இலங்கை நாட்டின் வெளிநாடுகளுடனான தங்கம் மற்றும் மாணிக்க வியாபாரத்தில் நம்பிக்கை, குடும்ப உறவுகளின் பங்கு (Trade, Trust and Social Relations in Transnational Trade) குறித்து ஆய்வு செய்து வரும், அமெரிக்க நாட்டின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் மானுடவியல் (ANTHROPOLOGY) ஆய்வாளர் திருமதி நேத்ரா சமரவிக்ரம - டிசம்பர் 24, 25 தேதிகளில் காயல்பட்டினம் வந்திருந்தார்.
நேத்ரா - அமெரிக்காவில் உள்ள இதாகா கல்லூரியில் பி.ஏ. (அரசியல்) பட்டம் பெற்றவர். மேலும், டல்ஹௌசி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. (மானுடவியல்) பட்டமும் இவர் பெற்றுள்ளார்.
இந்த வருகையின் போது, காயல்பட்டினத்தில் இருந்து, பல ஆண்டுகளாக - இலங்கையோடு - குறிப்பாக, அந்நாட்டின் பேருவளை போன்ற பகுதிகளோடு - தொடர்பு கொண்டு, மாணிக்க வியாபாரம் செய்து வரும் காயல் குடும்பத்தினரை சந்தித்து, தனது ஆய்வுக்கான தகவல்களை நேத்ரா சேகரித்துள்ளார்.
அதிகாரப்பூர்வமாக இவ்வாண்டு ஜூலை 15 அன்று துவங்கிய இவரது ஆய்வு, அடுத்தாண்டு (2016) இறுதியில் நிறைவுற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் - இலங்கை, இந்தியா, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட பல பகுதிகளில், தனது ஆய்வு தொடர்பாக பலரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக, காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் ஆசிரியர் குழுவுடனான கலந்துரையாடலில் நேத்ரா தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, சமூக ஆர்வலரும், தங்கம் ஆபரணங்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனம் நடத்துபவருமான குளம் முஹம்மது தம்பி உடனிருந்தார்.
ஆய்வாளர் நேத்ரா - காயல்பட்டினம் வர இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் - காயல்பட்டணம்.காம் இணையதள ஆசிரியர் குழுவுடனான சந்திப்பிற்கு - பிரபல ஆவணப்பட இயக்குனர் கோம்பை எஸ்.அன்வர் மற்றும் காவாலங்கா ஆகியோர் உதவி புரிந்தனர்.
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 01:03 / 02.01.2016.]
[செய்தி திருத்தப்பட்டது @ 12:00 pm / 15.01.2016.] |