காயல்பட்டினம் நகரில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலைகளில் தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்றவும், சாலைகளைப் புதுப்பித்துத் தரவும் கோரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
1. மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.ஏம.எம்.முஹம்மது அபுபக்கர், மாநில செயலாளர் காயல் மகபூப், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுஹசன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஷ்காப், மாவட்ட துணைச்செயலாளர்கள் பெத்தப்பா சுல்தான், இப்ராஹிம் அத்ஹம், தாய்லாந்து காயிதே மில்லத் பேரவை தலைவர் வாவு எம்.எம்.சம்சுத்தீன், ஹாங்காங் காயிதே மில்லத் பேரவை செயலாளர் அல்ஹாபிழ் வி.எம்.டி.ஹஸன் மற்றும் காயல்பட்டணம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபுசாலிஹ், நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மது ஹசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏ.ஆர்.சேக்முகம்மது ஆகியோர் 17-12-2015 வியாழன் பகல் 01:00 மணி முதல் 01:30 மணி வரை தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ரவிக்குமார் அவர்களை சந்தித்து காயல்பட்டணம் நகராட்சி நிர்வாகம் தொடர்பாகவும் தற்போதைய மழை வெள்ளத்தால் சாலைகளின் நிலவரம் குறித்திம் பேச்சு வார்த்தை நடத்தி மனுவும் அளித்தனர்.
அம்மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கு அடுத்த ஒரே நகராட்சி காயல்பட்டணம் மட்டுமே. 45000 மக்களுக்குமேல் வாழும் இந்நகராட்சியில் கடந்த நான்கு வருடங்களாக நகராட்சி மன்றம் செயல்படாமல், நகராட்சி தலைவருக்கும், உறுப்பினர்களுக்கு மிடையே மோதல். நகராட்சி தலைவருக்கும் ஆணையாளருக்கும் இடையே பிரச்சனைகள் என தொடர்கதையாகிப் போன சம்பவங்களால் நகர் நலபணிகள் முற்றிலும் தேங்கிவிட்டன.
இதனிடையே சமீபத்தில் பெய்த பெருமழையால் இந்நகரின் சாலைகள் பெரும்பாளனவை போக்கு வரத்திற்கு தகுதியற்றவையாகி விபத்துகள் சர்வசாதரண மாகிவிட்டன. இந்நகரின் 43 சாலைகளை புதுப்பிக்க நகராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றிய பின் நகராட்சி தலைவர் நீதிமன்றத்தின் மூலம் தடையானை பெற்றுள்ளார். ஸி-கஸ்டம்ஸ் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளை போடுவதற்கும் தடையாணை பெற தயாறாக இருக்கிறார். என அறியவருகிறோம். நகராட்சி நிர்வாகத்துக்கோ, மன்றத்துக்கோ சம்பந்தம் இல்லாத சில தனி நபர்களின் தவறான வழிகாட்டல் எங்கள் ஊர் நகராட்சி தலைவருக்கு இருக்கின்ற காரணத்தால் ஒட்டு மொத்த நகரமும் துன்பம் அனுபவிக்கிறது.
எனவே ஆற்றல்மிக்க தாங்கள் செயல்படாத நகராட்சி நிர்வாகம் அமைந்துள்ள காயல்பட்டணத்தை நேரில் பார்வையிட்டு, சென்னை உயர்நீதி மன்ற மதுரை அமர்வில் வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கவும், சாலைகளை புதுப்பிது போடவும் உரிய முயற்சிக்க வேண்டுவதோடு, அரசின் திட்டங்கள் மக்களை உடனடியாக சென்றடையவும், வெள்ள நிவாரணம் உள்ளிட்ட மக்கள் பணிகள் விரைவாக நடைபெறவும் காயல்பட்டணம் நகராட்சியை கலைத்து விட்டு தனி அதிகாரியை நியமிக்க அரசுக்கு பரிந்துரை செய்யவும் அன்புடன் வேண்டுகிறோம்.
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், ’ஊராட்சியாக இருந்தால் நான் இப்போதே நடவடிக்கை எடுப்பேன். ஆனால் நகராட்சி ஒரு வரம்புக்கு மேல் தலையிட முடியவில்லை. 12 கோடி ரூபாய்க்கு மேல் பொதுநிதியை இருப்பில் வைத்துக் கொண்டு எந்தப்பணியும் நடைபெறாமல் இருப்பது வேதனை தருகிறது’ என்றார்.
’மக்களின் உணர்வுகள் போராட்டமாக மாறினால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அன்றைக்கு மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் நீங்கள்தானே தலையிடுவீர்கள். எனவே தமிழக அரசின் கவனத்திற்கு இப்போதே கொண்டு செல்லுங்கள்’ என முஸ்லிம் லீக் குழுவினர் குறிப்பிட்டனர்.
உடனே மாவட்ட ஆட்சியர் நகராட்சிகளின் இயக்குனறை தொடர்பு கொண்டு பேசினார். காயல்பட்டணம் நகராட்சி ஆணையரை அழைத்துக் கொண்டு 18-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை நேரில் வருகை தரவேண்டுமென நகராட்சிகளின் மண்டல இயக்குனருக்கு உத்தரவிட்டார். அவர்களுடன் கலந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிகூறினார்.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலை போக்கு வரத்திற்கு தகுதியற்றதாக உள்ளது. தங்களை சந்திக்க காயல்பட்டணத்திலிருந்து புதுக்கோட்டை சுற்றியே வருகிறோம் எனவே அந்த சாலையை புதுப்பித்துதர முஸ்லிம் லீக் குழுவினர் கோரினர். வரும் ஜனவரி மாதம் அப்பணி தொடங்கபடும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
கிழக்கு கடற்கரை சாலை செல்வாக்கு மிக்க அரசியல் பிரமுகர்களால் சிதைக்கப்பட்டு காயல்பட்டணம் புறக்கணிக்கப்பட்டது குறித்து முஸ்லிம் லீக் குழுவினர் வேதனை தெரிவித்தனர். தற்போது போடப்படுவது கிழக்கு கடற்கரை சாலையே அல்ல கன்னியாகுமாரி, திருச்செந்தூர், தூத்துக்குடி நெடுஞ்சாலைதான் தற்போதுள்ள மார்க்கத்தின் வழியாக சாலையின் தரம் அதிகரித்து ஆறு ஊர்களில் புறவழி சாலைகள் அமைத்து கொண்டுவரப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலை என்ற திட்டம் இப்பகுதிக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டார்.
நெருக்கடியான வேலைபளுவுக்கு மத்தியிலும் இவ்வளவு நேரம் ஒதுக்கித்தந்ததற்கு நன்றி கூறி முஸ்லிம் லீக் குழுவினர் திருநெல்வேலி சென்றனர்.
2. நகராட்சிகளின் மண்டல இயக்குனருடன் சந்திப்பு:
பின்னர் மாலை 04:00 மணிக்கு நகராட்சிகளின் நிர்வாக திருநெல்வேலி மண்டல் இயக்குனர் திரு.கலைச் செல்வம் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்த முஸ்லிம் லீக் குழுவினர் காயல்பட்டணம் நகராட்சி நிலவரங்கள் குறித்து விவரமாக எடுத்துக் கூறி மனு அளித்தனர்.
காயல்பட்டணம் நகராட்சி மன்றத்தில் வெளியார் தலையீடுகளால் எந்தப்பணியும் செய்ய முடியவில்லை. டெண்டர் காப்பியை பலரும் பிரதி எடுத்து கொண்டு ஒப்பந்தக்காரர்களை மிரட்டுவதால் யாரும் வேலை செய்வதற்கே அஞ்சுகின்றனர். தகவல் உரிமை சட்டத்தை சர்வ சாதாரனமாக பயன்படுத்தி மிரட்டுவதால் நமக்கு ஏன் வம்பு என எல்லோரும் ஒதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. என இயக்குனர் வேதனைப்பட்டார்.
அப்படியானால் காயல்பட்டணத்தின் 45 ஆயிரம் மக்களும் துன்பங்கள் தான் அனுபவிக்க வேண்டுமா ? நகராட்சி நிர்வாகம் இப்படி இருக்கிறது என்றால் உள்ளாட்சித்துரை அமைச்சர் அல்லது முதல் அமைச்சரின் கவனத்திற்கு ஏன் கொண்டு செல்ல வில்லை என முஸ்லிம் லீக் குழுவினர் கேட்டனர். நாளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள் வரச்சொல்லியுள்ளார். அவருடன் கலந்து நல்ல முடிவு எடுப்போம் என உறுதி கூறினார்.
3. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர கூட்டம்:
இதனைத் தொடர்ந்து அன்று இரவு 08:30 மணிக்கு நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்று நகர மற்றும் வார்டு நிர்வாகிகளுக்கு நடப்புக்கள் எடுத்துக் கூறப்பட்டன்.
மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர், மாநில செயலாளர் காயல் மகபூப், மாவட்ட செயலாளர் மஹ்மூது ஹசன் மற்றும் வாவு சம்சுத்தீன், வி.எம்.டி.ஹசன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஷ்காப், என்.டி.இஸ்மாயில், எம்.எல்.ஷேக்னா லெப்பை, முகம்மது அலி என்ற ஹாஜி காக்கா, எஸ்.கே.சாலிஹ், நகர செயலாலர் எ.எல்.எஸ்.அபுசாலிஹ், நேஷனல் காஜா எம்.ஏ.முஹம்மது ஹசன், ஏ.கே.மஹ்மூது சுலைமான் ஆகியோர் கருத்துகள் கூறினர்.
இதனை தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அவர்களின் சகோதரி செய்யது பாத்திமா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மது நாசர் அவர்கள் பூரண உடல் நலத்திற்கு பிரார்த்தித்தும் துஆ ஒதப்பட்டது.
மீண்டும் மாநில பொறுப்புக்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர், மாநில செயலாளர் காயல் மகபூப், மாநில துணைச் செயலாளர் எஸ்.எ.இபுராகிம் மக்கி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
டிசம்பர் 27 அன்று நடைபெறும் ஏ.கே.மஹ்மூது சுலைமான், 30 தேதி நடைபெறும் எம்.ஏ.முஹம்மது ஹசன் மற்றும் ஜனவரி மாதம் 2-ம் தேதி நடைபெறும் மர்ஹூம் பி.எச்.எம்.அப்துல்காதர், 17 ம் தேதி நடைபெறும் காயல் மகபூப் இல்ல திருமணங்களில் கலந்து சிறப்பிபது என்றும், வரும் தலைவர்களை வரவேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டு, ஜனவரி 16 அன்று பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு குழுக்கள் அமைக்கப்பட்டன. காயல்பட்டணம் நகராட்சி சம்பந்தமாக நகர்மன்ற தலைவரை சந்தித்து மனு அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
4. காயல்பட்டணம் நகர் மன்ற தலைவருடன் சந்திப்பு:
இத்தீர்மானத்தின் அடிப்படையில் 18-12-2015 வெள்ளி ஜும்ஆ தொழுகைக்குப்பின் நகர்மன்ற தலைவர் ஜனாபா ஐ.ஆபிதா ஷேக் அவர்களை அவரது இல்லத்தில் முஸ்லிம் லீக் குழுவினர் சந்தித்து நீண்ட நேரம் பேசினர். இரண்டு பக்க மனுவையும் அளித்தனர்.
அந்த மனுவில் முஸ்லிம் லீக் கோரிக்கையாக ’காயல்பட்டணம் நகராட்சி எல்லைக்குள் போடப்பட வேண்டிய 43 சாலைகளுக்கான நீதிமன்ற தடையானை வழக்கை இந்நகர மக்கள் நலன் கருதி திரும்பப் பெறவும், புதிதாக போட வேண்டிய சாலை மற்றும் மழை வெள்ள பாதிப்பு பணிகளை உடனடியாக துவங்கவும், அதன் மூலம் இந்நகருக்கு நன்மை செய்வதோடு மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றித்தரவும் தங்களை அன்புடன் வேண்டுகிறோம்’. என இடம் பெற்றிருந்தது.
43 சாலைகள் போட நீதிமன்றத்தில் தான் தடைவுத்தரவு பெற்றது, தான் ஊரில் இருக்கும் போது துணைத்தலைவர் தலைமையில் கூட்டம் நடத்தியது சட்டவிரோதம். மாவட்ட அமைச்சரின் அறிவுரைப்படி ஒரு வார்டுக்கு ரூ 20 இலட்சம் வீதம் புதிய சாலைகள் அமைக்கும் மனுக்களை கூட உறுப்பினர்கள் என்னிடம் நேரில் தராமல் பதிவுத்தபால் மூலம் அனுப்பினர். நான் எந்த தகவல் கேட்டாலும் ஆணையாளர் தகவல் தருவதில்லை. சாலை போடுவதற்கு பொறியாளர் இல்லாமல் உறுப்பினர்களே எஸ்டிமேட் தயாரித்தனர் ஆகவேதான் தான் நீதிமன்றம் சென்றதாக குறிப்பிட்டார். ஊர் நலம் கருதி தலைவரும் நகர் மன்ற உறுப்பினர்களும் ஈகோவை கைவிட்டு எஞ்சியுள்ள சிலமாதங்களாவது பணிகளை விறைந்து செயல்படுத்த கோரினோம்.
5. மாவட்ட ஆட்சியர் நகராட்சி நிர்வாக இயக்குனர் வருகை:
முஸ்லிம் லீக் குழுவினரின் சந்திப்பின் பயனாக நகராட்சி ஆணையரும் மண்டல இயக்குனரும் 18-ம் தேதி காலை தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தைவர் மேற்கண்ட இருவரையும் அழைத்துக் கொண்டு பகல் 01:30 மணிக்கு காயல்பட்டணம் வருகை தந்தார். அவருடன் திருச்செந்தூர் கோட்டாச்சியர் திரு.தியாக ராஜன், வட்டாசியர் திரு. வெங்கடாசலம் உடன் வந்தனர். பின்னர் நகரின் சில இடங்களை அவர்கள் பார்வையிட்டனர். தேவையான உடனடி பணிகள் செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார்.
6. காயல்பட்டணம் நகராட்சி ஆணையருடன் சந்திப்பு:
18 ம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 03:00 மணிக்கு முஸ்லிம் லீக் குழுவினர் தங்கள் முயற்சியின் தொடர்ச்சியாக கே.எம்.டி மருத்துவமனை வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளின் மழைநீரை வெளி யேற்றுவது தொடர்பான பணிகளை மேற் கொண்டிருந்த நகராட்சி ஆணையார் திரு.காந்திராஜன் அவர்களை சந்திது நகராட்சி நிர்வாக சீர்கேடுகள், நகராட்சி தலைவர் கூறிய குற்றச் சாட்டுக்கள், நகர மக்களின் குமுறல் அனைத்தையும் எடுத்துக் கூறினர்.
மாவட்ட ஆட்சியரும், மண்டல இயக்குனரும் தமக்கு சில உத்தரவுகள் பிறப்பித்துள்ளதாகவும், நான்கு மோட்டார் பம்புகள் வந்து விட்டன மேலும் மூன்று நாளை வந்துவிடும் என்றும் மழைநீர் வெளியேற்றப்பட்டதும் ஜே.சி.பி மூலம் சலைகள் போக்கு வரத்திற்கு சீராக்கித்தரப்படும் என்றும் பிளீச்சிங் பவுடர் போடப்பட்டு சுகாதாரம் காக்கப்படும் என்றும் தொடர்ந்து சாலைப்பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார். அவர் இந்த உறுதி மொழிதரும் போது நூற்றுக் கணக்கான பொதுமக்களும் உடனிருந்தனர்.
7. முதல் அமைச்சருக்கு மனு:
மாவட்ட ஆட்சியர், நகராட்சிகளின் மண்டல இயக்குனர், நகர்மன்ற தலைவர் ஆகியோருக்கு தரப்பட்ட மனுக்களின் விவரங்களுடன் மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர், நகராட்சிகளின் இயக்குனர் ஆகியோருக்கு மணுக்கள் அனுப்பட்டன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகினரின் 30 மணி நேர இடைவிடாத நடவடிக்கைகளின் காரணமாக சில அதிரடிபணிகள் காயல்பட்டணத்தில் நடைபெற தொடங்கியுள்ளன. ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு இது ஒரு நல்ல அடித்தலமாக அமையட்டும் என்ற வாழ்த்துக்களை முஸ்லிம் லீக் குழுவினருக்கு பொதுமக்கள் தெரிவித்தனர்.
”நல்ல வழி காட்டல் இல்லாத காரணத்தாலேயே நான்கு வருடங்கள் வீனாகி விட்டன. நாங்கள் உங்களுக்கு துணைபுரிய நான்கு வருடங்களுக்கு முன்பே உங்களை இல்லத்தில் தேடிவந்து நாங்கள் வழிகாட்டுகிறோம். என்றோம். ஆனால் நீங்கள் எங்களை பயன்படுத்த தவறிவிட்டீர்கள் அதன் விளைவை இப்போது பார்த்தீர்களா ? என நகர் மன்ற தலைவர் இடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர் குறிப்பிட்டது சிந்திக்கக் கூடிய செய்தி.
காலம் கடற்து விட்டாலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினரின் கோரிக்கை மனுவை நகர்மன்ற தலைவர் இப்போதாவது செயல்படுத்துவாரா என்பதே நகர மக்களின் எதிர்பார்ப்பு.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[விடுபட்ட படம் இணைக்கப்பட்டது @ 15:42 / 20.12.2015] |