எழுத்து மேடை மையம், தமிழ் நாடு அமைப்பின் சார்பில் நகரில் தொடர்ந்து ஆவணப்பட திரையிடல்களும் அதையொட்டிய விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.
இம்மாதத்திற்கான திரையிடல் நிகழ்வு கடந்த புதன் கிழமை அன்று (டிசம்பர் 23) காலை 10:30 மணிக்கு நகரின் பிரதான சாலையில் உள்ள துஃபைல் வணிக வளாகத்தில் உள்ள ஹனியா சிற்றரங்கில் நடைபெற்றது.
இதில் பிரபல ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன் எழுதி, இயக்கிய “என் பெயர் பாலாறு“ ஆவணப்படம் திரையிடப்பட்டது.
முன்னதாக படத்தின் இயக்குனர் பற்றி சிறு அறிமுகக்குறிப்பும் தரப்பட்டது. மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சாளை பஷீர் அறிமுகத்தை வழங்கினார்.
பாலாறு நதியானது கர்நாடகத்தில் தோன்றி ஆந்திரத்தை கடந்து வட தமிழகத்தின் வேலூர் , திருவண்ணாமலை , சென்னை , செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களின் குடிநீர் உள்ளிட்ட வாழ்வாதார தேவைகளை நிறைவு செய்து கல்பாக்கம் அருகே உள்ள வாயலூரில் வங்காள விரிகுடாவில் கலக்கின்றது .
தோல் தொழிற்சாலைகளின் அமிலக் கழிவுகள் வெளியேறல் , நகர மயமாக்கத்தின் பாய்ச்சலின் விளைவாக பெருகும் நில வணிகமும் பெருந்தொழில் நிறுவனங்களும் அதைத் தொடர்ந்து வரும் மணல் கொள்ளை நீர் கொள்ளை போன்றவற்றின் வழியாக பாலாறு கொலை செய்யப்படுவதை இந்த ஆவணப்படம் விரிவாக பதிவுசெய்கின்றது.
வெறும் ஒரு நதியின் இறப்பாக இதை சுருக்கிப்பார்க்காமல் அதன் உடன் விளைவாக எழும் சமூக பண்பாட்டு எதிர்விளைவுகளையும் கவனப்படுத்தியுள்ளதுதான் இந்த ஆவணப்படத்தின் சிறப்பம்சம்.
திரையிடலுக்குப்பிறகு பார்வையாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் மன்னார் வளைகுடா, தாமிரபரணி நதியின் முகத்துவாரம் போன்ற நமது பகுதியின் மிகப்பெரும் நீர் நிலைகளில் கொக்கோ கோலா, வி,வி.மினரல்ஸ், டி.சி.டபிள்யூ வேதியியல் தொழிற்சாலை உள்ளிட்ட பெரும் தொழிற்சாலைகள் அடிக்கும் நீர் கொள்ளைகளையும், சட்டத்திற்கும் சூழலுக்கும் எதிரான கழிவு நீர் வெளியேற்றத்தையும் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
அத்துடன் வீடு கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஆற்று மணலுக்கு மாற்றாக கருங்கற் ஜல்லி தூள், M – SAND என்றழைக்கப்படும் சலித்த அல்லது தூள் செம்மண் போன்றவற்றை பயன்படுத்தலாம், கேரளாவில் சூழலுக்கு உகந்த எளிய நிலைத்து நிற்கக் கூடிய மரபு வழி கட்டிடக்கலை முறை கடைபிடிக்கப்படுகின்றது, விரும்பும் கட்டிடக்கலைஞர்களுக்கும் கட்டுமான வினைஞர்களுக்கும் இந்த துறையில் திருஸ்ஸூரில் உள்ள லாரி பேக்கர் பயிலகத்தில் இதற்கான இலவச பயிற்சியை பெறலாம் போன்ற தகவல்களும் விவாதத்தின் போது பரிமாறப்பட்டது .
சூழலுக்கு உகந்த, இயற்கையை சுரண்டாத எளிய அழகிய கட்டிடக்கலை முறை தொடர்பாக நமதூரின் கட்டிடத்தொழில் முனைவோருக்கு ஒரு பயிலரங்கு எற்பாடு செய்ய வேண்டும் எனவும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
இறுதியாக நன்றி நவிலலுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. |