நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட காயல்பட்டினம் பிரதான வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று 10.30 மணியளவில் துவங்கி, 17.30 மணி வரை நடைபெற்றது.
நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் திருவேங்கட ராமலிங்கம் தலைமையில் நடைபெற்று வரும் இப்பணியின்போது, நெடுஞ்சாலைத் துறை இளநிலை பொறியாளர் முத்துராஜ், சாலை ஆய்வாளர் வசந்தி, திருச்செந்தூர் வட்டாட்சியர் வெங்கடாச்சலம், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜன், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், காயல்பட்டினம் தென்பாகம் கிராம நிர்வாக அலுவலர் ஃப்ரான்சிஸ் சேவியர் ஆகியோர் உடனிருந்தனர்.
பிரதான வீதியில் பெரும்பாலும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. அவற்றுள், ஆக்கிரமிப்பின் கீழுள்ள பகுதிகள் 2 பொக்லைன் இயந்திரங்கள் துணையுடன் அகற்றப்பட்டன.
சில கட்டிடங்களின் முன்பகுதியை இடித்து அகற்றுகையில், சில ஆண்டுகளுக்கு முன் அச்சுவர்களில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் அனைத்தும் தெளிவாகக் காணக் கிடைத்தன. ஒருவரைப் பார்த்து ஒருவர் தம் வசதிக்கேற்ப கட்டிடங்களை மேலும் மேலும் முன்னோக்கிக் கட்டிக்கொண்டு வந்ததே இதுபோன்ற நடவடிக்கைகளுக்குக் காரணம் என திரண்டிருந்த பொதுமக்கள் பேசுவதைக் கேட்க முடிந்தது.
சில கட்டிடங்களின் உரிமையாளர்கள், தம் கட்டிடங்களின் ஆக்கிரமிப்புகளை தாங்களே இடித்து அகற்றிக்கொள்வதாகவும், பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்ற வேண்டாம் என்றும் கேட்டபோது, தற்போதைய ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகள் நிறைவுறுவதற்கு முன்பாக அவற்றை இடித்துக்கொள்ளுமாறும், தவறினால், நெடுஞ்சாலைத் துறை அகற்றும் என்றும் அதிகாரிகள் அவர்களிடம் கூறினர்.
காயல்பட்டினம் அஞ்சல் நிலையம் அருகிலிருந்த பேருந்து பயணியர் தரிப்பிடமும் இடித்தகற்றப்பட்டது.
அதனருகிலிருந்த ஓர் அரசியல் கட்சியின் கொடிக்கம்பம் அக்கட்சியினரால் முன்னரே அகற்றப்பட்டிருந்தது. அகற்றப்படாத இதர கம்பங்கள் குறித்து வினவியபோது, மாவட்ட ஆட்சியரின் உத்தரவு இருந்தால் மட்டுமே அவற்றை அகற்ற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிக்கப்பட்டதால் இடித்தகற்றப்பட்ட சுவர்களையும் தாண்டி சாலையில் இருந்த - பல ஆண்டுகளுக்கு முன்பே உயர்ந்து வளர்ந்துள்ள வேப்ப மரங்கள் குறித்து வினவியபோது, அதை அகற்ற தங்களுக்கு உத்தரவு இல்லை என்று அவர்கள் கூறினர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவயதையறிந்து, சில கட்டிடங்களைச் சேர்ந்தவர்கள் தம் கட்டி தாமாகவே முன்வந்து இடித்தகற்றியுள்ளனர்.
இப்பணியையொட்டி, மின்வாரியத்தினரும், காவல்துறையினரும் முன்னெச்சரிக்கையாக நிகழ்விடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். நகர் முழுக்க மின் வினியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. காயல்பட்டினம் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவின் பேரில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், அந்த வரிசையிலேயே இப்பணியும் நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயல்பட்டினத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 15:07 / 03.01.2016.] |