காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் கீழப்பகுதியில் அமைந்துள்ளது மத்ரஸா கட்டிடம். பெருநாள் தொழுகை - பிரமுகர்களின் மரணங்களின்போது ஜனாஸா தொழுகை நடைபெறும் நேரங்களில், இந்த வளாகம் உட்பட பள்ளியின் அனைத்துப் பகுதிகளும் நிரம்பிக் காட்சியளிக்கும்.
[படங்கள்: கோப்பு]
கடந்த சில ஆண்டுகளாக, இக்கட்டிட வளாகம் மிகவும் பழுதடைந்து, சிறு மழைக்கும் தாங்காமல், எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையிலுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு, அப்பகுதியை இடித்தகற்றி, 23 லட்சம் ரூபாய் செலவு மதிப்பீட்டில் புதுப்பித்துக் கட்ட - பொதுக்குழு ஒப்புதலுடன் பள்ளி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இதற்குத் தேவையான செலவுத் தொகைக்கு, மஹல்லா ஜமாஅத்தினர் மற்றும் இத்திட்டத்தில் ஆர்வப்படும் அனைவரின் பொருளாதார பங்களிப்பை விரைவாக எதிர்பார்ப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த - பள்ளி நிர்வாகத்தின் வேண்டுகோள் வருமாறு:-
[படத்தைப் பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!]
பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.
நலம், பெரிதும் வேண்டி விரும்புவதும் அதுவே. நிற்க, தங்களின் மேலான கவனத்திற்கு அறியத் தருவதாவது:-
நம் பள்ளியின் கீழ்ப்புறம் உள்ள மத்ரஸா கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளதை தாங்கள் யாவரும் நன்கறிவீர்கள். சிறிய மழைத் தூறல் ஏற்பட்டாலும் கூட மேலிருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது.
மத்ரஸா கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிதாகக் கட்ட வேண்டும் என - 23.09.2012 அன்று நடைபெற்ற நம் பள்ளியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், எவ்வித பொருளாதார முன்னேற்றமும் இன்றி, பழைய நிலையே நீடித்து வருவதையறிந்த முன்னாள் நிர்வாகிகள், இதுகுறித்து அக்கறை எடுத்து, நம் மஹல்லாவாசிகள் அனைவரும் தவறாமல் ஒன்றுகூடம் இரண்டு பெருநாட்களின்போதும் ஒவ்வொரு வருடமும் எடுத்து வைத்துள்ளபோதிலும், நம் மஹல்லா மக்களிடமிருந்து போதிய பொருளாதார ஒத்துழைப்பு வந்த பாடில்லை.
எனவே, புதிய நிர்வாகிகள் சென்ற ரமழான் நோன்பில் மீண்டும் இதுகுறித்து அறிவிப்புச் செய்ததுடன், ஊரிலிருக்கும் மஹல்லாவாசிகளின் முகவரிகளுக்கு வேண்டுகோள் கடிதமும் தரப்பட்டது. இருந்தும், அதில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் எதுவும் இல்லை.
ஆகவே, கடந்த ஹஜ் பெருநாளன்று - தொழுகைக்கு வந்தவர்களிடம் நிர்வாகத்தின் சார்பில் - தங்கள் பங்களிப்பை நேரில் தெரிவிக்கும்படி வேண்டியபோது, பலரும் தமது பங்களிப்பைத் தெரிவித்து, அன்று ஒருநாளில் மட்டும் ரூ. 5.85 லட்சம் வசூல் எழுதியுள்ளார்கள். தற்போது மத்ரஸா வகைக்கு ரூ. 4 லட்சம் வரை கையிருப்பு உள்ளது. மொத்தத் தொகையைக் கூட்டினாலும் உத்தேச மதிப்பீட்டுத் தொகை 23 லட்சத்தில் பாதியைக் கூட தொட முடியவில்லை.
ஆகவே, வெளிநாடுகளில் இருக்கும் தாங்கள், நமது மஹல்லாவாசிகளிடம் அணுகி, நமது புராதன மத்ரஸா மீண்டும் புதுப்பொலிவுடன் உருவாகிட வேண்டும் என்ற நமது எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுத்திட, கூடுதலான பொருளுதவியைப் பெற்றுத் தருமாறும், தங்களின் மேலான பங்களிப்பையும் தாராளமாக வழங்கிடுமாறும் அன்புடன் வேண்டுகிறோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ் நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டாலும், ஸஹாபாக்கள், வலிமார்கள் மற்றும் நம் பள்ளியின் ஸ்தாபகர்கள் பொருட்டாலும் நமது ஹலாலான நாட்ட தேட்டங்களை நிறைவேற்றித் தந்தருள் புரிவானாக, ஆமீன் - வஸ்ஸலாம்.
அன்புள்ள,
(--ஒப்பம்)
(K.M.செய்யித் அஹ்மத்,
இணைச் செயலாளர், குருவித்துறைப் பள்ளி
தொடர்பு எண்: +91 94434 82800)
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருவித்துறைப் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |