காயல்பட்டினத்திலுள்ள ஏழை - எளியோர் துயர் துடைப்பு உள்ளிட்ட நகர்நலப் பணிகளுக்காக, ரியாத் காயல் நல மன்றம் சார்பில், நடப்பு 2015ஆம் ஆண்டில் மட்டும் 25 லட்சத்து 3 ஆயிரத்து 230 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக, அதன் கடந்த செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மன்றத்தின் செயலாளர் ஏ.டீ.ஸூஃபீ இப்றாஹீம் வெளியிட்டுள்ள - மன்றத்தின் ஆண்டறிக்கை:-
2015-ம் ஆண்டின் ரியாத் காயல் நலமன்றத்தின் செயல்பாடுகள்: ரூ. 25,03,230/ (இருபத்தைந்து இலட்சத்து மூவாயிரத்து இருநூற்று முப்பது ரூபாய்) வழங்கப்பட்டுள்ளது.
உலக காயல் நல மன்ற வரிசையில் பழமையான நல மன்றங்களின் ஒன்றான எமது ரியாத் காயல் நல மன்றம், நமதூருக்கு உதவிக்கரம் நீட்டுவதில் முன்னோடி மன்றமாக தன்னால் இயன்ற உதவிகளை இன்று வரை வெகு சிறப்பாக செய்து வருகிறது, எல்லாப்புகழும் வல்ல இறைவனுக்கே.
2015-ம் ஆண்டில் எம்மன்றம் நம் நகர் நலனுக்காக செய்த நற்பணிகளின் விபரங்கள் தங்களின் பார்வைக்கு:
எமது ரியாத் காயல் நல மன்றம், முக்கியமாக, மருத்துவம், சிறு தொழில் மற்றும் கல்வி இம்மூன்றில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறது, கூடுதலாக ரமலான் கால உணவுப்பொருள் வழங்கும் திட்டம், நோன்புப்பெருநாள் இரவில் நாட்டுகோழி திட்டம், மாதந்திர உணவுப்பொருள் வழங்கும் திட்டம், cut off மதிப்பெண் பரிசுத்தொகை திட்டம் மற்றும் இதர காயல் நல மன்றங்களோடு இணைந்து இமாம் & முஅத்தின் ஊக்கத்தொகை திட்டம் மேலும் நமது புதிய முயற்சியாக புறநகர் பள்ளிகளுக்கு அத்தியாவசிய தேவைகள் வழங்கியது ஆகிய சிறப்பு வாய்ந்த நல்ல பல திட்டங்களை முன்னெடுத்து நம் ஊரில் உள்ள ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் வகையில் செயல் படுத்தி வருகிறது.
சவூதி அரேபியாவில் வசித்து வரும் உறுப்பினர்களில் மிகுதியானோர் குறைவான சம்பள அடிப்படையின் கீழ் வேலை செய்து வருபவர்கள் என்பது நமதூர் மக்கள் யாவரும் நன்கு அறிந்ததே, இருப்பினும் நல்லுள்ளம் கொண்ட நமதூர் மற்றும் நமதூர் அல்லாத உறுப்பினர்கள் அனைவரும் அவர்களால் இயன்ற அளவு சந்தா மற்றும் நன்கொடைகளை நமதூர் ஏழைகளுக்காக வாரி வாரி வழங்குகிறார்கள். அதன் பிரதிபலிப்பே இப்பெரிய தொகையை 2015-ம் வருடத்தில் நமதூர் மக்களுக்காக வழங்கி இருக்கிறோம் அல்ஹம்துலில்லாஹ். இறைவன் எம்மன்ற உறுப்பினர்களின் வருமானத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்தி தருவானாக ஆமீன்.
எம் ரியாத் மன்றம் வருடத்திற்கு 6 செயற்குழு மற்றும் 2 பொதுக்குழு கூட்டத்தை கூட்டி மேற்கூறப்பட்ட நல்ல திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து வருகிறது. மருத்துவ அமைப்பு மூலமாக மற்றும் நேரடியாக பெறப்படும் விண்ணபங்களை செயற்குழு கூட்டத்தில் ஆராய்ந்த பிறகு அதற்கு உண்டான உதவித்தொகையை வெகு விரைவாக அதை விண்ணப்பித்தோர் கையில் கிடைக்க எங்கள் அமைப்பின் காயல் பிரதிநிதி மூலம் வழி செய்யப்படுகிறது.
மருத்துவ உதவிகள்:
2015-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 96 மனுதாரரின் விண்ணபங்களில் 89 விண்ணப்பங்களுக்கு உதவிகள் ரூ. 12,94,755/- இதுவரை வழங்கியுள்ளோம். இவ்வளவு தொகையை வழங்கியதால் நாம் பெருமைப்படுவதா? அல்லது நோய்கள் நமதூரை ஆட்டிப்படைக்கிறதே என்று கவலைப்படுவதா? எது எதுவாக இருந்தாலும் நோயை தருபவனும், அதை சுகப்படுத்துபவனும் இறைவன் ஒருவனே. அவன் தந்திருக்கின்ற பரக்கத்தைக்கொண்டு ஏழ்மையில் வாடும் நமதூர் வறியவர்களுக்கு எம்மால் இயன்ற உதவியை செய்வதே சாலச்சிறந்தது என்ற நோக்கிலேயே உதவிகள் செய்யப்பட்டு வருகிறது, மேலும் இத்தருணத்தில் அனைத்து மக்களின் பிணிகள் நீங்கி நீடூழி வாழ இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.
கல்விக்காக:
கல்வியில் உயர்நிலை பட்டப்படிப்பு உதவித்தொகை ஏற்கனவே நமதூரில் IQRA கல்விச்சங்கம் செம்மையாக சிறப்புடன் தன் சேவையை செய்து வருகிறது. அது போக நம் மன்றத்தை நாடி பள்ளிக்கல்வி, முதுகலை பட்டப்படிப்பு, பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் துறையில் படிக்கும் மாணவர்களுக்கும் உதவி தொகையாகவும், கடனாகவும் உதவி செய்து வருகிறோம். கல்வியில் நல்ல மதிப்பெண் எடுத்தால் மட்டுமே அந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருடத்திற்கு பொறியியல் துறைக்கு ரூ. 25,000/ வீதம் 4 வருட படிப்பிற்கு மொத்தம் ரூ. 1 லட்சம் வரை கொடுத்து வருகிறோம். கடனுதவி திட்டத்தில் பயன் பெற்று, தான் வேலையில் சேர்ந்த பிறகு அதை செவ்வனே திரும்பச் செலுத்தும் மாணவர்களும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு மட்டும் ரூ. 1,74,500/- வழங்கியுள்ளோம்.
சிறுதொழில் முனைவோர்களுக்கு:
நமதூரில் சிறுதொழில் உதவி தேடுவோர் ஓவன், கிரைண்டர், தையல் மிஷின் மற்றும் எம்ப்ராயிடரி மிஷின் ஆகிய பொருட்களை கேட்டே விண்ணப்பங்கள் அதிகமாக வருகிறது. இப்பொருட்களின் மூலம் வருவாயை தனது குடும்ப வாழ்வாதாரமாக எடுத்து நடத்தும் இல்லத்தரசிகளின் விண்ணப்பம் உடனே ஒப்புதல் அளித்து அதன்பேரில் எம்மன்ற பிரதிநிதி மூலம் தேவையான உபகரணங்கள் வழங்கி வருகிறோம். அந்த வகைக்கு இவ்வருடத்தில் மட்டும் ரூ. 83,200/- வழங்கியுள்ளோம்.
ரமலான் உணவுப்பொருள் வழங்கல் திட்டம்:
இத்திட்டத்தை கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக நடத்தி வருகிறோம், அடுத்தடுத்த வருடங்களில் பயனீட்டாளர்கள் எண்ணிகையை எங்களால் இயன்ற அளவு கூட்டி நமதூர் வறியவர்கள் அவர்களின் தேவைக்கேற்ப சஹர்/இப்தார் அத்தியாவசிய மளிகைச்சாமான்கள் 29 பொருட்களாக ரூ. 2,751 வீதம் 120 பயனாளிகள் இவ்வருடம் பயன் பெற்றுள்ளார்கள், மொத்தம் ரூ. 3,30,125/-செலவு இவ்வருடம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பான மாதத்தில் நம் மன்ற உறுப்பினர்கள் அவர்களால் இயன்ற அதிகமான பங்களிப்பை வழங்கி அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்றுக்கொள்வதில் மற்றும் அந்த வறியவர்களின் துஆப்பேற்றில் தங்களை இணைத்துக்கொள்வதிலும் போட்டியாகவே கருதுகிறார்கள்.
நோன்புப்பெருநாள் நாட்டு கோழி வழங்கும் திட்டம்:
மாஷா அல்லாஹ்! இந்த புதுமையான திட்டத்தை "ரியாத் மன்றமே" முதலில் செயல் படுத்துகிறது என்றே எண்ணுகிறோம். நோன்புப்பெருநாள் இரவு நாட்டுகோழி கறி 750 கிராம் மேலே ரமலான் உணவுப்பொருள் பெறும் அதே பயனீட்டாளர்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வகைக்கு ரூ. 42,912/- ஒதுக்கீடு செய்து சகோதரர் தர்வேஷ் அவர்களின் உதவியுடன் மிக நேர்த்தியாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ். இனி வரும் காலங்களிலும் இது போன்ற நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
CUT OFF மதிப்பெண் பரிசுத்தொகை வழங்கல்:
நமதூர் கல்வி நிலையங்களில் பயின்று வரும் +2 மாணவ/மாணவிகளுக்கு cut off எனும் விகிதாச்சார அடிப்டையில் மதிப்பெண் எடுத்து வெறும் கல்லூரிகட்டணம் மட்டுமே செலுத்தி இலகுவாக பொறியியல் மற்றும் மருத்துவ துறைக்கு தேர்ச்சி பெற வழி வகுக்க கூடிய எண்ணத்தில் எம்மன்றம் கடந்த 5, 6 வருடங்களாக துண்டுப்பிரசுரம்/இணையதள வாயிலாக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், மேலும் அவர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அவர்களுக்கு எங்களால் வரையறுக்கப்பட்ட மதிப்பெண் பெறுவோருக்கு பரிசாக ரூ. 500 முதல் ரூ. 3000 வரை வழங்கி வருகிறோம். கடந்த கல்வியாண்டு 2014-15 முதல் வணிகவியல் துறையில் ஊரின் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ/மாணவிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கியுள்ளோம். இவ்வகைக்காக எம்மன்றம் 2015-ல் ரூ. 29,000/- வழங்கியுள்ளது. மாணவர்களுக்கு பொறியியல்/மருத்துவம் வகைக்கும்,மாணவிகளுக்கு மருத்துவ துறைக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
மாத உணவுப்பொருள் வழங்கல்:
சென்ற ஆண்டு முதல் இந்த ஆண்டும் தொடர்ந்து 13 குடும்பகளுக்கு குறிப்பாக நமதூரை பூர்வீகமாக கொண்ட மிகவும் ஏழ்மையான, வாய் திறந்து உதவிகள் கேட்பதற்கு மனம்குறுகிய, கணவனை இழந்த மற்றும் பிள்ளைகள் இல்லாத பணம் ஈட்ட வழியே இல்லாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மாதத்திற்கு தேவையான மளிகைச்சாமான்கள் ரூ. 1500 வீதம், கூடுதலாக ரூ. 200 கைச்செலவிற்கு, ஆக மொத்தம் ரூ. 2,65,200/- சிறப்பான முறையில் ஒரு மளிகை கடையை ஏற்பாடு செய்து குறித்தநேரத்தில் ஒவ்வொரு மாதமும் யாரும் அறியாத வகையில் (மிக இரகசியமாக) அவர்களிடத்தில் சேர்க்கப்படுகிறது. அவர்கள் எம் காயல் பிரதிநிதியிடம் மனமுறுகி துஆ செய்வதை எல்லாம் வல்ல அல்லாஹ் கபூல் செய்வானாக. இத்தகைய சிறப்பான செயல்பாடுகளில் எங்கள் ரியாத் மன்ற உறுப்பினர்கள் ஒருவொருக்கொருவர் போட்டிபோட்டு தாரளமாக உதவி செய்து வருகிறார்கள், அல்ஹம்துலில்லாஹ்!
புறநகர் பள்ளிகளுக்கு உதவி திட்டம்:
இன்றைய கால கட்டத்தில் சமய நல்லிணக்கம் ஏற்படும் வகையில் நமதூரை சுற்றியுள்ள புறநகர் தொடக்கப்பள்ளிகளுக்கு மிக அத்தியாவசிய தேவைகள் செய்து கொடுக்க மன்ற செயற்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் குறிப்பிட்டுள்ள பள்ளிகளுக்கு தண்ணீர் மோட்டார், நீர் தேக்க தொட்டி கட்டி கொடுத்தல், குடி தண்ணீர் சுத்திகருப்பு கருவிகள், பாட புத்தகங்கள், சாப்பாடு பாத்திரங்கள், பள்ளிசீருடைகள்,காலணிகள் மற்றும் தொலைக்காட்சி/DVD ஆகிய முக்கிய தேவைகளுக்காக வருடத்திற்கு ரூ. 1, 20, 000/ ஒதுக்கீடு செய்து இதுவரை முதற்கட்டமாக ரூ. 83, 538/- செலவிடப்பட்டு சிறப்பான முறையில் செயல் படுத்தி வருகிறோம். வரும் காலங்களில் இது விரிவு படுத்தப்படும் என்றும், இது போன்ற நற்காரியம் வரும் சந்ததியினர்க்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக அமையும் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது என்று கருதுகிறோம். இத்திட்டம் IQRA கல்விச்சங்கம் ஒருங்கிணைப்பில் மிக நேர்த்தியாக செயல் படுத்தபடுகிறது. அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றியை சமர்ப்பித்து கொள்கிறோம். இதுவரை எம்மன்றம் மூலமாக பயன் பெற்ற பள்ளிகள்...
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அலியார் தெரு
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஓடக்கரை
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மங்களவாடி
தேசிய துவக்கப்பள்ளி, அருணாசலபுரம்
அருள்ராஜ் துவக்கப்பள்ளி, ரத்தினாபுரி
இமாம் மற்றும் முஅத்தின் ஊக்கத்தொகை:
வருடா வருடம் இந்த நல்லதொரு திட்டத்தில் எங்கள் மன்றம் பங்கெடுப்பதில் பெருமிதம் அடைகிறோம். இது பாங்காக் காயல் நல மன்றம் மிக சிறப்பாக வழி நடத்தி வரும் திட்டமாகும். அதில் மற்ற உலக காயல் நல மன்றங்களோடு நாங்களும் கடந்த 3 வருடங்களாக இணைந்து அவ்வகைக்கு கடந்த வருடத்தில் எங்களது பங்களிப்பாக ரூ. 30,000/- செலுத்தி நமதூர் இறை இல்ல பணியாட்களின் பிரார்த்தனையில் நாங்களும் சேர்ந்து கொண்டோம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
மற்றவைகள்:
IQRA அமைப்பில் எம்மன்ற உறுப்பினர்களை இணைப்பதோடு, ஆயுட்கால உறுப்பினர்களாகவும் சேர்த்து, வருடாந்திர admin செலவுகளிலும் மற்ற மன்றங்களோடு இணைந்து செயல்படுகிறோம். அதுபோல் மருத்துவ கூட்டமைப்பான SHIFA-வின் admin செலவுகளிலும் பங்கெடுத்து கொள்கிறோம். இது தவிர அவசர தேவையின் பேரில் விண்ணப்பிக்கப்படும் இயற்கை பேரிடர் மற்றும் இதர சேவைகளுக்கும் இவ்வருடத்தில் மொத்தம் ரூ. 1, 70, 000/- செலவிடப்பட்டுள்ளது.
இத்தருணத்தில் எங்கள் மன்ற அமைப்பாளர்களில் ஒருவரான எம் மன்றத்தின் காயல் பிரதிநிதி சகோதரர் தர்வேஷ் அவர்களுக்கு எம் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். மன்றம் வகுக்கின்ற அனைத்து திட்டங்களையும் மிக நேர்த்தியாக சரியான நேரத்தில் காயல் பதியில் அதை செயல் வடிவம் கொடுத்து பயனீட்டாளர்கள் இல்லம் சென்று முறையே விசாரித்து அதை பயனுறச் செய்வதில் கை தேர்ந்தவர் அவர். அவரது ஹக்கிலும் மேலும் இது போன்ற நற்செயல்களுக்கு உள்ளத்தால், உடலால் மற்றும் பணத்தால் உதவிக்கரம் நீட்டும் மன்ற உறுப்பினர்களாகிய நமதூர் மற்றும் வெளியூர் அன்பர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு அவர்களது ஈருலக வாழ்கை நற்பாக்கியம் பெற்றிட பிரார்த்திக்குமாறு உங்கள் அனைவரையும் வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
N.M.செய்யித் இஸ்மாயீல்
செய்தித் தொடர்பாளர் - ரியாத் கா.ந.மன்றம்
ரியாத் காயல் நல மன்றத்தின் சார்பில் கடந்தாண்டு (2014) வெளியிடப்பட்ட ஆண்டறிக்கை குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |