த பொழுதுபோக்கு விளையாட்டுகளில் அணிகளுக்கிடையே விறுவிறுப்பு சற்றே அதிகமாக இருந்ததை காண முடிந்தது. இதை எஸ்.ஹெச். மக்பூலும், பி.எம்.ஐ. சவூதும் முன்னின்று நடத்தினார்கள்.
லுஹ்ர் தொழுகை:
சற்றொப்ப 1.30மணிக்கு அனைத்து விளையாட்டு போட்டிகளும் முடிவடைந்ததும் லுஹ்ர் தொழுகைக்கான அழைப்பு அதான் சொல்லுப்பட்டு ஜமாத்தும் சிறப்பாக நடைபெற்றது.
வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம்:
அதன் பின் 2015 நம் அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஹாபில் எம்.எஸ். ஷேக் தாவுத் கிராத் ஓதி ஆரம்பித்தார். நம் செயற்குழு எஸ்.ஹெச்.மக்பூலும் அனைவரையும் வரவேற்று பேசினார். செயற்குழு உறுப்பினர் பொறியாளர் எம். செய்யித் அஹமத் ஆண்டறிக்கை சமர்பித்து அமைப்பின் நோக்கங்களை விளக்கி பேசினார். உறுப்பினர்களின் பயனுள்ள கருத்து பரிமாற்றங்கள் குறிப்பெடுக்கப்பட்டதுடன் அவர்களின் வினாக்காகளுக்கு செயற்குழுவின் சார்பாக முறையான பதிலளிக்கப்பட்டது. நம் அமைப்பின் வரவு செலவு கணக்குகளை செயற்குழு உறுப்பினர் பி.எஸ்.ஏ. அஹ்மத் கபீர் சமர்ப்பித்தார். இறுதியாக ஹாபில் எம்.எம். முஹம்மத் சுல்தான் அவர்கள் துஆ இறைஞ்ச சலவாத் ஸலாமுடன் பொதுக்குழு கூட்டம் இனிதே முடிந்தது.
மதிய உணவு:
பின்பு அனைவருக்கும் சுவையான மட்டன் பிரியாணி, ஈரல் வறுவல், கோழி பொரியல், கத்தரிக்கா கட்டா என அறுசுவை விருந்தளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். சிறு ஓய்வுக்கு பின் அனைவரும் தங்களின் உடமைகளை எடுத்து வைத்து இல்லம் திரும்ப தயாராயினார்கள்.
தேனீர் – சிற்றுண்டி & குலுக்கல் பரிசு:
சரியாக 4மணிக்கு அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது. அத்துடன் சுற்றுலா கலந்துகொண்டவர்களின் பெயர்களை குலுக்கல் முறையில் 10 பேர் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அழகிய பரிசுகள் வழங்கப்பட்டது. அத்துடன் ஒட்டுமொத்த விளையாட்டு போட்டிகளில் முதல் வந்த ஏ.எல். அப்துர்ரஹ்மான் அணிக்கு சிறப்பு பரிசும் மற்றவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.
அஸ்ர் தொழுகை:
அதன் பின் அசர் தொழுகைக்கான அதான் கூறப்பட்டு ஜமாத்தும் நடைபெற்றன. "அய்யாமுத் தஷ்ரீக்" என்னும் ஹஜ்ஜு பெருநாளின் அடுத்த மூன்று நாட்களின் இறுதி நேர தொழுகையாக இந்த அசர் ஜமாஅத் அமைந்தது ஒரு தனி சிறப்பாகும். ஒவ்வொரு ஜமாஅத் தொழுகையையும் அழகிய தக்பீருடன் துஆ ஓதி நிறையேற்றவதை வல்ல அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக...! ஆமீன்...
தியாக திருநாள் என்னும் ஹஜ்ஜு பெருநாளை கொண்டாடிய சந்தோஷம் இங்கேயும் தொடர்ந்து நிலைத்து நிரம்பி இருந்ததை காண முடிந்தது.
குழுப்படம்:
பின்பு படகு கரை அருகில் அனைவர்களும் சேர்ந்து குழு புகைப்படம் (குரூப் போட்டோ) எடுத்துக்கொண்டனர். திரும்பும்போது ஒரு பெரிய படகில் அனைவரும் ஏரி மறுகரைக்கு வந்து பின்பு இரண்டு பேருந்தில் அவரவர் இல்லம் திரும்பினார்கள்.
ஏற்பாட்டாளர்கள்:
இந்த சுற்றுலாவின் நிகழ்ச்சிகள் ஆரம்பம் முதல் அனைத்தும் நம் அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ஹெச்.மக்பூல், பொறியாளர் செய்யித் அஹ்மத், ஹாபில் முஹ்யித்தீன், சவூத், ஹாபில் அப்துல் பாசித், விளக்கு நூஹு மற்றும் ஹாபில் இர்ஷாத் அலி ஆகியோர் கொண்ட குழு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த இன்பச் சுற்றுலா இறைவணக்கங்களோடும், இனிய நினைவுகளோடும், இன்சுவை உணவுகளோடும், இதமான வானிலையோடும் இன்பமயமாக இருந்தது என்பது இன்றியமையாத ஒன்று.. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்.
வேண்டுகோள்:
சகோதரத்துவ வாஞ்சையுடன் கூடிய நம் உறுப்பினர்களின் ஒற்றுமை, வலிமையான செயல்பாடு, கடின உழைப்பு ஆகியவற்றின் துணையுடன் இனி வருங்காலங்களில் இன்னும் பல வெற்றிகளை இவ்வமைப்பு காண வேண்டுமென அனைவரும் பிரார்த்திக்க அன்புடன் வேண்டுகிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளும், நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நல்லாசியும் நம் யாவர் மீதும் நிறைவாக சூழட்டுமாக, ஆமீன். வஸ்ஸலாமு அலைக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் கஸ்வா சார்பில், கடந்தாண்டு நடைபெற்ற வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இன்பச் சிற்றுலா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாங்காங் கஸ்வா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |