காயல்பட்டினம் சொளுக்கார் தெருவில், மவ்லானா அப்பா சின்ன கல் தைக்காவில் இயங்கி வரும் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரியில், வெளியூர் மாணவியர் தங்கிப் பயில்வதற்காக விடுதி வசதி உள்ளது. வெளியூர் மாணவியர் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்ததையடுத்து மாணவியர் தங்கும் விடுதியை விரிவாக்கிட கல்லூரி நிர்வாகம் தீர்மானித்ததன் அடிப்படையில், B Block மாணவியர் விடுதி கட்டிடத்திற்கு, 20.06.2014. வெள்ளிக்கிழமையன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
முன்னிலை வகித்த நகரப் பிரமுகர்கள் பலர் தம் கைகளால் எடுத்துக் கொடுக்க, புகாரீ மவ்லானா - கல்லூரியின் மாணவியர் விடுதி பி ப்ளாக் கட்டிடப் பணிக்கான அடிக்கல் நாட்ட, கட்டிடப் பணிகள் துவங்கின.
தற்போது, ‘B’ Block மாணவியர் விடுதி கட்டி முடிக்கப்பட்டுள்ளதையடுத்து, அதன் திறப்பு விழா, 31.12.2015. வியாழக்கிழமையன்று 17.00 மணியளவில், கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவர் வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினரின் துஆ பிரார்த்தனையுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் ஹாஃபிழ் எஸ்.எச்.ஷேக் தாவூத் கிராஅத் ஓத, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ வரவேற்புரையாற்றினார்.
அனைவரும் எழுந்து நின்று, “லுத்பில் இலாஹி” எனும் இறைவேண்டற்பாவைப் பாட, அதன் தொடர்ச்சியாக - முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, கல்லூரியின் செயல்பாடுகள், மாணவியர் விடுதி விரிவாக்கத்திற்கான அவசியம், கட்டிடப் பணிகள் குறித்த தகவல்களை விளக்கி சுருக்கவுரையாற்றினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - இலங்கை புத்தளம் அல்ஜாமிஉஅத்துல் அஸீஸிய்யா நிறுவனர் அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் மவ்லானா குஷ்ஹாலி - புதிய கட்டிடத்திற்கான திறப்பு விழா கல்வெட்டைத் திறந்து வைத்தார்.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்களான கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் நன்றி கூற, மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ துஆவைத் தொடர்ந்து, ஸலாம் பைத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இவ்விழாவில், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரியின் ஆசிரியையர், ஆண் - பெண் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
ஏற்கனவே உள்ள ‘A’ Block மாணவியர் விடுதி, தற்போது திறக்கப்பட்டுள்ள ‘B’ Block விடுதி ஆகிய இரண்டிலும் மொத்தமாக 75 மாணவியர் வரை தங்கிப் பயில வசதிகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|