காயல்பட்டினம் குத்துக்கல் தெரு - முஹ்யித்தீன் பள்ளியருகில் இயங்கி வரும் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் சார்பில், நடப்பாண்டு மீலாத் விழா, வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09, 10 நாட்களில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பறக்காத்தஹு..,
செயற்குழுக் கூட்டம்:
எமது ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் வருடாந்திர செயற்குழு கூட்டம் கடந்த 25-10-2015, ஞாயிற்றுகிழமை அசருக்குப்பின் குத்துக்கல்தெரு, முஹியத்தீன் பள்ளி வளாகத்தில் உள்ள அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஹாஜி, எம்.எம்.முஹம்மது முஹ்யித்தீன் அவர்கள் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்கள். ஜனாப் ஆசிரியர் இசட்.ஏ. செய்கு அப்துல் காதிர் அவர்கள் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்து அனைவரையும் அகமகிழ வரவேற்றதோடு, அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். முன்னதாக வெளியூர்,வெளிநாடுகளிலுள்ள அமைப்பின் நிர்வாகிகளிடம் அலைபேசிகள் மூலமும் கருத்துக்கள் கேட்டும் அவைகளையும் பரிசீலிக்கப்பட்டது,
மீலாத் விழா:
அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணலெம் பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பிறந்ததின மீலாது பெருவிழா மற்றும் பேரியத்தின் 32-ஆம் ஆண்டு விழாவை, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2016, ஜனவரி மாதம் 09 ,10-ஆம் தேதி ( ஹிஜ்ரி 1437, ரபியுல் அவ்வல் பிறை-28,29 ) சனி மற்றும் ஞாயிறு இருதினங்கள் கீழ்காணும் நிகழ்முறைப்படி நனிசிறப்புடன் நடாத்திட ஒருமனதாக இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது:-
போட்டிகளும், பரிசுகளும்:
பேச்சுப்போட்டிக்கான பரிசு தொகையாக முதலாம் பரிசு ரூபாய் 1000/-,இரண்டாம் பரிசு ரூபாய்,750/-மூன்றாம் பரிசு ரூபாய்,500/-
ஹிஃப்ழ் போட்டிக்கான பரிசு தொகையாக முதலாம் பரிசு ரூபாய் -2000/- ,இரண்டாம் பரிசு ரூபாய் 1500/- ,மூன்றாம்பரிசு ரூபாய்,1000/-
மற்றும் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளருக்கும் ஆறுதல் பரிசு தொகைகள் வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டது.
சிறப்பு நிகழ்ச்சிகள்:
இனிய இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக முதல் நாள் நிகழ்விற்கு முனைவர்,பேராசிரியர், நாஞ்சில், எம்.அப்துஸ்ஸமது அவர்கள் தலைமையில் செம்மொழியாம் இனிய தமிழ் மொழியில் இஸ்லாமிய சன்மார்க்க விழிப்புணர்வூட்டும் சுவைமிகு "சுழலும் சொல்லரங்க" மஜ்லிஸ் நிகழ்ச்சியின் குழுவினர்களையும், இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு சென்னை,அடையார் ஜும்மா பள்ளியின் தலைமை இமாம் கத்தீப் மௌலானா,மௌலவி, அல்ஹாஜ். எம்.ஷதீதுத்தீன் ஆலிம் பாழில் பாக்கவி அவர்களையும் சன்மார்க்க சிறப்புரையாற்றிட அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இக்ராஃ மூலம் கல்வி உதவித்தொகை:
பேரியத்தின் முத்தாய்ப்பு நிகழ்வான உயர் கல்விக்கான உதவித்தொகை கடந்த ஆண்டுகளைப்போல் தொடர்ந்து இவ்வருடமும் உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூலமாக மொத்தம் முப்பது ஆயிரம் ரூபாய் பயனாளிக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இப்பொழுதிலிருந்தே துவக்கி சிறப்புற செய்திடவும் நிகழ்ச்சி நோட்டீஸ் விழா நெருக்கத்தில் வெளியிடவும் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.
வேண்டுகோள்:
மேலும் உள்ளூர்,வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தொடர்ந்து நல்லமுறையில் நல்லாதரவுகள் ஆலோசனைகளையும் நல்கி வரும் பேரியத்தின் உறுப்பினர்கள் , நல்லுள்ளம் கொண்ட தயாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தும் இதுபோல் தொடர்ந்து தங்களது பங்களிப்பை தாராளமாக செய்யவும், இனிய இவ்விழாவில் கலந்து சிறப்பித்து தருமாறும் மிக்க அன்புடன் வேண்டி விரும்பி அழைக்கின்றோம்.
சிங்கப்பூர் பொறியாளர் ஹாஜி, எம்.எம்.மொஹ்தூம் முஹம்மது, ஹாங்காங் ஜனாப் வேணா எஸ்.எஸ்.பசூல் கரீம் ஆகியோர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள்.
ஜனாப்,பாலப்பா,எம்.எஸ்.கே.முஹம்மது இப்றாஹீம் அவர்கள் நிறைவாக நன்றி நவில ஹாஜி தோல்ஷாப் எம்.எல்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களின் பாத்திஹா துஆ ஸலவாத்துடன் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது . அல்ஹம்துலில்லாஹ்.
கூட்ட ஏற்பாடுகளை ஹாஜி எஸ்.எம்.பி முஹம்மது பாசீன் , ஜனாப்,எஸ்.என்.ஆஸிக் ரஹ்மான், ஜனாப்,தோல்ஷாப்,எம்.எல்.மூஸா நெய்னா ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் ஏந்தல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் துஆ பொருட்டால் அன்னாரின் பிறந்த நாள் பெருவிழாவை மிக விமரிசையாக நல்ல முறையில் நடாத்திடவும் இதற்காக வேண்டி எல்லா வகைகளிலும் வழிகளிலும் உதவியும் உபகாரமும் செய்கின்ற அனைவருக்கும் இரு உலகிலும் நல்ரஹ்மத்தும் பறகத்தும் செய்தருள்வானாக ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
ஜித்தாவிலிருந்து...
சட்னி S.A.K.செய்யித் மீரான்
ரஹ்மத்துன் லில் ஆலமீன் அமைப்பின் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) நடத்தப்பட்ட மீலாத் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |