காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
டிசம்பர் 29, 2001 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 217]
சனி, டிசம்பர் 29, 2001
சட்டமன்ற குழுவிடம் காயல் பிரதிநிதிகள் கோரிக்கை!
செய்தி: மாஸ்டர் கம்ப்யூட்டர்
பொன்னன்குறிச்சி கூட்டு குடிநீர் திட்டம், நல்லூர் சாலையை அகலப்படுத்துவது சட்டமன்ற குழுவிடம் காயல்பட்டணம் பிரதிநிதிகள் கோரிக்கை.
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு அரசு கொரடா நரசிம்மன் தலைமையில் தூத்துக்குடிக்கு வருகை தந்தது. அது சமயம் காயல்பட்டணம் நகர அ.இ.அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.காதிரி தலைமையில் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் பொருப்பாளர் காயல் மகபூப், நகர காங்கிரஸ் துணை தலைவர் ஷாஜஹான், ஏ.ஆர்.ஜமால், பாலப்பா செய்யது அஹமது, கவுன்சிலர் கண்ணன், ஆசிரியர் சுப்ரமணியன், பி.மதியழகன் ஆகியோர் அடங்கிய தூதுக்குழு நேரில் சென்று மனு அளித்தனர்.
மனுவில் காயல்பட்டணம், ஆறுமுகநேரி, ஆத்தூர், திருச்செந்தூர் உள்ளடக்கிய சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள 2 லட்சம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ரூபாய் 13 கோடியே 70 லட்சம் செலவில் ஸ்ரீவைகுண்டம் அணையை அடுத்துள்ள பொன்னன்குறிச்சியிலிருந்து குழாய் மூலம் ஆத்தூர் நீரேற்றும் நிலையத்திற்கு குடிநீர் கொண்டுவரும் திட்டம் தமிழக அரசால் கொண்டுவரப்பட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் டெண்டர் விடப்பட்டு சென்ற ஆண்டே அடிகல்லும் நாட்டப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்கப்படவில்லை. தற்போது விசாரித்ததில் மறு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மறு டெண்டர் விடப்பட்டால் தான் பணிகள் தொடங்கும் என கூறுகின்றனர். 2 லட்சம் மக்களுக்கு பயனளிக்கும் இந்த திட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்றி தர இக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்செந்தூர் - திருநெல்வேலி நெடுங்சாலை வழித்தடத்தில் உள்ள நல்லூர் சாலை மிக குறுகலாகவும் போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக உள்ளது. இதனால் திருச்செந்தூர் - திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்துகள் இச்சாலை வழியே செல்லாமல் மாற்று பாதையில் செல்வதால் காயல்பட்டணம், ஆறுமுகநேரியை சார்ந்த 1 லட்சம் பயணிகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். சாலை குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. இச்சாலையை அகலப்படுத்தி சீரமைக்க ரூ 1 கோடியே 20 லட்சம் மதிப்பீடு தயாரிக்கப்பட்டும் அப்பணி இதுவரை செயல்படுத்தபடவில்லை. எனவே மிக முக்கியமான இச்சாலையை அகலப்படுத்தி சீரமைத்து தர இக்குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
காயல்பட்டணம் பேரூந்து நிலைய வளாகத்தில் உள்ள ஒரு ஏக்கர் 44 செண்ட் நிலத்தில் மிகச்சிறிய இடத்தில் மட்டுமே கால்நடை மருந்தகம் அமைந்துள்ளது. மற்ற இடங்கள் வீணாக கிடக்கின்றன. எனவே பேரூராட்சியால் நன்கொடை வழங்கப்பட்ட நிலத்தில் 7 செண்ட் நிலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் 15 செண்ட் நிலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கும் 60 செண்ட் நிலம் பேரூந்து நிலயத்திற்கும் 2 செண்ட் நிலம் பொது நூலகத்திற்கும் மீதமுள்ள இடங்கள் கால்நடை மருந்தகத்திற்கும் ஒதுக்கி 1990ல் காயல்பட்டணம் பேரூராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தது. பேரூந்து நிலையமும், பொது நூலகமும் செயல்படுகின்றன. ஆனால் மின்வாரியமும், சார்பதிவாளர் அலுவலகமும் அமைக்க முடியவில்லை. எனவே கால்நடை துறை பெயரில் அமைந்துள்ள அந்த இடத்தை மேற்குறிப்பிட்டவாறு பிரிவினை செய்து மின்வாரியமும், சார்பதிவாளர் அலுவலகமும் அந்த இடத்தில் அமைத்து தர இக்குழுவை வேண்டுகிறது.
|