காயல்பட்டினத்தில் அண்மையில் பெய்த தொடர் கனமழை காரணமாக காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலை உள்ளிட்ட பெரும்பாலான சாலைகள் சேதமுற்றுள்ளதோடு, மழை நீர் தேங்கி - போக்குவரத்திற்கு இடைஞ்சலாகவும், விபத்துகளை ஏற்படுத்தும் அச்சத்தை ஊட்டுவதாகவும் உள்ளன.
இவற்றைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில், 18.12.2015. அன்று, காயல்பட்டினம் நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்த குழுவினர், சேதமுற்றுள்ள சாலைகளையும், மழைநீர்த் தேக்கங்களையும் நேரில் பார்வையிட வருமாறு கோரினர்.
அதனடிப்படையில், அன்று மாலையில் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜன், பொருத்துநர் நிஸார் உடன் வருகை தந்து, ஸீ-கஸ்டம்ஸ் சாலை, அப்பாபள்ளித் தெரு, தீவுத்தெரு, முத்துவாப்பா தைக்கா தெரு, சொளுக்கார் தெரு, கொச்சியார் தெரு உள்ளிட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார்.
பின்னர், அழைப்பின் பேரில் இளைஞர் ஐக்கிய முன்னணியின் புகாரி நினைவு நூலக வளாகத்திற்கு வந்தார். அங்கு, மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி, இளைஞர் ஐக்கிய முன்னணியின் செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் கோரிக்கை மனு அளித்தார்.
குழுவினரிடம் பேசிய ஆணையர், மழைநீர் வழிந்தோடும் அமைப்பிலுள்ள பகுதிகளில் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு வடிகால் அமைக்கவும், கொச்சியார் தெரு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை மோட்டார் பம்ப் செட் மூலம் உறிஞ்சி கடலில் விடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
தீவுத்தெருவில், ஈக்கியப்பா தைக்காவையொட்டி அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி முற்றிலும் பழுதடைந்துள்ளதால், அதைப் புதிதாகக் கட்ட முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவ்வாறு செய்யப்படும்போது, அப்பகுதியில் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பி.வி.சி. குடிநீர் வினியோகக் குழாய்களை அகற்றிவிட்டு, இரும்புக் குழாய்களை அமைத்து, அடிக்கடி அங்கு உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதைத் தவிர்க்க ஆவன செய்வதாகவும் கூறினார்.
இளைஞர் ஐக்கிய முன்னணியின் தலைவர் எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டீ.எம்.), துணைத்தலைவர் நஹ்வீ எம்.இ.அஹ்மத் முஹ்யித்தீன், இணைச் செயலாளர்களான மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ, எஸ்.கே.ஸாலிஹ், பொதுநலத்துறை செயலாளர்களான கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப், குளம் எம்.ஐ.மூஸா நெய்னா, எம்.ஏ.கே.ஜைனுல் ஆப்தீன், அலுவலகப் பொறுப்பாளர் கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் உள்ளிட்ட நிர்வாகிகளும், என்.டீ.பாதுல் அஸ்ஹப், எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், எஸ்.ஏ.காஜா, ஏ.எல்.நிஜார், செய்யித் முஹம்மத், எஸ்.ஏ.சி.ஸூஃபீ ஹுஸைன் உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த பிரமுகர்களும் இதன்போது உடனிருந்தனர்.
முன்னதாக, 18.12.2015. வெள்ளிக்கிழமையன்று காலையில், காயல்பட்டினம் வந்திருந்த திருச்செந்தூர் வட்டாட்சியரையும் இளைஞர் ஐக்கிய முன்னணியின் குழுவினர் சந்தித்து முறையிட்டமை குறிப்பிடத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக, 19.12.2015. அன்று பொக்லைன் இயந்திரம் கொண்டு, தேங்கிய மழை நீர் வழிந்தோடுவதற்காக, ஸீ-கஸ்டம்ஸ் சாலை, தீவுத் தெரு, அப்பாபள்ளித் தெரு முனை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் வடிகால் வெட்டி விடப்பட்டுள்ளது. அவ்வழியே மழை நீர் கீரிக்குளத்தையடைந்து கடலில் கலக்கிறது.
மோட்டார் பம்ப் செட் கொண்டு தாழ்வான பகுதிகளில் தேங்கியிருக்கும் மழை நீரை உறிஞ்சும் பணி இதுவரை துவக்கப்படவில்லை.
YUF தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |