காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சொந்த வாகனத்தில் குடும்பத்துடன் கேரளா சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயமுற்றனர். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் கீழ நெய்னார் தெருவைச் சேர்ந்த முஜீப் என்பவர், 02.01.2016. சனிக்கிழமையன்று தன் குடும்பத்தினருடன் கேரள மாநிலம் கொல்லம் நகருக்கு சொந்த வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். காலை சுமார் 11 மணியளவில் கேரள மாநிலம் - புனலூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த அரசுப் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இவர்கள் பயணித்த கார் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இதில், வண்டியை ஓட்டிச் சென்ற முஜீபும், உடன் சென்ற - ஷாஹுல் ஹமீத் என்பவரின் மகளான 2 வயது பெண் குழந்தையும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதர 3 பேர் படுகாயமுற்றனர்.
தகவலறிந்த - கேரள மாநில SDPI கட்சி மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள், நிகழ்விடம் விரைந்து சென்று, படுகாயமுற்ற மூவரையும் SDPI ஆம்புலன்ஸ் வாகனத்தில் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து, தேவையான உதவிப் பணிகளையும் செய்ததோடு, காயல்பட்டினம் நிர்வாகிகளுடன் தொடர்பிலிருந்தவாறு - விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்திற்கு முறைப்படி தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
உயிரிழந்த இருவரின் உடல்களும் கேரள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, 03.01.2016. ஞாயிற்றுக்கிழமையன்று காயல்பட்டினம் கொண்டு வரப்பட்டது. SDPI, PFI நிர்வாகிகள், வழக்கறிஞர் ஒருவர் ஆகியோர் பிரேதங்களைக் கொண்டு வந்து, காயல்பட்டினத்திலுள்ள அவர்களது குடும்பத்தினரிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.
அன்று மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
SDPI, PFI தூத்துக்குடி மாவட்ட - காயல்பட்டினம் நகர நிர்வாகிகள், அங்கத்தினர் உள்ளிட்ட பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு, மரணித்தவர்களுக்காக பிரார்த்தனை செய்தனர்.
PFI / SDPI தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 09:10 / 05.01.2016.] |