தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கபப்ட்ட கேள்விக்கு பொய்யான தகவல் வழங்கிய காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளருக்கு ரூபாய் 25,000 அபராதம் - தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தால் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தினகரன் நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
‘மதுரை ஐகோர்ட் உத்தரவே கிடைக்கவில்லை’ என மனுதாரருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத் தில் தவறான தகவல் தெரிவித்த காயல்பட்டினம் நகராட்சி பொது தகவல் அலுவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தகவல் ஆணையம் உத்தர விட்டது.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடார்பட்டி வடக்கு சிவகாமிபுரத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் பட்டங்கட்டியார். இவர் காயல்பட்டினம் கடையகுடி தெருவில் உள்ள சந்தஎஸ்தேவ் சுவாமி கோயிலுக்கு மேனேஜர் என்ற பெயரில் தீர்வை செலுத்தி வந்தார். இந்த தீர்வையை ‘பங்குத் தந்தை’ என பெயர் மாற்றம் செய்து கடந்த 2005ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி காயல்பட்டினம் நகராட்சி உத்தரவிட்டது.
‘இந்த பெயர் மாற்றம் சட்டத்திற்கு புறம்பானது. எனவே இதை ரத்து செய்து உத்தர விடவேண்டும்’ என ஸ்டீபன் பட்டங்கட்டியார் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதை நீதிபதி சிவஞானம் விசாரித்து, காயல்பட்டினம் நகராட்சி கமிஷனர் உரிய விசாரணை நடத்தி ஆவணங்களின் அடிப்படையில் சட்டப்படி
ஆணை பிறப்பிக்க கடந்த 2013ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி உத்தரவிட்டார்.
எனினும் இது குறித்து காயல்பட்டினம் நகராட்சி எந்த விசாரணையும் நடத்தவில்லை.
இதையடுத்து ஸ்டீபன் பட்டங்கட்டியார் மதுரை உயர்நீதி மன்ற உத்தரவின் நகலை அமல்படுத்தக் கோரி காயல்பட்டினம் நகராட்சிக்கு பதிவு தபாலில் மனு அனுப்பினார்.
இதற்கும் நடவடிக்கை இல்லாததால், அவரது மகள் அன்னம்மாள் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு நீதி மன்ற உத்தரவு நகலோ, ஸ்டீபன் பட்டங்கட்டியார் அனுப்பிய மனுவோ கிடைக்கவில்லை என காயல்பட்டினம் நகராட்சி பொது தகவல் அலுவலரும்,
சுகாதார ஆய்வாளருமான பொன்வேல் ராஜ் பதில் தெரிவித்தார்.
ஆனால் மதுரை ஐகோர்ட் துணை பதிவாளர் (நிர்வாகம்) வரதலட்சுமி, ஐகோர்ட் உத்தரவின் நகல் 2013ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி காயல்பட்டினம்
நகராட்சிக்கு அனுப்பி விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து ஐகோர்ட் உத்தரவு நகல் கிடைக்கவில்லை என தவறான தகவல் தெரிவித்த காயல்பட்டினம் நகராட்சி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதை விசாரித்த மாநில தகவல் ஆணையர் கிறிஸ்டோபர் நெல்சன், காயல்பட்டினம் நகராட்சி பொது தகவல் அலுவலரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் வசூலித்து அரசு கருவூல கணக்கில் செலுத்தவும், டிச.11ம் தேதி நடக்கும் மறு விசாரணைக்கு நெல்லை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்யவும், மனுதாரருக்கு தகவல் மறுத்த மேல்முறையீட்டு அலுவலரும், அப்போதைய நகராட்சி ஆணையருமான அசோக் குமார் மீது 30 நாட்களுக்குள் நகராட்சி நிர்வாக ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தர விட்டார்.
அசோக் குமார் தற்போது வேலூர் மாவட்டம், வாலாஜாபாத் நகராட்சி ஆணையராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தகவல்:
'மாஸ்டர் கம்ப்யூட்டர் அகாடமி' S.E.அப்துல் மாலிக் |