டிசம்பர் 03ஆம் நாளன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் 03.12.2015. அன்று மாற்றுத்திறனாளிகள் நாள் விழா கொண்டாடப்பட்டது.
துளிர் அறக்கட்டளை செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை முன்னிலை வகித்தார். ஹாஃபிழ் எஸ்.எம்.எம்.டீ.அமீர் சுல்தான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மாற்றுத்திறனாளிகளை சமூகமும், குடும்பமும் அங்கீகரித்து அரவணைக்க வேண்டும் என்றும், அவர்களைப் பரிகாசம் செய்வது பாவம் என்றும், அவர்களுக்குத் தேவையான மருத்துவம், கல்வி உள்ளிட்ட பயிற்சிகளைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் துளிர் பள்ளி திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஸான் பேசினார்.
பின்னர், பள்ளியின் மாற்றுத்திறனாளி சிறாரின் ஆடல், பாடல், கதை சொல்லல் உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
விழாவின் சிறப்பம்சமாக 3 நிமிடங்களில் ஓவியம் வரையும் போட்டி நடத்தப்பட்டது. பள்ளி மாணவர் குரு விக்னேஷ் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஓவியம் வரைந்து, முதற்பரிசைப் பெற்றார். மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர் அனைவருக்கும் சிறப்பு விருந்தினர் இனிப்பு வழங்கினார்.
துளிர் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |