கடலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரணக் கூட்டமைப்பின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. அவர்களின் மீள்குடியமர்வுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
அண்மையில் பெய்த தொடர் கனமழையால், சென்னை - கடலூர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து அப்பகுதி மக்களின் வீடுகள் மூழ்கி, அடுத்த வேளை உணவுக்கும் பிறரை எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டது. இதனால் கவலையுற்ற மனிதாபிமானமிக்க பல்லாயிரக்கணக்கானோர், சமய சார்புகளற்று களமிறங்கிப் பணியாற்றினர்.
அந்த வரிசையில், காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) ஒருங்கிணைப்பில், “KCGC வெள்ள நிவாரணக் கூட்டமைப்பு” எனும் பெயரில் தற்காலிக அமைப்பை நிறுவி, நிவாரணப் பணிகள் செய்யப்பட்டன.
கூட்டமைப்பு துவக்கம்:
கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைப்பிற்காக, துவக்கத்தில் காயல்பட்டினத்தில் சமுதாய அமைப்புகள் தனித்தனியே களமிறங்கிப் பணியாற்றின. அரிமா சங்கம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் அவர்களனைவரையும் ஒருங்கிணைத்து, “காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரணக் கூட்டமைப்பு - KMFRO” எனும் பெயரில் தற்காலிக அமைப்பு துவக்கப்பட்டது.
நிவாரண உதவி திரட்டல்:
இவ்வமைப்பின் மூலம் - நகர மக்களிடமிருந்தும், உலக காயல் நல மன்றங்களின் துணையுடனும் நிவாரணப் பொருட்கள் திரட்டப்பட்டன.
இதற்கிடையே, காயல்பட்டினத்திலும் பெய்த தொடர் கனமழையால், நகரிலுள்ள தாழ்வான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கவே, அவர்களுக்காகவும் நிவாரணப் பொருட்களும், நிதியும் திரட்டப்பட்டன. நிறைவில் - பயன்படுத்திய நல்லாடைகளும், பாத்திரங்களும் பல்லாயிரக்கணக்கில் திரட்டப்பட்டன. அத்துடன், மொத்த நிவாரண நிதியாக சுமார் 31 லட்சம் ரூபாய் வரையிலும் திரட்டப்பட்டுள்ளது.
சிறப்புக் குழு ஆய்வு:
கடலூர் மற்றும் சுற்றுப்புறங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது குறித்து திட்டமிடுவதற்காக, 6 பேர் கொண்ட சிறப்புக் குழு கடலூருக்குச் சென்று, அங்குள்ள சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் ஆலோசனைகளைப் பெற்று வந்ததன் அடிப்படையில், காயல்பட்டினத்தில் அதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
திருச்சியில் ஏற்பாட்டுப் பணிகள்:
திரட்டப்பட்ட இத்தொகையிலிருந்து, சுமார் 12 லட்சம் ரூபாய் செலவில், பாத்திரங்கள், கொசு வலை, போர்வை உள்ளிட்ட - கடலூர் பகுதி மக்களுக்கு மிக விரைவாகவும், முதன்மையாகவும் தேவைப்பட்ட பொருட்கள் திருச்சியிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. இப்பணிகளைச் செய்வதற்காக, காயல்பட்டினத்திலிருந்து, எம்.ஏ.காழி அலாவுத்தீன் (TAS), எம்.எம்.முஜாஹித் அலீ ஆகிய சமூக ஆர்வலர்கள், 14.12.2015. அன்று துவங்கி, இரண்டு நாட்கள் திருச்சியில் முகாமிட்டு பணிகளைச் செய்தனர்.
காயல்பட்டினத்திலிருந்து புறப்பாடு:
காயல்பட்டினத்தில் திரட்டப்பட்ட நிவாரணப் பொருட்கள், வாடகை வாகனங்களில், 15.12.2015. அன்று நள்ளிரவில் திருச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டன.
அவற்றையும், திருச்சியில் புதிதாகக் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களையும், திருச்சி ரோஸ் திருமண மண்டபத்தில் வைத்து, வகைப்படுத்திட - எந்த வாடகையும் பெறாமல் அதன் உரிமையாளர் வழங்கியதையடுத்து, ஏற்பாட்டுப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. திருச்சியில் வசிக்கும் தன்னார்வங்கொண்ட காயலர்கள் பலரும், இப்பணிகளில் இணைந்து செயல்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வினியோகிக்கப்பட்ட பகுதிகள்:
இவ்வாறாக, பொருட்கள் வகைப்படுத்தப்பட்டு, முறையாகப் பொதியிடப்பட்டு, கடலூர் மற்றும் சுற்றுப்புற கிராமப்புறங்களில் வினியோகிக்க எடுத்துச் செல்லப்பட்டன.
கடலூர், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, நெல்லிக்குப்பம், இலந்தைவாடி, வன்னியர்பாளையம், தனவள்ளி நகர், மஞ்சக்குப்பம், குண்டூர் உப்பளவாடி கிராமம், பெரியசாமி நகர், புதிய உப்பளவாடி ஆகிய பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் - பாதிக்கப்பட்டவர்களுக்கு வினியோகிக்கப்பட்டன. இதன்மூலம் பயன்பெற்றவர்களுள் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என அனைத்து சமயங்களைச் சேர்ந்தோரும் அடங்குவர்.
தன்னார்வலர்களை கண்ணியப்படுத்தும் நிகழ்ச்சி:
நிவாரணப் பொருட்களைத் திரட்டவும், அவற்றை கடலூர் மற்றும் சுற்றுப்புறங்களில் வினியோகிக்கவும், காயல்பட்டினத்திலிருந்து அரிமா சங்கம் காயல்பட்டினம் கிளை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், SDPI, காக்கும் கரங்கள் நற்பணி மன்றம், ஐக்கிய சமாதானப் பேரவை, காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை, ஐ.ஐ.எம். பைத்துல்மால் அறக்கட்டளை, ஜாவியா பைத்துல்மால் அறக்கட்டளை உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களின் சார்பில் ஏராளமான பொறுப்பாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் களப்பணியாற்றினர்.
அவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி கண்ணியப்படுத்தும் நிகழ்ச்சி, 22.12.2015. செவ்வாய்க்கிழமையன்று, காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவிலுள்ள எஸ்.இப்னு ஸஊத் இல்லத்தில் நடைபெற்றது.
கருத்துரைகள்:
தனி ஆர்வலர்களின் அனுசரணையுடன், துவக்கமாக அனைவருக்கும் விருந்துபசரிப்பு நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரணக் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா தலைமையுரையாற்றினார்.
துணைத்தலைவர்களான எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, ‘ஜெஸ்மின்’ ஏ.கே.கலீலுர்ரஹ்மான், ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், ஒருங்கிணைப்பாளர்களான டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், வி.ஐ.புகாரீ, எம்.எல்.ஷேக்னா லெப்பை, வி.டி.என்.அன்ஸாரீ, யு.முஹம்மத் நவ்ஃபல், பொருளாளர்களான வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், ‘ஜுவெல் ஜங்ஷன்’ கே.அப்துர்ரஹ்மான், செயலாளர்களான மவ்லவீ ஹாஃபிழ் டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ (ஐ.ச.பேரவை), பிரபு ஹபீப் முஹம்மத் [PHM] (அரிமா சங்கம்), எம்.கே.ஜாஹிர் ஹுஸைன் (தமுமுக), எம்.ஏ.கே.ஜைனுல் ஆப்தீன் (காக்கும் கரங்கள் நற்பணி மன்றம்), உலக காயல் நல மன்ற ஒருங்கிணைப்பாளர்களான எம்.எஸ்.செய்யித் முஹம்மத் (தக்வா), எஸ்.கே.ஸாலிஹ் (தாருத்திப்யான் நெட்வர்க்), கொள்முதல் பொறுப்பாளர்களான எம்.ஏ.காழி அலாவுத்தீன் (TAS), எம்.எம்.முஜாஹித் அலீ, ‘கல்ஃப்’ செய்யித் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், துவக்கமாக - களப்பணியின்போதான தமது அனுபவங்களை களப்பணியாளர்கள் பகிர்ந்துகொண்டனர்.
ஒற்றுமை நீடிக்க வலியுறுத்தல்:
அவர்களை உற்சாகப்படுத்தியும், நன்றி தெரிவித்தும், தலைவர் - முன்னிலை வகித்தோர் கருத்துரையாற்றினர். கருத்து வேறுபாடுகள் பல இருந்தபோதிலும், பொதுப்பணி என்றதும் அவற்றையெல்லாம் மறந்து, இணைந்து களப்பணியாற்றியதை நினைவுகூர்ந்த அவர்கள், இந்த ஒற்றுமை எந்நாளும் நீடிக்க வேண்டும் என்று கூறினர்.
நிதி குறித்த தகவல்:
பெறப்பட்ட நிவாரணப் பொருட்கள், மொத்த நிதி, செலவழிக்கப்பட்ட தொகைகள் குறித்து ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் விளக்கிப் பேசினார்.
மொத்தமாக சுமார் 31 லட்சம் ரூபாய் திரட்டப்பட்டுள்ளதாகவும், சுமார் 12 லட்சம் ரூபாய் வரை நிவாரணப் பொருட்கள் கொள்முதலுக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய தொகையைக் கொண்டு கடலூர் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களிலும், காயல்பட்டினத்திலும் குடியிருப்புகளை இழந்தவர்களுக்கு மீள்குடியமர்வுக்கு ஏற்ற வகையில் வீடுகளை அமைத்துக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சான்றிதழ்கள்:
பின்னர், தன்னார்வக் களப்பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டது. நன்றியுரை, துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரணக் கூட்டமைப்பிற்கு அலுவலகமாக பெரிய நெசவுத் தெருவிலுள்ள தனது இல்லத்தை அளித்த எஸ்.இப்னு ஸஊத், திரட்டப்பட்ட நிவாரணப் பொருட்களைப் பிரித்து வகைப்படுத்திட - வாடகை எதுவுமின்றி சுமார் 12 நாட்கள் அளித்த ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் நிர்வாகம், மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்றம், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி, தஃவா சென்டர் ஆகிய நிறுவனங்களுக்கும்,
திருச்சியில் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களையும் - காயல்பட்டினத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட பொருட்களையும் வைத்து வகைப்படுத்திடுவதற்காக தனது “ரோஷன் திருமண மண்டப”த்தை அளித்த அதன் உரிமையாளருக்கும் இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட, அனைவரும் தக்பீர் முழக்கத்துடன் அதை வரவேற்றமை குறிப்பிடத்தக்கது. குழுப்படம் பதிவு செய்யப்பட்ட பின், அனைவரும் திரும்பிச் சென்றனர்.
செய்தியாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்
தகவல்களுள் உதவி:
M.M.முஜாஹித் அலீ
M.A.காழி அலாவுத்தீன் (TAS)
படங்களுள் உதவி:
M.A.K.ஜைனுல் ஆப்தீன்
காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரணக் கூட்டமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |