தமிழ்நாடு தௌஹீது ஜமாஅத் அமைப்பின் காயல்பட்டினம் கிளை நிர்வாகிகளும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பின் மாநில நிர்வாகிகளும் நகர்மன்றத் தலைவரை வெள்ளியன்று சந்தித்து மனு கொடுத்தனர். இது குறித்து நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்:
தமிழ்நாடு தௌஹீது ஜமாஅத் அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பாக குழுவினர் என்னை - வெள்ளிக்கிழமை அன்று சந்தித்து, மனு ஒன்றினை வழங்கினர். அந்த மனு - சாலைகள் உட்பட சில நகராட்சி சேவைகளில் உள்ள குறைப்பாடுகளை களைவது குறித்ததாகும். இந்த சந்திப்பின் போது, நகராட்சி நடப்புகளை - அந்த குழுவினரிடம் விரிவாக எடுத்துரைத்தேன்.
= மழைக்காலம் துவங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பே, சாலைகளுக்கு பேட்ச் வொர்க் செய்ய ஆணையருக்கு தெரிவிக்கப்பட்டது. அதனை செய்ய அவர் எந்த முயற்சி எடுக்கவில்லை.
= நகரில் போட திட்டமிடப்பட்ட சாலைகள் குறித்த மதிப்பீடு விபரங்களை - கேட்டு, பல மாதங்கள் ஆகியும், இன்று வரை ஆணையர் வழங்கவில்லை.
= நகராட்சியின் செலவுகள் முறைப்படி செய்யப்படுகிறதா என பார்க்கும் கடமையும், சட்டப்பூர்வமான உரிமையும் நகர்மன்றத் தலைவருக்கு உண்டு. அந்த கணக்கு விபரங்களை - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் - கேட்டும், ஆணையர் இன்று வரை தரவில்லை.
இவைகளை அவர்களுக்கு எடுத்துரைத்தேன்.
இது தவிர - மக்களுக்கு தேவையான் நகராட்சி பணிகள் - தரமாகவும், நியாயமாகவும், முறைக்கேடுகள் இல்லாமலும் நடைபெற - நான் பல மாதங்களாக எடுத்து வரும் பிற முயற்சிகளையும் - விளக்கினேன். இவைகள் சம்பந்தமான ஆவணங்களின் நகல்களையும், இந்த சந்திப்பிற்கு பிறகு, சனிக்கிழமையன்று - அவ்வமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான தாஹிர் அவர்களிடம் வழங்கினேன்.
வெள்ளிக்கிழமையன்று - இந்தியன் யூனியன் முஸ்லிம் கட்சியின் நிர்வாகிகளும் என்னை சந்தித்து மனு கொடுத்தனர். அவர்களிடமும் - நகராட்சி நடப்புகளை விரிவாக எடுத்து சொன்னேன்.
நகர்மன்றத் தலைவருக்கும், நகர்மன்றத்திற்கும் - தீர்மானங்கள் மூலமாக பணிகள் செய்ய அனுமதி வழங்கும் உரிமையே உள்ளது; பணிகளை செய்ய வேண்டியது - அதிகாரிகளே. அதற்காக தான் - மக்கள் வரிப்பணத்தில் இருந்து அவர்களுக்கு, சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த அதிகாரிகள், ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய் நகராட்சி மூலமாக சம்பளமும் பெற்று விட்டு வேலைகளை முறையாக செய்ய வில்லை என்றால், அது குறித்து - தலைவரால், மேல் அதிகாரிகளுக்கு புகார் கொடுக்க முடியும். முறைக்கேடுகளில் ஈடுபட்டுள்ள ஆணையர் உட்பட அதிகாரிகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளேன். அதன் மீது நடவடிக்கை எடுப்பது அவர்களின் கடமை.
சட்டங்கள் நகர்மன்றத் தலைவருக்கு என வழங்கும் குறுகிய அதிகாரங்கள் மூலம், செய்ய முடிந்த அனைத்து பணிகளையும், எனது மனசாட்சிபடி செய்துள்ளேன். எஞ்சியுள்ள மாதங்களிலும் - அவ்வழியிலேயே, என் பணிகளும் - இறைவனின் துணையுடன் - தொடரும்.
இஸ்லாமிய ஆட்சியில் நாம் இல்லை, தவறுகள் நடக்க தான் செய்யும், கண்டு கொள்ளாதீர்கள், அப்போது தான் வேலை நடக்கும் என்ற அறிவுரையை தவிர்த்து - நகராட்சி நல்ல வகையில் செயல்புரிய ஆர்வம் தெரிவிக்கும் - அனைத்து அமைப்புகளுடனும், தனி நபர்களுடனும் - நகர் நலனுக்காக பணியாற்ற நான் எப்போதும் தயாராக உள்ளேன் என்பதனை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் நகர்மன்றத் தலைவர் பதிவு செய்துள்ளார்.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
|