நடப்பு கல்வியாண்டில், 10ஆம் - 12ஆம் வகுப்பு தேர்வெழுதவுள்ள மாணவ-மாணவியருக்கு தேர்வு கால வழிகாட்டல்களை வழங்கும் நோக்குடன், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில் பிரசுரம் அச்சிட்டு வினியோகிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயலர்கள் அனைவருக்கும் - இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகிகளின் அன்பான அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
காயல் நகர மாணவ-மாணவியரின் கல்வி முன்னேற்றத்திற்காகவும், வளமான எதிர்காலம் அமைந்திட வேண்டுமென்பதற்காகவும் கடந்த பத்தாண்டுகளாக பல்வேறு திட்டங்களை வகுத்து செயலாற்றி வருகிறது இக்ராஃ கல்விச் சங்கம்.
தமிழகத்தில் நடைபெறும் 10ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப் பொதுத்தேர்வை முன்னிட்டு, வருடம் தோறும் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு ''கல்வி வழிகாட்டல் பயிற்சி வகுப்பு'' உள்ளூர் தொலைக் காட்சி (கேபிள் டிவி) மூலம் ஒளி பரப்பி வந்தது இக்ராஃ கல்விச் சங்கம். ஆனால் தற்போது உள்ளூர் தொலைகாட்சி நிறுவனங்கள் செயல்படாத நிலையுள்ளதால் நடப்பாண்டு அத்தகைய ஒளிபரப்பை செய்திட இயலவில்லை.
எனவே இது குறித்து 12-12-2015 அன்று இக்ராஃ கூட்டிய ''நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டத்தில்'' ஆலோசிக்கப்பட்டது. அப்போது கருத்து தெரிவித்த தலைமையாசிரியர்கள், '' 10 ஆம் வகுப்பு , 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியரை, முதல்நிலை, நடுநிலை, தாழ்நிலை (Above average, Average, Below average) என மூன்று வகைகளாகப் பிரித்தறிந்து, அவர்களுக்கு தனித்தனியே பயிற்சிகள் (Special coaching) வழங்கப்பட வேண்டும். இந்தப் பயிற்சிக்காக மிகவும் தேர்ந்த ஆசிரியர்களைக்கொண்டு நடத்தப்படவேண்டும். இதனால் தாழ்நிலை (Below average) மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முதல்நிலை (Above average) மாணவர்களும் கூடுதல் பயன்பெறுவர். தாழ்நிலை மாணவர்களுக்கு, குறைந்தபட்சம் அவர்கள் ஃபெயில் ஆகாதிருப்பதற்குத் தேவையான materials வழங்கப்பட வேண்டும்'' என்ற ஆலோசனையினை வழங்கினர்.
அதனடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் பள்ளி விடுமுறையின் போது மேற்கண்ட கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியினை (அனைத்து பாடங்களுக்கும்) நடத்திட இக்ராஃ கல்விச் சங்கம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த டிசம்பர் இறுதியில் வழமையான கூடுதல் விடுமுறைகள் இல்லாததாலும், அளிக்கப்பட்ட விடுமுறைக் காலங்களில் கூட , (மாவட்ட கல்வி அலுவலக உத்தரவுப்படி) 10ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு (special class ) பள்ளியில் வைக்கப்பட்டதாலும், இக்ராஃ ஏற்பாடு செய்தபடி கல்வி வழிகாட்டு நிகழ்ச்சிகளை நடத்திட இயலவில்லை.
இந்நிலையில் அரசுப் பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களுக்கு, தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி என்பது குறித்தும், தேர்வு அறையில் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் ''புதிய தலைமுறை கல்வி'' வார இதழில் (08 பிப்ரவரி 2016) திரு. பொன் தனசேகரன் அவர்களாலும், திரு வெ.ஸ்ரீதரன் அவர்களாலும் வழங்கப்பட்டிருந்த அருமையான ஆலோசனைகள் எங்களை கவர்ந்தது.
எதிர்பார்த்ததை விட மிக அழகாக அமைந்திருந்த அந்த ஆக்கத்தைத் உடனே சேகரித்து இக்ராஃ கல்விச் சங்கம் சார்பாக தனி பிரசுரமாக அச்சிட்டு, நடப்பாண்டு அரசுப் பொதுத்தேர்வைச் சந்திக்கவுள்ள நமதூரின் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, மற்றும் காயல்பட்டினம் - ஆறுமுகநேரி (கே.ஏ.) மேனிலைப்பள்ளி ஆகிய 8 பள்ளிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ - மாணவியருக்கு, அவரவர் பள்ளிகளுக்கே நேரடியாகச் சென்று அவற்றை பள்ளித் தலைமையாசிரியரிடம் வழங்கி வினியோகிக்கப்பட்டுள்ளது.
இக்ராஃ வெளியிட்டுள்ள இந்த பிரசுரம் மிகுந்த பயனளிக்கக் கூடியதாகும் என ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டனர்.அந்தப் பிரசுரம் இதோ:
இப்பிரசுரத்தைப் பார்க்கும் பெற்றோர் மற்றும் கல்வி ஆர்வலர்கள், நடப்பாண்டு அரசுப் பொதுத் தேர்வு எழுதவுள்ள உங்கள் மக்களுக்கு இதனடிப்படையில் வழிகாட்டல்களை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நமதூர் மாணவ சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக நாம் மேற்கொண்டு வரும் அனைத்து நல்ல நடவடிக்கைகளையும் கருணையுள்ள அல்லாஹ் தனதருளால் வெற்றியாக்கித் தந்து, நம் மாணவர்களை மாநில - மாவட்ட அளவில் சாதனையாளர்களாகத் திகழச் செய்வானாக, ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
N.S.E.மஹ்மூது
(மக்கள் தொடர்பாளர் - இக்ராஃ கல்விச் சங்கம்)
KCGC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|