சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 91-வது செயற்குழு கூட்டம் கடந்த 04.12.2015 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப்பிறகு மக்காவில் சகோ. ஒய்.எம்.முஹம்மது சாலிஹ் இல்லத்தில் வைத்து நடந்தேறிய அந்நிகழ்வுதனை பற்றி அம்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம் வல்ல ஏக வல்லோனின் பெரும் கிருபையால் சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 91-வது செயற்குழு கூட்டம் கடந்த 04.12.2015 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப்பின் புனித மக்கா நகரில் ருசைபாவில் உள்ள சகோ. ஒய்.எம். முஹம்மது சாலிஹ் புதிய குடியிருப்பில் வைத்து நடைபெற்ற அக்கூட்டத்திற்கு சகோ.எஸ்.எச். அப்துல்காதர் தலைமை ஏற்று நடத்த சகோ.எஸ்.டி. ஷேக் அப்துல்லாஹ் இறைமறை ஓத சகோ. ஒய்.எம். முஹம்மது சாலிஹ் வருகை தந்த அனைவரையும் வரவேற்க கூட்டம் இனிதே ஆரம்பமானது.
மன்ற செயல்பாடுகள்:
கடந்த கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களையும் மேலும் நிறைவேறிய மன்றப்பணிகள் மன்றம் சார்ந்த நிகழ்வுகளையும், உயர்கல்விக்காக வழங்கப்பட்ட உதவிகள் மற்றும் ஷிபா மருத்துவ அமைப்பின் மூலம் வரப்பட்ட மனுக்களுக்கு வழங்கிய மருத்துவ உதவிகளையும் கோடிட்டு காட்டி, இம்மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து மிக தெளிவுடன் எடுத்துக்கூறி அமர்ந்தார் மன்ற செயலாளர் சகோ. சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
அதனை அடுத்து பேசிய மன்ற செயலாளர் சகோ,எம்.ஏ.செய்யிது இப்ராஹீம் இம்மன்ற அமர்விற்கு தாயகத்திலிருந்து வந்திருந்த இடத்தில் நம் அன்பு அழைப்பினை ஏற்று வருகை தந்த சகோ.எல்.கே.கே. லெப்பை தம்பிக்கு நன்றி கூறி அவரது சமுக பணி பற்றிய அறிமுக உரையாற்றி, பின் உலக காயல் நலமன்றங்களின் கூட்டமைப்பான ஷிபாவின் பதிவை (Registration) துரிதப்படுத்த நாம் ஆவன செய்ய வேண்டும் என்றதோடு அதன் சேவைதனையும் இதுவரை ஆற்றிய பங்களிப்புதனையும், இக்ரா ஆற்றிவரும் கல்விக்கான சேவைதனையும், இம்மன்றம் இதுவரை நிறைவேற்றிய நல்ல பல பணிகளையும் சிறப்பு விருந்தினருக்கு கோடிட்டு காட்டி, நாம் தொடர்ந்து பல சேவைகளை செய்திட நம்மால் முடிந்த நன்கொடைகளை ஏழை எளியோர்களுக்கு வழங்கி இறைவனின் திருப் பொருத்தத்தை அடைவோமாக என்று கூறி தன் உரையை நிறைவு செய்தார்.
நிதி நிலை:
தற்போதைய இருப்பு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவிகள் போன்ற விபரம் மற்றும் நிதிநிலைகளை விளக்கினார் பொருளாளர் சகோ. எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம்.
மருத்துவ உதவிகள்:
மருத்துவ உதவி வேண்டி ஷிபா மருத்துவ கூட்டமைப்பின் மூலமாக பெறப்பட்ட பயனாளிகளின் விண்ணப்பங்கள் முறையே பரிசீலிக்கப்பட்டது. சமீபத்தில் விபத்தில் காயமுற்றவர், இடுப்பு எலும்பு முறிவு, வலது கையில் புற்றுநோய் கட்டி, கர்ப்பப்பை கட்டி, மூட்டு எலும்பு அறுவை சிகிச்சை, குடல் இறக்கம், கண் அறுவை சிகிச்சைகள் என இருவர் மற்றும் வலிப்பு நோய் போன்ற பாதிப்புக்குள்ளாகியுள்ள நம் காயல் சொந்தங்கள் மொத்தம் 09 பயனாளிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு அவர்களின் பூரண நல பேற்றுக்காக வல்லோன் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர் உரை:
தன்னை அன்போடு வந்து இம்மன்ற அமர்வில் கலந்து கொள்ள அழைத்தமைக்கு முதலில் நன்றி கூறி, நபி மூஸா அலைஹி வசல்லம் அவர்களின் வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வுதனை மேற்கோள் கட்டி, தனது உரையை ஆரம்பம் செய்தார் சகோ.எல்.கே.கே. லெப்பைத் தம்பி. "தான் இந்த கூட்டத்தில் அமர்ந்து உறுப்பினர்களின் வாதங்கள், பிரதி வாதங்கள் மற்றும் கருத்து பரிமாற்றங்கள், நம் ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நம் ஊர் மேல் கொண்ட பற்று இவற்றை கண்டு பெருமிதம் கொள்வதாயும் தான தர்மங்கள் முதலில் நம் சொந்த பந்தங்கள், அண்டை அயலார்கள் யார் கஷ்டத்தில் உள்ளார்களோ அங்கிருந்து ஆரம்பம் செய்ய வேண்டும்.
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்பவர்களுக்கு உவமையாவது ஒரு நெல் மணியின் வித்தை போன்றது நீங்கள் ஒரு வித்தை முளைப்பிக்க அது ஏழு கதிர்களை உருவாகின்றது, ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் இருக்கிறது, இறைவன் நாடியவர்களுக்கு இதை இரட்டிப்பாகவும் பன்மடங்காகவும் ஆக்குகிறான்.
இறைவன் மிக விசாலமான கொடையாலனும் நன்கு அறிந்தவனாகவும் இருக்கிறான். நாம் செய்யும் தர்மத்தினால் அவன் 700 மடங்கு கூடுதலாகவே நமக்கு திருப்பி தருவதாக அல்லாஹ் தனது அருள்மறையில் நமக்கு வாக்களிக்கிறான். அந்த வகையில் நீங்கள் எல்லாம் சிறப்புக்குரியவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
கல்விக்காக நம் ஊர் அனைத்து மக்களுக்கும் இக்ரா நல்ல உதவிகளை செய்வதும் மேலும் இந்த இக்ரா அமைப்பு உருவாக அதுவும் கருவாக முதலில் அமைந்தது இந்த ஜித்தா நற்பணி மன்றம் என்பதை அறிய மிக பெருமையாக உள்ளது எனவும், அது போல் மருத்துவத்திற்கு என புதிதாக உருவாகி உள்ள ஷிபா அமைப்பும் நல்ல முறையில் செயல்படனும் எனவும் இது போன்ற அமைப்பு காயலில் உருவாகி இரண்டாண்டுகள் ஆகியும், அதனை இந்த அமர்வில் வந்த பின்பு தான், தானே அறிவதாயும் இவைகளை ஊரில் உள்ள வசதியானவர்கள் மற்றும் பொது மக்களுக்கு அறிமுகபடுத்துவதோடு தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அவர்களும் இதில் பங்களிப்பு செய்வதற்கு வாய்ப்பாக அமையும். அடுத்து இன்று நமக்கு ஒற்றுமை மிக அவசியம் நாம் இப்படி ஒற்றுமையுடன் ஓன்றுபட்டு செயல்படுவது நம் சமுதாய மக்களுக்கு நல்ல பல சேவைகளை செய்வதற்கு பேருதவியாக அமையும் அந்த வகையில் உங்களை பார்க்க சந்தோசமாக இருக்கிறது. சம்பாதிக்க வந்த இடத்தில் இப்படி நம் ஊர் நலனுக்காக ஓன்று கூடி செயல்படுவது பாராட்டுக்குரியது. இந்த ஒற்றுமை ஊர் அளவிலும் நாட்டளவிலும் உலகளவிலும் தேவை என்று புகழாரம் சூட்டியதோடு, நல்ல பல கருத்துகளுடன் சில ஹதீஸ்களை உவமையாக எடுத்துக்கூறி, பொறாமை குணங்களை விட்டொழித்து நல்ல இஹ்லாசுடன் செயல்படுங்கள். சதக்கா செய்வதிலும், ஜகாத் கொடுப்பதிலும் முந்திக்கொள்ளுங்கள் வல்ல அல்லாஹ் உங்களுக்கு இதற்கு நற்கூலியை தருவானாக, என்றதோடு நல்லோருக்கு பெய்யும் மழை எல்லோருக்கும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்து அமர்ந்தார்.
அதோடு, நமதூர் K.M.T. மருத்துவமனையின் இணைச்செயலாளர் என்ற பொறுப்பில் தான் உள்ளதாயும் அங்கு நிலவும் நிறை , குறைகளை மனம் திறந்து ஆதாரத்துடன் எடுத்துக்கூறினால் இதனை அதன் நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டுவதாயும் இறையருளால் நல்லதோர் தீர்வு காண முயற்சிக்கலாம் என்றதால் மன்ற உறுப்பினர்கள் பல கருத்துக்களையும், பல ஆலோசனைகளையும் மற்றும் சொந்த அனுபவங்களையும் இங்கே பதிவு செய்தார்கள்.
தீர்மானம்:
1, சமீபத்தில் தமிழகத்தில் தலைநகர் சென்னையில் ஏற்பட்ட தொடர் மழை பெரு வெள்ளம் காரணமாக பெரும் அவதிக்கும் பேரழிவுக்கும் உள்ளாகியுள்ள, நம் தமிழ் உறவுகள் சொந்தங்களுக்காக உதவும் வகையில் சென்னையில் உள்ள காயல் கல்வி வழிகாட்டு அமைப்பினரின்( KCGC ) வழிகாட்டலின் பிரகாரம் ரூபாய் 40,000/; நமது மன்றம் சார்பாக பங்களிப்பு செய்யவும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டு அதுவும் உடன் அவர்கள் வசம் கொடுக்கவும் செய்யப்பட்டது.
2, இது போன்று கடலூர் மாவட்ட பெருமழை வெள்ளத்திற்கு பாதிப்பான மக்களுக்கும் உதவும் வகையில் நம் ஊரில் புதிதாக அனைத்து ஜமாத்துகளையும், அமைப்புகளையும் ஒருங்கிணைத்து உருவாகியுள்ள காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரண அமைப்பு மூலமாக ரூபாய் 40,000/; நம் மன்றம் சார்பாக வழங்கிடவும் முடிவு செய்தும் இது தொகையும் இந்த கூட்டமைப்பின் நிர்வாகிகளிடம் நமது உள்ளூர் பிரதிநிதி ஹாஜி இஸ்மாயில் நஜீப் அவர்கள் மூலம் கையளிக்கப்பட்டது. இப்பாதிப்புக்குள்ளான மக்கள்கள் முழு நிவாரணம் அடைந்து நலமுடனும் வளமுடனும் வாழவும் வல்லோன் ரஹ்மான் நல்லுதவி புரியவும் பிரார்த்திக்கப்பட்டது.
3, மன்றத்தின் அடுத்த 92-வது செயற்குழு கூட்டம் எதிர்வரும் 2016 ஜனவரி 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மக்ரிபுக்கு பின் இன்ஷா அல்லாஹ் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது.
4, மன்றத்தின் 35-வது பொதுக்குழு கூட்டம் வழமைப்போல் காயலர் குடும்ப சங்கம நிகழ்வாக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2016 பிப்ரவரி 12-ஆம் தேதி வெள்ளிக் கிழமையன்று காலை 08-00 மணி முதல் இரவு 08 -00 மணி வரை உற்சாக துள்ளளுடன் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டும் இதற்கான விழாக் குழுவினர்களை அடுத்து வரும் கூட்டத்தில் தெரிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
சகோ. சீனா எஸ்.எச். மொக்தூம் முகம்மது நன்றி நவில சகோ. எஸ்.எஸ். ஜாபர்சாதிக் பிரார்த்திக்க துஆ கஃப்பாராவுடன் கலந்து கொண்ட உறுப்பினர்களின் ஆரோக்கியமான நல்ல பல கருத்துகள் பரிமாற்றத்திற்கு பின் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
சகோ.ஒய்.எம்.முஹம்மது சாலிஹ் அனுசரணையுடன் இரவு உணவு பரிமாறப்பட்டது.
செயற்குழு கூட்ட ஏற்பாடுகளை புனித மக்கா செயற்குழு உறுப்பினர்கள் மிக சிறப்புடன் செய்து இருந்தார்கள்.
தகவல் மற்றும் புகைப்படம் :
S.H. அப்துல்காதர்
எஸ்.ஏ .கே .செய்யது மீரான்.
காயல் நற்பணி மன்றம் ஜித்தா.
|